பாலகுமாரனின் 'முன்கதை சுருக்கம்' ' படித்தேன். இது அதை பற்றியதல்ல. எனக்கு பாலகுமாரனையும், சுப்ரமணிய ராஜுவையும், சுஜாதாவையும் அறிமுகபடுத்திய நண்பனை பற்றியது.
நான் ஏழாவது படிக்கும் போது அனந்தராமன் வந்து சேர்ந்தான். அவனது அப்பா அந்தமானில் போட்டோக்ராபராக இருந்ததால் அவன் அம்மாவுடன் இருந்தான். நானும் அவனும் எப்படி நண்பர்களாக ஆனோம் என்று நினைவில்லை. ஆனால் நண்பர்கள் ஆனோம்.
அப்போது எனக்கு பெரிய எழுத்தாளர் கல்கி மட்டுமே. 'பொன்னியின் செல்வன்'இன் உலகில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு முதலில் 'மெர்குரி பூக்கள்'ஐ கொடுத்து படிக்க வைத்தான். 'மெர்குரி பூக்கள்' இன்னும் ஒரு உலகை காட்டியது. நிகழ் உலகு. ஆனால் நான் ஒன்றும் பெரிய இலக்கிய வாசிப்பாலானாக் மாறவில்லை. பாலகுமாரன் நன்றாக இருந்தாலும் அதில் இருந்த பிரச்சினைகள் எனக்கு சம்பந்தம் இல்லாதவையாக இருந்தன.
1988-89. ஆனந்த விகடனில் ' மீண்டும் ஜீனோ' தொடராக வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டில் 'கல்கி' மட்டுமே வாங்கியதால் ஒவ்வொரு வியாழகிழமையும் காலையில் அனந்தராமனின் கதை சொல்லல் நடக்கும். சிபி, நிலா போன்ற பெயர்கள் தந்த மயக்கம் ஒரு புறம். நாளைய விஞ்ஞானத்தின் சாத்தியங்கள் ஒரு புறம். சுஜாதா எளிதாக கல்கியை replace செய்தார்.
ஆனந்தவிகடனில் வந்த 'என் இனிய இயந்திர'வை bind செய்து கொண்டு வந்து படிக்க கொடுத்தான்.
ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பின், ரிக்க்ஷாவிற்குகாத்திருக்கும் நேரத்தில் நிறைய பேசுவோம். எட்டாவதில் அப்பாவின் பழைய சைகிளில் பள்ளி செல்ல ஆரம்பித்தபின் இந்த நேரம் அதிகரித்தது. சுஜாதா, பாலகுமாரனை தொடர்ந்து ராஜேஷ் குமார், சுபா என்று படிக்க ஆரம்பித்தோம். அம்மா வீட்டில் இல்லாத நேரம் திருட்டுத் தனமாக படித்து பள்ளியில் பேசுவோம்.
வகுப்பில் பெண்கள் மேல் ஒரு ஈர்ப்பு வர ஆரம்பித்ததும் இந்த வருடம்தான். அனந்தராமன் என்னை விட வயதில் பெரியவனாக இருந்ததும் ஒரு காரணம். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு கார் பெயர் வைத்து பேசி கொள்வோம். (மாருதி 800, contessa என்று). இருவரும் ஒருத்தரை ஒருத்தர் காட்டி கொடுக்க மாட்டோம் என்று ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம் (அதற்க்கு நெல்பேட்டை - சந்தைபேட்டை ஒப்பந்தம் என்று பெயர் வேறு). அவனிடம் ஒரு நகல், என்னிடம் ஒன்று.
வகுப்பில் அராஜகம் செய்வோம்.கடைசி பெஞ்சில் இருந்து கொண்டு சத்தம் போடுவது, பெண்கள் பதில் சொல்ல எழும் போது, குரல் குடுப்பது என்று எல்லா விடலை சேட்டைகளும் உண்டு. ரமா மிஸ்ஸை வகுப்பில் அழ வைத்தது நினைவில் இருக்கிறது. அப்புறம் அவரிடம் மன்னிப்பு கேட்டதும் நினைவில் இருக்கிறது.
Back row - second from left - me Middle row - from left - Vijayan, Anantharaman, Annadurai (the gang of four) |
தனலட்சுமி மிஸ், சுமதி மிஸ் பற்றி சொல்லவில்லை என்றால் இது நிறைவு பெறாது. எங்கள் இருவரின் மீதும் தனி அக்கறை கொண்டு எங்களுக்கு நிறைய புத்தகங்களை படிக்க கொடுத்து, சனி கிழமைகளில் தனலட்சுமி மிஸ் வீட்டில் கூடி அரட்டை அடித்து, வகுப்பில் physics, chemistry தவிர எல்லாவற்றையும் அலசி என்று அவர்கள் இருவரும் இல்லையேல் எங்கள் வாசிப்பு விரிவடைந்து இருக்காது.
அனந்தராமன் உடனான நட்பிற்கு ஒரு முடிவு வந்தது எட்டாம் வகுப்பின் முடிவில். பள்ளி சுற்றுலாவின் போது பெண்கள் குளியலறையில் எட்டிப் பார்த்தக் குற்றத்திற்காக அவன் தண்டிக்கப்பட்டான். நான் கண்டிக்கபட்டேன். எட்டாம் வகுப்பின் கடைசி இரு மாதங்கள் 'அம்மை' போட்டு இருந்ததால் பள்ளி செல்லவில்லை. எட்டாம் வகுப்பின் கோடை விடுமுறையில் நடந்த விசாரணையில் அனந்த ராமன் TC பெற்றுக் கொண்டான், இனி அவனுடன் நட்பு கொள்ள மாட்டேன் என்று ஒரு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் நான் கண்டிக்க மட்டும் பட்டேன்.
ஒன்பதாம் வகுப்பில் school pupil leader(SPL) ஆக நான் assembly நடத்தும் போது என்னை வைத்துக் கொண்டே பள்ளி தாளாளர் கடந்த வருடத்தின் விசாரணைகள் பற்றி பேசியதும், அதனால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மற்றும் எச்சரிக்கப் பட்ட மாணவர்கள் பற்றியும் பேசியபோது, அந்த நிகழ்வின் நகைமுரண் என்னை சிரிக்க வைத்தது. ஆனால் அவரே என் திருமணத்தின் போது, என்னை போன்ற மாணவன் இல்லை என்று வாழ்த்துரை வழங்கியதை என்ன சொல்வது?
ஒன்பதாம் வகுப்பில் school pupil leader(SPL) ஆக நான் assembly நடத்தும் போது என்னை வைத்துக் கொண்டே பள்ளி தாளாளர் கடந்த வருடத்தின் விசாரணைகள் பற்றி பேசியதும், அதனால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மற்றும் எச்சரிக்கப் பட்ட மாணவர்கள் பற்றியும் பேசியபோது, அந்த நிகழ்வின் நகைமுரண் என்னை சிரிக்க வைத்தது. ஆனால் அவரே என் திருமணத்தின் போது, என்னை போன்ற மாணவன் இல்லை என்று வாழ்த்துரை வழங்கியதை என்ன சொல்வது?
அதன் பின் அனந்த ராமன் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டதை அறிந்தேன். ஆனால் அவனுடனான தொடர்பு அத்துடன் முடிந்தது. பல வருடங்களுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்த அவனுடன் இதே blog மூலமாக தொடர்பும் கொண்டேன்.