நேற்று 'சார்பட்டா பரம்பரை' பார்த்தேன். தமிழில் வாழ்வியல் சார்ந்த, அரசியல் திரைப்படங்கள் வருவது இல்லை. நமது இயக்குனர்களும், கதை சொல்லிகளும் அரசியலை தொடக்கூடாத வஸ்துவாக பார்ப்பதன் விளைவு இது. 80களில் வந்த அரசியல் திரைப்படங்களில் பேசிய அளவிற்கு கூட இப்போது பேசப்படுவதில்லை. எல்லோருக்கும், எல்லோரை பார்த்தும் பயம்.
அதனாலேயே, ரஞ்சித் வித்தியாசப்படுகிறார். அவர் வெளிப்படையாக தனது அரசியலை பேசுகிறார். முன் வைக்கிறார். அதன் மூலம் எழும் விவாதங்களை எதிர் கொள்கிறார். அவரது படங்கள் தொடர்ச்சியாக ஒரே அரசியலை, பட்டியலினத்தவர்களின் அரசியலை பேசுகின்றன. உங்களுக்கு அவற்றுடன் வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவற்றை நீங்கள் புறக்கணிக்க முடியாது.
'அட்டகத்தி'யில் அவர் முன்வைத்த மக்களின் வாழ்வு, அதுவரை தமிழில் சொல்லப்படாத கதை. அதனாலேயே அது மிகவும் இயற்கையாகவும், புதியதாகவும் இருந்தது. இரண்டு ரஜினியின் படங்களில் அவர் நீர்த்து போனதாக சொன்னாலும், எனக்கு இரண்டுமே பிடித்துத்தான் இருந்தது. 'காலா' பேசிய அரசியலில் எந்த சமரசமும் இருக்கவில்லை.
'சார்பட்டா பரம்பரை' இந்த இரண்டையும், இதுவரை சொல்லப்படாத வாழ்க்கை களம், ரஞ்சித்தின் அரசியல், முன் வைக்கிறது. இந்த முறை, இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத அவசர நிலை காலத்தையும் எடுத்துக் கொள்கிறார்.
வடசென்னையின் கலாச்சாரமாக பல வருடங்கள் இருந்த, இன்னமும் சிறிய அளவில் இருக்கும் குத்துசண்டை போட்டிகளில், ஏழை மற்றும் தலித் ஒருவனின் வெற்றியே கதை. இதன் நடுவே அவசர நிலை காலத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டது, அதன் தொண்டர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டது, அதன் பின்னான நாட்டின் நிலை என பலவும் பேசப்படுகிறது.
ரஞ்சித் முன்வைக்கவும் அரசியல் பார்வை, கலகத்தையும் , அதன் மூலம் சமூக நகர்வையும் கொண்டுவர முயல்வது. இங்கே அவர் வெற்றிமாறன் போன்ற படைப்பாளிகளிடமிருந்து வேறுபடுகிறார். இதையே அவர் திரும்ப, திரும்ப பேசுகிறார். இந்தப் படத்தில் வெளிப்படையாக இல்லை என்றாலும், தணிகாசலம் மற்றும் அவரது ஆட்களுடனான மோதல், அவமானம், இறுதியில் வெற்றி என்பது அதை நோக்கியே நகர்கிறது. இறுதியில், ராமன், கபிலனின் வெற்றியை ஒத்துக் கொள்ளும் இடத்தில், சமூக இணக்கம் சற்று முன்னோக்கி நகர்கிறது.
கலைகளும், விளையாட்டும், இசையும் மட்டுமே இத்தகைய சமூக நகர்வுகளை கொண்டு வர எளிதான வழியாக இருக்கும். இன்றைய பார்ப்பனிய சமூகம் மற்றும் சாதிய தேசியத்தின் எழுச்சியின் நடுவே, இதை எந்த விதங்களில் எதிர்கொள்வது என்பதற்கு பதிலாக இருக்கிறது.
ஒரு திரைப்படம் எதையும் மாற்றிவிட போவதில்லை. ஒரு புத்தகமோ, இசை துணுக்கோ எதையும் மாற்றியதாக தெரியவில்லை. ஆனால், இவை ஒரு விவாதத்தை, கடந்த காலத்தில் இருந்த தலைவர்களின் இடம் என்ன என்பதையும், வருங்காலத்தில் எத்தகைய சமூகத்தை நாம் நமது சந்ததிக்கு விட்டு செல்ல போகிறோம் என்பதற்கான விவாதத்தையும் ஆரம்பித்து வைக்கலாம். இந்தியாவை போன்ற சாதியாலும், மதத்தாலும் எல்லா பக்கமும் இழுக்கப்படும் சமூகத்தில் இந்த விவாதங்கள் முக்கியமானவை. இவை மட்டுமே எதிர்காலத்தை சற்று நம்பிக்கையுடன் பார்க்க வைக்கின்றன.
No comments:
Post a Comment