இடையன்குடி.
தமிழகத்தில் கிறிஸ்துவத்தை பரப்ப வந்தவர்களில் ராபர்ட் கால்டுவெல் மிகவும் தனித்துவமானவர். அவர் கிறிஸ்துவத்தை பரப்பவே வந்திருந்தாலும், அவரது விருப்பங்கள் அதில் மட்டுமல்லாமல் இன்னமும் பல துறைகளிலும் இருந்ததால், அவரது பங்களிப்பை சரியாக கணிப்பது சிரமம். அவர் மொழியியல் இலக்கண ஒப்பு நோக்கி ஆராய்ச்சி செய்திருக்கிறார். காயல்தான் கிரேக்க புத்தகங்களில் குறிப்பிடப்படும் நகரம் என்றும் கண்டறிந்தவர். கொற்கையில் அகழ்வாராய்ச்சி செய்தார். இன்றைய ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரீக்கு முன்னரே அகழ்வாராய்ச்சி செய்ய ஆரம்பித்தவர். சரித்திர ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதினார். இங்கிருக்கும் மக்களின் பழக்கவழக்கங்களையும் ஆராய்ந்து எழுதியவர். அவர் அறிந்திராத துறைகளோ, இந்த மக்களுக்காக அவர் செய்யாத உதவிகளோ இல்லை என்றே கூறலாம்.இடையன்குடி உவரியில் இருந்து சிறிது தூரத்திலேயே இருக்கிறது. வழக்கம் போல கூகுள் கால்டுவெல்லின் நினைவில்லத்திற்கு பதிலாக ஊருக்கு வெளியே இருந்த எலிசா செவிலியர் பள்ளியின் பெண்கள் இல்லத்திற்குள் எங்களை திருப்பி விட்டு விட்டது. நல்லவேளையாக அங்கிருந்த சிறிது வயதான பெண் எங்களுக்கு சரியான வழியை தெரிவித்து அனுப்பி வைத்தார்.
இடையன்குடியில் இருக்கும் தூய திரித்துவ தேவாலயம் தமிழகத்தில் இருக்கும் CSI தேவாலயங்களில் மிகவும் பழமையானது. ராபர்ட் கால்டுவெல்லின் மேற்பார்வையில் 32 வருடங்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி எழுப்பப்பட்டது. இங்கும் கோவிலுக்கு அருகிலேயே கால்டுவெல் ஆரம்பித்த பள்ளி, பின்புறத்தில் ஒரு மருத்துவமனை போன்றவை இருக்கின்றன. இப்போதிருக்கும் தேவாலயத்திற்கு முன்பு எழுப்பப்பட்ட சிறிய ஆலயமும் அருகிலேயே இருக்கிறது. நாங்கள் சென்ற நேரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அங்கே நடந்து கொண்டிருந்தது. அதனுள்ளேயே ஒரு ஆரம்பப்பள்ளியும் இருக்கிறது.
அன்றைய தினம் பள்ளிக்கு இந்த பருவத்தின் கடைசி தினமாக இருக்கவேண்டும். எல்லாப்பக்கமும் மாணவர்களும், மாணவிகளும் உற்சாகமாக ஆடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் இடையே நாங்கள் தேவாலயத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். உள்ளேயே ராபர்ட் கால்டுவெல் மற்றும் அவரது மனைவியின் கல்லறைகள் இருந்தன. ஆனால் கிறிஸ்துமஸிற்காக அவற்றின் மீது சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒரு சிறு பெண் எங்களுக்கு அவை எங்கே இருக்கின்றன என்று காட்டி கொடுத்தாள்.
புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த தேவாலய மணிக்கு செல்லும் வழி திறந்துதான் இருந்தது. ஏறிவிடலாம் என்றால் உள்ளே வவ்வால்களின் வாடை மிகவும் அடர்த்தியாக இருந்ததாலும், இப்போதைக்கு batmanஆக எனக்கு விருப்பமில்லாததாலும் கீழிருந்தே பார்த்துவிட்டு கிளம்பினோம்.
தேவாலயத்திற்கு அருகிலேயே கால்டுவெல் நினைவில்லம் இருக்கிறது. நாங்கள் சென்ற நேரம் பூட்டியிருந்தாலும் (மதிய உணவு நேரம்), அங்கிருந்த ஒருவர் அதன் காவலாளி அருகில் இருக்கும் மருத்துவமனை வளாகத்திலேயே இருப்பதாக தெரிவித்து, அவரே சென்று கூட்டியும் வந்துவிட்டார்.
நினைவில்லம் பல அரிய புகைப்படங்களை கொண்டிருக்கிறது. ஆனால் கட்டிடத்தின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. உத்தரங்கள் எல்லாம் எப்போதும் விழுந்துவிடலாம் போலவும், தரையில் பதித்திருந்த கற்கள் எல்லாம் வெளியே வந்தும், உடைந்தும் இருந்தன. இல்லத்தையும் சிறிது பராமரித்து நல்ல முறையில் வைத்திருக்கலாம்.
அங்கிருந்து கிளம்பி சொக்கன் குடியிருப்பு வந்து சேர்ந்தோம். அங்கும் தேவாலயம் மூடியிருந்தது. ஊரிலும் யாருமே இருப்பது போல தெரியவில்லை. வெளியிலே இருந்த கல்லறைகளை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பினோம்.
அறையில் வந்து சிறிது இளைப்பாறிவிட்டு, தூத்துக்குடியில் பார்க்க விரும்பிய சில இடங்களுக்கு கிளம்பினோம்.
தூத்துக்குடி.
தமிழகத்தில் ஆங்கிலேயர்களும், போர்துகீசியர்களும் மட்டுமே கிறிஸ்துவத்தை பரப்பவில்லை. பிரெஞ்சு, டச்சு போன்ற பல நாட்டவர்கள் தங்களது அடையாளங்களை விட்டு சென்றிருக்கிறார்கள். தூத்துக்குடி சில காலம் டச்சு நாட்டினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அவர்கள் எழுப்பிய ஒரு தேவாலயமே எங்களது அடுத்த இலக்கு.
இந்தியாவை கைப்பற்றி அதன் வளங்களை எடுத்து செல்ல ஆங்கிலேயர் மட்டுமே இங்கு வரவில்லை. போர்த்துகீசியர், டச்சு, பிரெஞ்சு என பல நாட்டவர்களும் வந்து சென்றார்கள். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது. கடற்கரை நகரங்கள் கைமாறிக் கொண்டே இருந்தன. மெட்ராஸ், பாண்டிச்சேரி என கடலோர நகரங்கள் அனைத்தும் பல்வேறு நாட்டினரால் கைப்பற்றப்படுவதும், கைவிடப்படுவதுமாக இருந்தன. தூத்துகுடியும் இதற்கு விதிவிலக்கல்ல.
இங்கு போர்த்துகீசியர்கள் முதலில் வந்தார்கள். பின்னாலேயே டச்சு நாட்டவர் வந்தார்கள். இவர்களின் மதங்களும் வேறாக இருந்தது. போத்துக்கீசியர்கள் ரோமை கத்தோலிக்கர்கள். டச்சு நாட்டவர் சீர்திருத்த சபையை சேர்ந்தவர்கள் (இன்றைய CSI). எனவே தேவாலயங்கள் எழுப்புவது மட்டுமல்ல, இடிப்பதும் நடந்து கொண்டிருந்தது.
அப்படியே போர்துகீசியர்களிடம் இருந்து தூத்துக்குடியை கைப்பற்றிய டச்சு நாட்டவர், அவர்களது தேவாலயங்களை இடித்து, தங்களது தேவாலயங்களை எழுப்பினார்கள். இதனால் பல வரலாற்று சுவடுகள் அழிந்து போயின.
கடற்கரை சாலையில் அமைதியாக இருக்கும் புனித திரித்துவ தேவாலயம் அப்படியாக டச்சு நாட்டவரால் எழுப்பப்பட்டது. 'அறியப்படாத கிறிஸ்துவம்' புத்தகத்தில் இப்படியாக இடிக்கப்பட்ட போர்த்துகீசிய ஆலயத்தில் இருந்த ஒரு கல்லறை மட்டும் புதிதாக எழுப்பப்பட்ட டச்சு தேவாலயத்தில் இருப்பதை பற்றிய குறிப்பு இருக்கிறது. போர்த்துகீசிய குரு ஒருவரின் மகளான சுவானாள் என்பவளின் கல்லறை என்று கூறப்படுகிறது. அதையும் சேர்த்து பார்க்கவே சென்றோம்.இந்தக் கோயிலும் பூட்டியிருக்கவே, சிறிது ஏமாற்றமாக இருந்தது. அப்போது அங்கே வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் எங்களை கண்டவுடன், கதவை திறந்துவிட்டார். மாலை ஏழு மணிக்கு பூசை இருப்பதாகவும் தெரிவித்தார். நாங்களும் உள்ளே சென்று பார்த்தோம்.
பழமை சிறிதும் மாறாமல் தேவாலயம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்து சென்ற தமிழ் எழுத்துக்கள் பொறித்த கல்லறை கல்லும் அப்படியே இருந்தது. மிகவும் அமைதியாகவும், எந்தவித பெரிய அலங்காரமும் இல்லாமல் இருந்த அந்த ஆலயம் மனதிற்கு அணுக்கமாக இருந்தது.உள்ளே சுற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பி அருகில் இருந்த பனிமய மாதா கோயிலுக்கு சென்றோம். கோயிலுக்கு எதிரே விற்று கொண்டிருந்த பனங்கிழங்கு, மசாலா பொரி, மாங்காய் சுண்டல் என்று நொறுக்கிவிட்டு, பனிமய மாதாவை பாராமல், அங்கிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஒடுக்கமான சந்திற்குள் சென்றோம். அந்த சந்தின் முடிவில், 1585ல் இந்த இடத்தில் இருந்த சிற்றாலயம் அருகிலேயே பனிமயமாதாவாக எழுப்பப்பட்ட போது, இந்த குருசடி நிர்மாணிக்கப்பட்டது என்று அருகிலேயே பொரித்து வைக்கப் பட்டிருக்கிறது. பிரெஞ்சு அரச சின்னமான பிளெயர் டே லில்ஸ் (லில்லி மலர்) குருசின் அனைத்து பக்கங்களிலும் இருக்கிறது. இதிலும் எண்ணெய் வடிந்து கொண்டிருந்தது.அங்கிருந்து பனிமய மாதாவை பார்த்துவிட்டதோடு எங்களது கிறிஸ்துவ தேவாலய பயணங்கள் முடிவிற்கு வந்தன. இரண்டு நாட்களில் பார்க்க முடிந்த அளவிற்கு பார்த்துவிட்ட திருப்தியோடு, மறுநாள் திருச்செந்தூரில் எனக்கு ஒரு மொட்டையை போட்டுவிட்டு, மதுரைக்கு திரும்பினோம்.
மதுரையில் என் அம்மா கிறிஸ்துமஸிற்கு அண்ணாநகர் மாதா கோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றுவது வழக்கம் என்று சொல்லவே, அன்று மாலை அங்கே சென்றோம். நமக்கு மாரியம்மாவும், மரியன்னையும் ஒன்றுதானே?