நடந்தாய் வாழி காவேரி! - வீராணம் ஏரி

சிட்டியும் தி.ஜாவும் 1960களின் இறுதியில் சில மாதங்களுக்கு காவேரியின் தீரங்களில் அலைந்து திரிந்து எழுதிய பயண கட்டுரைகளின் தொகுப்பே 'நடந்தாய் வாழி காவேரி!'. அது போன்று பல மாதங்களை செலவிட முடியாதெனினும் காவேரி கரைகளில் பயணிப்பது என்பது ஒரு மயக்கம். அது சொல்லவியலாதது.

இந்த வருடம் மழை நீர் பெருகி அணைகள் நிரம்பி , காவேரி எங்கும் நீர்மயம் என்று படித்த போது எப்படியேனும் ஒருமுறை சென்று பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆகஸ்ட் 11 காலை 5மணிக்கு கிளம்பினோம். அன்று சாயந்திரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை பார்க்க வேண்டி இருந்ததால் காவேரியை பார்த்து விட்டு அங்கு செல்ல வேண்டி இருந்தது.

நெய்வேலி அருகே காலை உணவு அருந்திவிட்டு வீராணம் நோக்கி விரைந்தோம். பொன்னியின் செல்வன் ஆரம்பிக்கும் வீராணம் ஏரிக்கரையில் வந்தியத்தேவன் குதிரையில் மெதுவாக வரும் காட்சி நினைவுக்கு வந்ததில் எந்த
ஆச்சர்யமும் இல்லை. வந்தியத்தேவனின் பாதையில் ஏற்கனவே பயணித்து விட்டதால் இம்முறை காவேரியின் பாதை மட்டுமே நினைவில் இருந்தது.

வீராணம் ஏரி - கடல் போல் விரிந்து கிடந்தது. சோழ நாட்டு பொறியியல் சாதனையாக வீராணமும் அதில் இருந்து பிரிவுற்று செல்லும் பல வாய்க்கால்களும் இன்றும் சான்றாய் இருக்கின்றன.

வீராணம் நீரால் நிறைந்து பரந்து விரிந்து காட்சி அளித்தது. மறு கரை தெரியாது அலை அடித்துக் கொண்டிருந்தது  விதமான மன எழுச்சியை கொடுத்தது. உலகின் பல பெரிய நீர் நிரம்பிய ஏரிகளை கண்டிருக்கிறேன். சில முறை மிச்சிகன் ஏரியின் கரையிலோ வேறு சில இடங்களில் மட்டுமே இந்த மாதிரியான ஒரு உணர்வை பெற முடிகிறது. எனினும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நீர் மேலாண்மை ஏரி என்பது இன்னமும் மகிழ்வாய் இருந்தது.

பனை மர கொடியோடு பெரும் திரை விரித்து பழுவூர் ராணி நந்தினியிடம் ஒரு கலத்தை அங்கே உருவகிப்பதில் எந்தவித தடையும் இல்லை. அத்துணை நீரின் முன் உணரும் மன அமைதி அலாதியானது.

நீரில் சில நேரம் நின்றுவிட்டு அங்கிருந்து அடுத்த இடத்திற்கு சென்றோம் - கங்கை கொண்ட சோழபுரம்.

No comments:

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...