கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி

காஞ்சி கைலாசநாதர் கோயில் காஞ்சியின் மற்றொரு முனையில் இருக்கிறது. இன்று அடித்த வெயில் சீக்கிரம் எல்லா ஆர்வத்தையும் வற்ற செய்துவிடும். ஏற்கனவே சென்ற கோயில் என்றாலும் இந்த முறை ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

கலைக்கூடம் என்று ஒரு வார்த்தை இருக்கிறது. பல விசயங்களுக்கு பயன்படுத்தப் பட்டு இப்போது கிட்டத்தட்ட ஒரு அர்த்தமற்ற வார்த்தையாகிவிட்டது. ஆனால் இந்த வார்த்தைக்கு உதாரணமாய் ஒரு இடம்உண்டென்றால் அது கைலாசநாதர் கோயில்.

எட்டாம் நூற்றாண்டில் இராஜசிம்மனால் கட்டப்பட்ட இந்த கோயில் ஒரு சிறு இடம் கூட வீணாகாமல் சிற்பங்களால் நிரம்பி இருக்கிறது. ராஜ ராஜ சோழனால் 'கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி' என்று அழைக்கப்பட்ட இந்த கோயில் இன்றும் ஓரளவிற்கு நல்லமுறையில் ASIஆல் பார்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பல்லவர்களே முதலில் கற்கோயில்களை கட்ட ஆரம்பித்தது. அதை பின் பற்றியே சோழர்கள் கோயில்களை எல்லாம் கற்றளிகளாய் மாற்றுவதை முதன்மையாய் முன் எடுத்தது.

பல்லவ மன்னர்களில் ராஜ சிம்மனின் காலத்தில்தான் பல்லவர்களின் சிற்ப நேர்த்தி முழுமை அடைகிறது. அவர்களின் விமானங்கள், கோயில் பிரகாரங்கள், சிறு சிற்பங்களில் சொல்லப்படும் புராண கதைகள் என்று பல விதங்களில் கோயில்களில் முன்னோடிகளாய் இருக்கிறார்கள்.

இன்றும் கைலாசநாதர் கோயிலை அணுகும் போதே அதன் அழகை கண்டு ரசிக்காதவர்கள் இல்லை. கோயில் விமானமும் சுற்று பிரகாரங்களும், கோயிலின் வெளியே இருக்கும் அழகிய நந்தியும் கோயிலின் உள்ள அற்புதங்களுக்கு கட்டியம் கூறுவதாகவே தெரிகிறது.



பலமுறை  சென்று வந்திருந்தாலும் இந்த முறை சென்ற காரணம் இங்கே இருக்கிறது. கைலாசநாத கோயிலின் பிரகாரத்தில் இருக்கும் சிறு சன்னதிகளில் பல்லவர்களின் ஓவியங்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கவனமின்றி கோயில் சிற்பங்களை பார்த்ததில், இந்த ஓவியங்களை சரியாக கவனித்ததில்லை. அப்போதுதான் இந்த சோமஸ்கந்தர் ஓவியங்களை பற்றி வாசித்தேன். இந்த முறை இந்த ஓவியங்களை அணுகி பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டேன்.

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன்
இருக்கும் சிறு சன்னதிகளில் மங்கலாக இருக்கும் இந்த வண்ணங்கள் கொஞ்ச நேரத்தில் அங்கு இருந்த கலை செல்வத்தை நம் கற்பனையில் மட்டுமே உருவாக்க முடிகிறது. ஒரு ஓவியமாவது கொஞ்சம் அதன் பழைய பெருமையுடன் இருக்காதா என்று எண்ணும்போதுதான் கோயிலின் பின் மூலையில் சோமஸ்கந்தர் நம்மை பார்க்கிறார்.

இந்த ஓவியங்கள் எல்லாம் பல்லவர் காலத்தவைதானா என்ற கேள்விக்கு முனைவர் கிப்ட் சிரோன்மணியின் பக்கத்தில் பதில் இருக்கிறது. ஓவியங்களில் இருக்கும் ஆடை, அணிகலன்களை அதே கோயிலில் உள்ள சிற்பங்களுடன் ஒப்பிட்டு அவை பல்லவர் காலத்தவை என்று நிறுவுகிறார்.

சிறு சன்னதி. மதிய வெயிலின் தனிமை. சிறு இடத்தில் நானும் என்னை உற்று பார்க்கும் சோமஸ்கந்தரும். நேரம் போனதே தெரியவில்லை. இந்த ஓவியங்கள் இன்னும் சில சன்னதிகளில் கொஞ்சம் உயிர்ப்புடன் இருக்கிறது. இது போக வெளி சுவற்றில் உள்ள சிற்பங்களிலும் எஞ்சி உள்ள வண்ணங்கள் தெரிகின்றன.

ராஜ ராஜ சோழன் இந்த கோயிலுக்கு வந்த போது கோயிலின் சிற்ப்பங்களும், ஓவியங்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருந்திருக்க வேண்டும். பல வண்ணங்களுடன் இருந்திருக்கும் கோயில் தஞ்சை பெரிய கோயில் கட்டும் எண்ணத்தை தோற்றுவித்திருக்க வேண்டும். பெரியகோயிலின் விமான அறைகளில் சோழர்களின் ஓவிய காட்சி அமைக்கும் எண்ணத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.

அஜந்தா , எல்லோரா ஓவியங்களுக்கு கொஞ்சமும் குறையில்லாமல் இருக்கும் இந்த ஓவியங்கள் நல்ல முறையில் பாதுகாக்க படவேண்டியது அவசியம். குறைந்த பட்சம் இந்த ஓவியங்களின் மேல் கண்ணாடி வைத்து மூடுவது சுரண்டல்கள், பெயர் எழுதுதல் போன்றவற்றை தடுக்கும்.
இன்றும் மீதம் இருக்கும் ஓவியங்களைகொஞ்சம் கவனத்துடன் பார்த்து கொண்டால் நமது சந்ததிகளுக்கு பெருமை கொள்ள கொஞ்சம் காரணங்கள் இருக்கும்.

வந்த விஷயம் இனிதே முடிய சந்தோஷமாக வீடு திரும்பினேன்.


1. மேலும் படங்கள் --> https://plus.google.com/photos/104749384557340720796/albums/5879747384093161777
2. முனைவர் கிப்ட் சிரோன்மணியின் கட்டுரை --> http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_pallavapaintings.htm
3. Poetryinstone தளத்தில் மீள் உருவாக்கம் செய்ய பட்டிருக்கும் சோமஸ்கந்தர் ஓவியம்
http://poetryinstone.in/lang/en/2010/09/23/recreating-a-lost-treasure-somaskanda-paintings-of-kanchi-kailasanatha-part-1.html
http://poetryinstone.in/lang/en/2010/09/27/recreating-a-lost-treasure-somaskanda-paintings-of-kanchi-kailasanatha-part-2.html
http://poetryinstone.in/lang/en/2010/10/05/recreating-a-lost-treasure-somaskanda-paintings-of-kanchi-kailasanatha-part-3.html

3 comments:

VarahaMihira Gopu said...

காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒரு முறை மட்டும் பார்த்து அனுபவிக்க முடியாது. அடிக்கடி செல்லவும். வெயிலில் மழையில் குளிரில் காலையில் மாலையில் தனியாக நண்பனுடன் எதிரியுடன் அறிவாளியுடன் மடையனுடன் ரசிகனுடன் ஜடத்துடன் தாத்தாபாட்டியுடன் குழந்தைகளுடன் தமிழருடன் இந்தியருடன் அன்னியருடன்..... பலருடன் பல முறை பல விதம் ரசியுங்கள்.

http://varahamihiragopu.blogspot.in/2013/08/calligraphic-grantha.html
இதையும் ரசிக்கலாம்.

-கோபு

Muthuprakash Ravindran said...

நன்றி திரு. கோபு

Karikalan said...

Dear Mr Muthu Prakash, Its really good see that you have visited and recalled the facts of these chozha dynasty places. Could you pls provide your facebook link to get the more update from this page? Or pls mail your facebook link to rk_cdm@yahoo.com. Wish you all the best. I am very proud about your articles.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...