எக்ஸைல்

மதிப்புரை தளத்தில் பதிப்பிக்கப்பட்டது.
http://mathippurai.com/2015/02/12/pudhiya-exile/#more-449

நான் சாருவை அதிகம் படித்ததில்லை. சில சிறுகதைகள், சாருவின் வலைப்பூ, சில பத்திக் கட்டுரைகள். அவ்வளவே. அதனாலேயே ‘எக்ஸைல்’ படிப்பதற்கு ஆவலாக இருந்தது. மதிப்புரையின் இந்த முயற்சி படிப்பதற்கும் ஒரு உந்துதலாய் இருந்தது.

George Batailleன் ‘Story of the eye’ படித்தது ஒரு புது அனுபவமாய் இருந்தது. ‘பேசாப் பொருள்’ பேசிய அந்த நாவல் பல தளங்களில் புரிதலை ஏற்படுத்தியது. தமிழில் அத்தகைய எழுத்தை எழுதுபவர் சாரு என்று பல முறை படித்து கேட்டதும் இந்தப் புத்தகத்தைப் படிக்க மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
நாவல் கட்டமைப்பு என்பது இந்த சில நூறாண்டுகளில் பலவாறாக மாறி வந்துள்ளது. வரலாற்றுப் புதினங்களில் இருந்து பின் நவீனத்துவம் வரையிலான நாவல்கள், புதினங்களாக மட்டும் இல்லாமல் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களாகவும் இருந்துவந்துள்ளன. சாரு அவ்வாறே தமிழில் முதலில் ‘auto fiction’ என்ற genreல் எழுதுபவராக தன்னை முன் நிறுத்துகிறார்.
Auto fiction என்பது தன் வரலாறு (autobiography) எனப்படும் சுயசரிதையை கொஞ்சம் சாகசங்களுடன் எழுதுவது. அதுவே ‘எக்ஸைல்’. உதயா என்னும் எழுத்தாளரின் வாழ்வின் சில நிகழ்வுகளைப் பேசும் நாவல். அந்த எழுத்தாளர் அஞ்சலி என்ற மணமான பெண்ணுடன் கொண்டிருந்த காதல்/காமம் இந்த நாவலின் அடித்தளமாக இருக்கிறது. அதனூடே உதயாவின் வாழ்வின் பிற நிகழ்வுகள், அவன் வாழ்வின் ஊடே வரும் பிற மனிதர்களின் கதைகள் என விரிந்து செல்கிறது.

அஞ்சலியின் ஊடான காதல் முதல் சில பக்கங்களிலேயே அதன் வேகத்தை இழந்து கிட்டத்தட்ட படிக்க முடியாத அளவிற்கு அலுப்பூட்டுவதாக மாறி விடுகிறது. sms, கடிதங்கள் என விரியும் இப்பகுதிகள் பின் அஞ்சலியின் வாழ்க்கைக் கதையாக மாறும்பொழுது ஒரு தொலைக்காட்சித் தொடர் பார்க்கும் நிலையை அடைந்துவிடுகிறோம். அஞ்சலியின் கதையை விட்டு விட்டு வாசிக்கும் அளவிற்கு ஒரு கட்டத்தில் இந்த அலுப்பு இருந்தது. ‘கொக்கரக்கோ’ என்று ஒரு நண்பரின் சொற்களாக இடை இடையே வரும் கருத்துகள் இதை சாரு உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

இங்கே இந்த ‘கொக்கரக்கோ’ உத்தியைப் பாராட்டி ஆகவேண்டும். ஒரு வாசகனின் மன நிலையை ஒட்டி அமைந்திருக்கும் இந்தக் கருத்துகள் பிரதியின் இன்னொரு வாசிப்பை ஒரு எள்ளலுடன் முன்னெடுத்துச் செல்கிறது. உதயாவின் sexual prowess மற்றும்அஞ்சலியின் கண்ணீர்க் கதைகளை வாசிக்க இது மட்டுமே உதவுகிறது. இன்னுமொரு விதத்தில் இது நாவல் வாசிக்கும் அனுபவத்தின் குறுக்கே வருகிறது.

சாருவின் உரைநடை பல இடங்களில் நாவலின் வாசிப்பை உயர்த்துகிறது.
பக்கிரி சாமியின் கதையும் இன்ன பிற மனிதர்களுடன் நிகழும் சிறு நிகழ்வுகளும் சுவாரசியமாக சொல்லப்படுகிறது.

சாரு ஒரு ‘name dropper’ என்று ஒரு கருத்து உண்டு. நான் அவ்வாறு கருதவில்லை எனினும் இவ்வாறான எழுத்தாளர்களுக்கு ஒரு முறையான அறிமுகம் இல்லாத வாசகர்களுக்கு இது ஒன்று எரிச்சலைத் தரும் அல்லது சாருவை பிரமிப்புடன் நோக்க வைக்கும். இதுவே சாருவின் வாசிப்பு/நிராகரிப்புக்கு காரணமாகி விடுகிறது. எழுத்தாளனின் வேலை இத்தகைய அறிமுகம் செய்து வைப்பதா? என்றால், என்னளவில் இல்லை என்றே சொல்லுவேன். ‘எக்ஸைல்’ முழுவதும் இத்தகைய Latin American / French ஆசிரியர்கள் வந்து செல்கிறார்கள்.

‘எக்ஸைல்’ ஒரு மாறுபட்ட வாசிப்பனுபவமாக இருக்கும் என்பதே நான் இதை தேர்ந்தெடுக்க வைத்தது. ஆனால் ஒரு குறைபட்ட அனுபவமாகவே அது முடிந்தது. சில இடங்களில் தெரியும் அந்த spark நாவல் முழுவதுமாக இருந்திருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும் என்று தோன்றியது.
Auto Fiction என்பதன் வாயிலாக அஞ்சலியின் affairஐ சாகசமாக எடுத்ததே இதன் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. சாருவின் கொண்டாட்ட வாழ்வின் சராசரி நெடுந்தொடர் நிகழ்வாய் இது மாறிப் போனதே காரணம்.

‘எக்ஸைல்’ என்ற தலைப்பும் கொஞ்சம் சுவாரசியமானதாக இருந்தது. சாரு தான் எதற்கு இந்தத் தலைப்பை வைத்தேன் என்று ஓரிடத்தில் கூறுகிறார். எனக்கென்னவோ தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்துகொண்டு அச்சமூகத்தால் தள்ளி வைக்கப்பட்டதாய் நினைக்கும் உதயாவே ‘எக்ஸைல்’ என்று தோன்றியது.

மொத்தத்தில் ஒரு நாவலாக ‘எக்ஸைல்’ கொடுக்கும் வாசிப்பனுபவம் ஏமாற்றத்தில் முடிந்தது என்றே சொல்லலாம்.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...