சீனிவாசநல்லூர் - குரங்கு நாதர் கோயில்

இடையில் கிடைத்த ஒரு நாளில் எங்கு செல்லலாம் என்று யோசித்து , சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில் என்று முடிவு செய்தேன்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு நான் சென்ற தமிழ் நாடு அரசு பேருந்தின் பயணம் மட்டுமே ஒரு தனி கட்டுரைக்கு வேண்டிய அளவு சாகசங்கள் கொண்டது. இருந்தாலும், அதை ஒதுக்கி விட்டு , அங்கிருந்து சீனிவாசநல்லூர் சென்ற சாகசத்தை எழுத போகிறேன்.

சீனிவாசநல்லூர் திருச்சி அருகே முசிறியில் இருந்து ஒரு 10கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காலை திண்டுக்கல்லில் இருந்து வைகையில் திருச்சி வந்து , அங்கிருந்து குளித்தலை செல்லும் பேருந்தில் ஏறி பயணம் தொடங்கியது.

கடுமையான வெயிலைவிட அந்த வெயிலில் காய்ந்து கொண்டிருந்த காவேரி பரிதாபமாக இருந்தது. ஒரு புறம் ரயில் பாதை , மறுபுறம் காவேரி என்று ரம்யமாக இருக்க வேண்டிய பயணம், வெயிலின் கடுமையில் , பேருந்தில் இருந்த மக்களின் எரிச்சலில் வெளிப்பட்டு கொண்டிருந்தது.

குளித்தலை வந்தவுடன் அங்கிருந்த ஒரு பேருந்து ஓட்டுனரை விசாரித்த போது , முசிறி சென்று அங்கிருந்து மற்றுமொரு பேருந்து ஏறி செல்லுமாறு கூறினார்.

முசிறி பேருந்தில் ஒரு சிறு பெண் - அவளைவிட சிறு குழந்தை என்று அவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தேன்.தீபிகா, அந்த பெண், அவளின் அத்தை பால்குடம் எடுப்பதை பார்க்க குளித்தலை வந்ததாக சொன்னாள். வெயிலில் பால் குடம் எடுத்து நடந்த களைப்பு முகத்தில் இருந்தாலும் நான் ஒரு பிஸ்கட் கேட்டவுடன், அதில் ஒரு சிறு துணுக்கு எடுத்து எனக்கு கொடுத்தாள்.

முசிறி வந்து காட்டு புதூர் பேருந்தில் ஏறி சீனிவாசநல்லூர் செல்லும் பயணம் தொடங்கியது. போகும் வழியில் திருஈங்கோய் மலை , சிறு வயதில், அதன் எல்லையில்லா படிக்கட்டுகளை கொதிக்கும் வெயிலில் ஏறியது ஞாபகம் வந்தது. அந்த நாள், காலையில், இரு கரையும் அணைத்து ஓடிய காவேரியில் பயந்து பயந்து குளித்ததும் ஞாபகம் வந்தது.

சீனிவாச நல்லூர் குரங்கு நாதர் கோயில் கி. பி.9ம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. முதல் முதலாய் சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று. இன்றும் ஓரளவு நல்ல முறையில் ASIஆல் பராமரிக்க பட்டு வருகிறது.

சிறு கோயில் என்றாலும் சுற்றி இருக்கும் சிற்பங்கள் சோழர்களின் கலை நுட்பத்தின் உதாரணமாக இருக்கின்றன. பல்லவ சிற்ப கலையின் பாதிப்பு தெரிந்தாலும் (பார்த்தவுடன் அர்ஜுனன் ரதம் நினைவுக்கு வந்தது). ஆனால் நிறைய வித்யாசங்கள். முக்கியமாக பல்லவர்களின் சிங்கங்கள் இல்லை.


 அதை விட முக்கியம் சோழர்களின் தக்ஷிணாமூர்த்தி , தெற்கு விமானத்தில். இப்படி ஒரு அழகான மூர்த்தி , இவ்வளவு முந்தைய காலகட்டத்தில் கண்டதில்லை. அதிலும் சுற்றியுள்ள கணங்களின் அம்சங்கள் பொறுமையாக பார்க்க வேண்டியவை.

 பிட்சாடனார் வடக்கு விமான சுவற்றில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்..
 
 துவாரபாலகர்கள் மற்றைய கோயில்களில் போல் அன்றி நேராக பாராது இருபுறமும் ஒரு புறமாக நின்று ஒரு கர்வத்துடன் பார்க்கிறார்கள்.


 சுற்று சுவற்றில் யாளி வரிசையும் ஒவ்வொரு மூலையிலும் மகர முகங்களும், அவற்றுக்கு கீழே சோழ கல்வெட்டுகளுமாக கோயில் முழுமை பெறுகிறது.

 கிழக்கு சுவற்றில் பராந்தகனின் நில நிவந்தகளின் கல்வெட்டு இருக்கிறது. பொறுமையாக எழுத்து கூட்டி வாசிக்கலாம் என்றால் வெயில் மண்டைய பிளந்தது.

இன்றும் சீனிவாசநல்லூர் மக்கள் வரும் ஒரு , இரு பேர்களையும் வரவேற்கிறார்கள். கோயில் விட்டு வந்ததும் அங்கு ஊர் கதை பேசிக் கொண்டிருந்த இரு பெண்கள் தண்ணீர் பிடித்து கொள்ள விட்டார்கள். பேருந்தும் சீனிவாசநல்லூரில் இறங்கிய பெண் திரும்ப நடந்து வரும் போது கோயில் பார்த்ததை விசாரித்து சென்றார். அங்கே நடந்து கொண்டிருந்த ஒருவர் , முன் ASI ஒரு காவலாளி போட்டு இருந்ததாகவும், இப்போது யாரும் வருவதில்லை என்றும் சொல்லி சென்றார்.

ஒரு பெட்டிக் கடையில் நன்றாக கெட்டியான மோர் குடித்து விட்டு திருச்சி பேருந்தில் ஏறினேன். ரெங்கமன்னார் அழைத்து கொண்டிருந்தார்.


1. கொடும்பாளூர் மூவர் கோயில் - http://sibipranav.blogspot.in/2011/01/blog-post.html

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...