முஸ்லிம் அம்மா

ஓர் இரு வாரங்களுக்கு முன் 'முஸ்லிம் அம்மா' இறந்து விட்டதாக என் மனைவி சொன்னாள். அப்போதிருந்து இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு 'முஸ்லிம் அம்மா'வின் பெயர் தெரியாது. அவரது கதையும் என் அம்மா சொல்லி கொஞ்சம் தெரியும். அது எவ்வளவு தூரம் உண்மை என்றும் தெரியாது.

நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த நேரம். 5-6 வகுப்புகளாய் இருக்கலாம். அப்போதுதான் 'முஸ்லிம் அம்மா' அறிமுகமானார்கள் (எனக்கு). ஒரு முக்காடிடப்பட்ட வெள்ளை சேலை. கையில் ஒரு குடை. ஒரு சிறு பை. அதில் பல முறை வாசிக்கப்பட்டு மிகவும் பழையதான ஒரு பைபிள். இதுதான் 'முஸ்லிம் அம்மா'.

என் அப்பாவின் அம்மா ஒரு (மதம் மாறிய) கிறிஸ்தவர். மதுரை CSI (Church or South India)வில் உறுப்பினர். அங்கு ஊழியம் பார்ப்பவர் 'முஸ்லிம் அம்மா' (ஊழியம் - சர்ச்சில் வேலை செய்வது, உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்வது போன்ற காரியங்கள்). அப்பொழுது நண்பர்கள் ஆனவர்கள் என் அப்பாம்மையும் 'முஸ்லிம் அம்மா'வும்.

அந்த நட்பின் காரணமாய் எங்கள் வீடுகளுக்கும் (பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கும்) வருவார். அநேகமாய் மாதம் ஒரு முறை என்று ஞாபகம். எனக்கு நினவிருப்பதல்லாம் அவர் நல்ல வெயில் காலங்களில் வருவார். வந்தவுடன் ஒரு தம்பளர் தண்ணீர் குடிப்பார். என் அம்மா ஒரு பாயை விரித்து என்னையும் என் தம்பியையும் உள்ளே வர சொல்லுவார்கள். எல்லோரும் மண்டியிட்டு அமர்ந்ததும் ஜெபம் தொடங்கும்.

'முஸ்லிம் அம்மா' கிறிஸ்தவ ஊழியம் பார்ப்பதன் முரண் எனக்கு உரைக்க சில வருடங்களானது. அப்போது தான் என் அம்மா எனக்கு முஸ்லிம் அம்மாவின் கதையை சொன்னார். மதுரை கோரிப்பாளையத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். பதின் வருடங்களிலேயே கிறிஸ்தவ மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவராக மாற முயற்சி பண்ணி இருக்கிறார். குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. பெல்டில் அவரது தந்தை அடித்ததாகவும், அதன் தழும்புகள் அவரது முதுகில் இன்னும் இருப்பதாகவும் அம்மா சொல்லி கேட்டு இருக்கிறேன். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராகி விட்டார். ஆனால் திருமணம் செய்யாமல் தன் வாழ்க்கையை சர்ச்சுக்கு கொடுத்து விட்டார். தனியே ஒரு வீட்டில் வாழ்ந்து, தினமும் சர்ச்சுக்கு சென்று வேலைகள், ஜெபம் என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

வீட்டில் ஜெபம் செய்யும் போது அவர் முதலில் பைபிளில் இருந்து சில வசனங்களை வாசிப்பார். பின்னர், என் அப்பாவின் வியாபரம், எங்கள் படிப்பு என பல விசயங்களை தொட்டு செல்லும். இயேசு பலகணியில் இருந்து பல செல்வங்களையும், வைர, வைடூரியங்களையும் கொடுப்பதாக சொல்லுவர். நானும் ஒரு உப்பரிகையில் இருந்து எங்களுக்கு செல்வம் கொட்ட போவதாக சில காலம் நம்பிக்கொண்டிருந்தேன். கைக்கும் வாய்க்குமான எங்கள் குடும்ப போராட்டம் புரியும் வரை.

ஜெபம் முடிந்தவுடன் ஒரு காபியோ தண்ணீரோ கேட்டு வங்கி குடிப்பார். கையில் காசில்லாத குடும்பம். அம்மா ஒரு படி அரிசி கொண்டு வந்து 'முஸ்லிம் அம்மா'வின் பையில் தட்டுவார். சில வார்த்தைகளுக்கு பின் படி இறங்கி செல்வார். வெயிலில் அவர் அடுத்து எங்கு செல்வார் என்று சில நாட்கள் யோசித்திருக்கிறேன்.

நான் கல்லூரி சென்ற பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு குறைந்து விட்டது. அம்மா அவ்வபோது சொல்லுவார். நாங்கள் படித்து வேலை என்று வந்த பிறகு அது குறித்து அவர் மிகவும் சந்தோஷ பட்டதாக ஒரு முறை சொன்னார். அவ்வளவே. இப்போது 'முஸ்லிம் அம்மா' இறந்துவிட்டார்.

ஒரு முறை அவரை சென்று பார்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...