கொடும்பாளூர் வானதி

சென்ற வாரம், மதுரைக்கு காரில் சென்று இருந்தோம். செல்லும் பொழுதே, விராலி மலைக்கு அருகில் கொடும்பாளூர் செல்லும் வழிகாட்டி ஒன்று பார்த்தேன். நேற்று அங்கிருந்து திரும்பும் பொழுது, கட்டாயம் பார்த்து வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

மதுரையில்
இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலை 45B இல் இருக்கிறது 'கொடும்பாளூர் சத்திரம்' என்னும் ஒரு சிறு கிராமம். ந்த கிராமத்தின் வழியே புதுகோட்டை செல்லும் வழியில் ஒரு 2 கிலோமீட்டர் சென்றால் வருகிறது 'கொடும்பாளூர்' கிராமம். ஒரு மாட்டு வண்டி செல்லும் அளவிற்கே உளள ஒரு பாதை, சி குடிசை வீடுகள் பாதையை ஒட்டி செல்லும் ஒரு கால்வாய், புதிதாய் விதைக்கப்பட்ட வயல்கள், இவற்றின் முடிவில் உள்ளது 9 ம் நூற்றாண்டை சேர்ந்த 'மூவர் கோவில்'.

பூதி விக்ரமகேசரியின் வரலாறு சொல்லும் கல்வெட்டு
இன்றைய கொடும்பாளூர் கிராமம் 9 ம் நூற்றாண்டில் இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி என்பவரால் ஆளபபட்டு வந்த ஒரு சிற்றரசு. இந்த பூதி விக்கிரமகேசரி முதலாம் பராந்தக சோழனின் அதிகாரத்தில் சோழ அரசில் பல விகளும் வகித்து வந்தார். அவர் எழுப்பி 'மூவர் கோவில்' இன்றைய கொடும்பாளூர் கிராமத்தில் வயல்களுக்கு நடுவில் கடந்து போன சரித்திரத்தின் நினைவாக நின்று கொண்டு இருக்கிறது. பூதி விக்கிரமகேசரி மற்றும் அவரது இரண்டு மனைவிகளின் நினைவாய் மூன்று சிறு கோவில்களாக எழுப்பப்பட்ட இந்த கோவிலில் இன்று இரண்டு மட்டுமே முழுமையாய் நின்று கொண்டு இருக்கிறது. மூன்றாவது கோவிலின் அடித்தளம் மட்டும் இருக்கிறது. கோவிலின் பிரகாரம், சுற்று கோவில்கள், கொடி கம்பம், சிலைகள் என்று எதுவும் இல்லை. கழ்வில் கிடைத்த சிலைகளும் இப்போது திருச்சி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
சோழர் வரலாறு, கொடும்பாளூர் என எல்லாவற்றையும் விட என்னை இந்த கோவிலும் கிராமமும் இழுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இருக்குவேள் பூதி விக்ரமகேசரியின் மகள் வானமாதேவி என்ற வானதி. இந்த வானதிதான் ராஜ ராஜ சோழனை மணந்து சோழ பேரரசுக்கு பட்டத்து ராணி ஆனவள். கல்கியின் 'பொன்னியின் செல்வனின்' கதாநாயகியாக வருவதும் இதே வானதிதான். என் மகளுக்கு பெயர் வைக்க காரணமாக இருந்ததும் அதே வானதிதான். அந்த வானதி இளவரசியாய் இருந்த இடத்தை எங்கள் வீட்டு இளவரசி பார்க்க வேண்டாமா?செல்லும் பாதை கொஞ்சம் கரடு முரடாய் இருந்தாலும் மூவர் கோவில் ஒரு பார்க்க வேண்டிய இடமே. கோவிலின் உள்ளே உள்ள வெற்று வெளிதான் தஞ்சை கோவிலின் ஆகாச லிங்கத்தின் முன்னோடி என்றார் இந்த இடத்தின் காப்பாளர். ஏனைய சோழர் கால சிற்ப நுட்பங்கள் பிட்சாடனர், லிங்கம் முதலியவும் காண கிடைகின்றது.கொடும்பாளூர் பெயர் காரணத்தை ஒட்டி அவ்வையின் சாபமாக ஒரு கர்ண பரம்பரை கதையும் கேட்டோம். எத்துனை அவ்வைகள் இருந்தால் இத்துனை கதைகள் கிடைக்கும் என்று எண்ணி கொண்டே சென்னை திரும்பினோம்.

மேலும் படங்கள் இங்கே
https://goo.gl/photos/DSsggYCUaowmgDjx5

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...