Showing posts with label அஞ்ஞாடி. Show all posts
Showing posts with label அஞ்ஞாடி. Show all posts

அஞ்ஞாடி - 2

நான் சிறு வயதில் சிவகாசி செல்லும் போது  மின்சாரம் என்பது எப்பவாவது வரும் ஒரு வஸ்து. பெரும்பாலான நாட்கள் விளையாட்டிலும், சினிமா தியேடர்களிலும் செல்லும். இருட்டில் வீட்டில் இருக்கும் என்றாவது ஒரு நாளில் எங்கள் மாம்மை எதாவது பழைய கதை சொல்லுவர். ஒரு முறை கள்ளர்கள் திரண்டு வந்து சிவகாசியை கொள்ளை அடித்த கதை சொல்லி இருக்கிறார். எங்களை இருட்டில் தெருவில் விளையாட விடாமல் செய்வதற்காக சொன்ன கதையாகவே அதை நினைத்திருந்தேன். அவர் கதையில் நாள் பூராவும் நடந்த கொள்ளையில் பலரும் கொல்லப்பட்டதும் பல வீடுகள் கொள்ளை அடிக்க பட்டதும், இரவில் தீப்பந்தங்களோடு கொள்ளை நடந்ததும் கேக்க கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

நாடார்கள் திருமணத்தின் போது பல்லக்கில் செல்லும் உரிமைக்காக ஆரம்பிக்கும் போராட்டம், அவர்களின் பொருளாதார நிலையின் மீதான தாக்குதலாய் மாறுகிறது. status quo வை நிலைநிறுத்த வரும் ஆங்கில அதிகாரிகள் அந்த பகுதியின் சாதி பின்னணிகளை அறியாமல் போலிசின் உதவியுடன் அடக்கவே முயல்கிறார்கள். இதில் ஆங்கில பாதிரிகளின் குறுக்கீடுகள் வேறு.

சிவகாசி சிவன் கோவிலின் உள் நுழையும் போராட்டம் இதே காலகட்டத்தில் நடக்கிறது. தாங்கள் அதிகமாய் இருக்கும் ஒரு ஊரில் உள்ள கோவிலில் நுழைய முடியாதது நாடார்களுக்கு சாதிய கீழ்மையுடன் தங்கள் பண பலத்தின் வீச்சையும் மட்டு படுத்துவதாய் இருக்கிறது. பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஒரு பிராமணரை அர்ச்சகராய் கொண்டு வருவது, பூணூல் அணிவது, சத்ரிய குல நாடார்கள் என்று தங்களுக்கு ஒரு சரித்திரத்தை கொண்டு வருவது என சமூகத்தில் மேல் எழும்பும் ஒவ்வொரு சாதியும் கட்டி எழுப்பும் பிம்பங்களை ஆரம்பித்து வைக்கிறார்கள் (Sanskritization).

50-60 வருடங்களாய் உயர்ந்த சாதி உரிமைகளை விடாது கேட்டு வந்த நாடர்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பது என்பது 1800களின் இறுதியில் நடக்கும் சிறு சிறு கிராம கொள்ளைகளில் ஆரம்பிக்கிறது. சிறு கடைகள், வீடுகள் புகுந்து கொள்ளை அடிப்பது என்று நடக்கும் கொள்ளைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த கொள்ளைகளே நாடர்கள் அதிகம் வசிக்கும், அவர்களின் செல்வ நிலை உயர்ந்து இருக்கும் சிவகாசியை கொள்ளை அடிக்க யோசிக்க வைக்கிறது.

சிவன்  கோவில் நுழைவின் பிரச்சினையில், பதட்டத்தில் இருக்கும் நாடார்கள் சிவகாசியை கொள்ளை இட்டுவிட்டால் அதன் பின் தங்கள் சாதிய நிலை இன்னமும் கீழே போய்விடும் என்று சிவகாசியை காப்பாற்ற தயார் ஆகிறார்கள். செண்பக குட்டி, அய்ய நாடார் போன்றோர் தலைமையில் ஜூன் 6,1899ம் தேதி நடக்க போகும் கொள்ளையை தடுக்க கூடுகிறார்கள்.

சிவகாசி கொள்ளை, எழும் அலையின் உச்சியாய் விழுந்தது. அதன் பின் இருந்த எதிர்ப்புகள் எல்லாம் நீர்த்து போன அளவிலேயே இருந்தது. பெரும் எதிர்ப்பாய் இருந்த மறவர்களும், குற்ற பரம்பரை சட்டம் மற்றும் காவல் பணிகளின் பொறுப்பு ஆங்கில போலீசுக்கு போனதும், அவர்களை தரையில் அழுத்தியது.

1900களில் ஆரம்பித்த விடுதலை போராட்டமும் 1920களில் நடந்த கோவில் நுழைவு போராட்டங்களும் பெரிய எதிர்ப்புகளை காணாது சிவகாசியில் நடந்து முடிகிறது. இதற்க்கு பிறகும் பயணிக்கும் கதை வெகு விரைவில் 1980களுக்கு வந்து முடிகிறது.

கிராமங்களின் சாதிய வேறுபாடுகள், உயரும் பொருளாதார நிலை கொண்டு வரும் மாற்றங்கள், அதன் பொருட்டு மாறும் மனிதர்கள் என்று பூமணியின் கதை செல்கிறது.  

வர்க்க வேறுபாடுகளின் கதையாகவும், பொருள்லாதார மாற்றம் எப்படி சாதிய கட்டமைப்பை மாற்றி போடுகிறது என்பதின் கதையாகவும் விரியும் கதை, சில இடங்களில் வெறும் வரலாற்றின் வர்ணனைகளாய் போய் விடுகிறது. சற்று அலுப்பை கூட்டும் விதமாய் இருக்கிறது இது.

அது போலவே வரலாற்றின் விமர்சனங்கள் எதுவும் இல்லது வைக்க படும் கதை வரலாற்று மனிதர்களின் முன்/பின் நிலைகள் இல்லாது  நிகழ்வுகளின் விளைவுகள் சொல்லப்படாமல் போகிறது. உதாரணமாக ராக்லாந்து  பாதிரியின் செயல்கள் என்ன மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது என்பது இல்லை. 1000 பக்ககங்கள் விரியும் கதையில் எல்லாவற்றையும் விவரிக்க முடியாதுதான்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு family tree இருந்திருந்தால் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்த மாதிரியான வீச்சு கொண்ட ஒரு கதை தமிழில் எழுதபடுவது அவசியமாகவே தெரிகிறது. இப்பொழுது படித்து கொண்டிருக்கும் 'ஆழி சூழ் உலகு'ம்  இது போன்றே ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வரலாற்று புனைவுகள் படிக்கும் ஆர்வமும், (கொஞ்சம் பொறுமையும்) இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.


நாவல் - அஞ்ஞாடி

பதிப்பாளர் - க்ரியா

விலை - 925 ரூ

அஞ்ஞாடி - 1

படித்து முடித்து ஒரு மாதம் ஆகிறது. 'அஞ்ஞாடி'இன் கதைகள் இன்னமும் முழுமையாக உள் வாங்க படவில்லை. சென்ற வருடமே வந்து இருந்தாலும் 'அஞ்ஞாடி' சிவகாசி கொள்ளை பற்றி பேசுவது மட்டுமே இந்த வருடம் வாங்குவதற்கு உந்துதலாக இருந்தது. 

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி வடக்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும்.

நெருக்கமான வீடுகள், ஒரு பக்கம் பாட்டி வீடும் (அம்மாவின் பாட்டி) இன்னொரு பக்கம் சின்ன மாம்பா (அம்மாவின் சித்தப்பா) வீடுமாக தெருவின் ஒரு கடைசியில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம்.
அதற்கு அப்புறம் இருக்கும் புல் மார்கெட்டின் குப்பைகள் எல்லாம் இங்கேதான் கொட்டப்படும். மூக்கை பிடித்துக் கொண்டு குப்பை மேட்டை கடந்து புல் மார்கெட்டின் உள்ளே நுழைந்து குவிந்து கிடக்கும் வாழை பழங்களையும், பலாப்பழங்களையும் கடந்தால் சிவன் கோவிலின் சிவன் சன்னதி தெரு வீதியை அடையலாம்.

அஞ்ஞாடியின் கதை ஆண்டி குடும்பனின் சிறு வயதில் ஆரம்பிக்கிறது. அவனுக்கும் வண்ணான் மாரிக்கும் இருந்த நட்பின் கதைகளில் ஆரம்பிக்கும் கதை அவர்களின் கல்யாணம், குழந்தைகள் ஊர் நடப்புகள், கிளைக் கதைகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.

கிளைக் கதைகள், வரலாற்று புனைவுகள், அதன் விளைவுகள் என தட தடவென செல்லும் கதை ஒரு விதத்தில் நம் கிராமங்களின் சாதி கட்டுமானங்களின், 1800களில் புதிதாய் உள்ளே நுழைந்த மதங்களின் கதையாகவும் விரிகிறது.

வெவ்வேறு மனிதர்கள். பஞ்சம் பிழைப்பவர்கள், ஊரை அண்டி வாழும் வண்ணார்கள், சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று செல்லும் கதை, மூன்று முக்கிய புள்ளிகளில் குவிகிறது.

1870களில் தமிழகத்தில் வந்த தாது வருட பஞ்சம், தென் தமிழகத்தில் நிகழ்ந்த மத மாற்றங்கள், சிவகாசி கொள்ளை. கதை மனிதர்கள் எல்லாம் இந்த மூன்று நிகழ்வுகளிலும் பங்கெடுக்கிறார்கள் மற்றும் பாதிக்க படுகிறார்கள். அவர்கள் வாழ்கை இந்த நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னுமாய் மாறுகிறது.

தாது வருட பஞ்சம் என்பது கேள்வி பட்டிருந்தாலும், பூமணியின் விவரிப்புகள் மனதை பிசைகிறது. விதை நெல்லையும் சமைக்கும் சம்சாரியில் இருந்து கஞ்சி தொட்டிக்கு போகும் சிறுவர்கள், பசியில் கொத்து கொத்தாய் மரணிப்பவர்கள். பிள்ளையை புதைத்து வந்த நேரத்தில் மனைவியும் இறப்பது, ஒவ்வொருவருக்காக குழி வெட்டாமல் ஒரு நாளைக்கு ஒரு குழி என்று வெட்ட ஆரம்பிப்பது என்று ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பாரத்தை ஏற்றுகிறது.

தாது வருஷ பஞ்சம் அது வரை தென் கிராமங்களில்  சாதி முறையை மாற்றுகிறது. வெள்ளாமை செய்து வந்த குடும்பர்களும் அவர்களுக்கு காவல் முறை செய்து வந்த தேவர்களும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட அதுவரை ஊர் பனைஏறிகளாய் இருந்த நாடார்கள் பண புழக்கத்தில் முன் வருகிறார்கள். பேட்டைகளும், மளிகை கடைகளும் ஊர்களுக்குள் பெருகுகின்றது. ஊர் சாதிகளுக்கும் இருந்த பழக்கங்களும் முறைகளும் மெதுவாய் மாற்றம் பெறுகின்றது.

இதே காலகட்டத்தில் (1820-80களில்)நெல்லையை தலைமை இடமாக கொண்ட பங்கின் மூலமாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சத்திரப்பட்டி, கழுகுமலை போன்ற ஊர்களில் தீவிரமாக கிறித்துவ மதத்தை பரப்ப பாதிரியார்கள் வருகிறார்கள். அவர்களுடன் பள்ளிகூடங்களும், சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலைக்கான நம்பிக்கையும் வருகிறது. இவர்களின் கதையும் ஊடாடி வருகிறது. ராக்லாந்து பாதிரி கிறித்துவத்தை பரப்ப இந்த பகுதி கிராமங்களை எல்லாம் சுற்றி வருகிறார்.

மதம் மாறியவர்கள் எல்லாம் அது வரை இருந்த சாதிய கட்டுபாடுகளுக்கு அடி பணிய மறுக்கும் போது புதிய பிரச்சினைகள் எழும்புகிறது. அதுவரை இருந்த பொருளாதார நிலை மாறும் போது, நாடார்கள் பண முதலாளிகலாய் மாறும் போது, அது வரை சாதிய பிரச்சினையாய் இருந்தது இப்போது கௌரவ பிரச்சினையாகவும் மாறுகிறது.

மதம் மாறிய கிறித்தவ நாடார்கள் சாதிய கட்டுபாடுகளை மீறவும், இந்து நாடார்கள் தங்கள் பொருளாதார மேம்பாடு சாதிய தாழ்ச்சியை ஒழித்து கட்டியதாய் கோவில்களில் நுழையும் உரிமைக்கு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அது வரை இருந்து வந்த கட்டு முறைகளை மீற முயலும் இந்த முயற்ச்சிகள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கின்றன.

எட்டயபுரம் ஜமீனில் உள்ள கழுகு மலையில் பல்லக்கில் போகும் உரிமையை கேக்கும் நாடர்களால் இந்த மோதல் பெரிய கலவரமாய் வெடிக்கிறது. 1895இல் கழுகுமலை ரத வீதியில் கிருத்துவர்கள் போட்ட பந்தல் தேர் சுற்றி வர தடையாய் இருப்பதாக சொல்லி ஏற்படும் கலவரத்தில் 10 உயிர்கள் பலியாகின்றன. எட்டயபுரம் ஜமீனின் மேனேஜர்ரும் இந்த கலவரத்தில் செத்து போகிறார்.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...