'தென்னிந்திய கிராம தெய்வங்கள்' என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பை செய்து கொண்டு இருக்கும் போது , என் குடும்பத்தில் பல வருடங்களுக்கு முன் நடந்ததாக சொல்லப் படும் இந்த நிகழ்வு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
பல வருடங்களுக்கு முன் , நான் என் மாம்மைவுடன் (அம்மாவின் அம்மா) பேருந்தில் விருதுநகரை கடந்து போகும் போது , எதற்கு என்று நினைவில்லை, அவர் என்னிடம் ' எங்கள் அய்யாவின் பருப்பு உடைப்பு ஆலை இங்கேதான் இருந்தது ' என்று ஒரு இடத்தைக் காட்டினார். ஒரு களம் , சில ஒட்டு கட்டிடங்கள் என்று ஒரு பருப்பு உடைப்பு ஆலைக்கு உண்டான அத்துணை லட்சணங்களுடன் அந்த இடம் இருந்தது. அப்போது அதை பெரிதாக பார்த்துக் கொள்ளவில்லை.
அப்போதெல்லாம் சிவகாசிக்கு எல்லா விடுமுறை நாட்களுக்கும் சென்று விடுவேன். பெரிய வீடு. அந்த காலத்து வீடுகள் போல் , நுழைந்ததும் இருக்கும் பெரிய வரவேற்ப்பு அறையின் ஒரு பக்கம் முழுவதும் , பெரிய அளவில் கடவுள் படங்கள் இருக்கும். அவற்றுடன் காமராஜர் , நேரு படங்கள் இருந்ததாக ஞாபகம் (மாம்பா (அம்மாவின் அப்பா) ஒரு பழைய காங்கிரஸ்க்காரர்). அது போக ஒரு அலமாரியிலும் நிறைய கடவுள் படங்கள் இருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் மாம்பா எல்லாப்படங்களுக்கும் பூ போட்டு , தூபம் காட்டி பூசை செய்வார். நான் கூடவே பூக்களை எடுத்துக் கொடுக்க , தீப்பெட்டி எடுத்துக் கொடுக்க என்று எதாவது எடுபிடி வேலைகள் செய்து கொடுப்பேன். அந்த அலமாரியில் ஒரு பக்கம் , ஒரு பழைய கருப்பு , வெள்ளை படம் இருக்கும். அதில் மிக அழகாய் ஒரு பெண் , நிறைய நகைகளுடன் நிற்கும் படம் இருக்கும். அது யாரென்று கேட்க தோன்றியதில்லை. அவர் படத்திற்கும் பூ போட்டு பூசை செய்வார்கள். அந்த படத்தின் பழமையும் , அந்த பெண்ணின் அழகும் தவிர எதுவும் நினைவில் இல்லை.
1993இல் மாம்பா இறந்த பிறகு அந்த வீட்டில் மாம்மை மட்டும் இருந்து வந்தார். அப்போதும் விடுமுறைகளில் அங்கே தான் செல்வேன். அப்போது ஒரு முறை , இந்தப் பெண்ணின் கதையைக் கேட்டேன்.
தனலட்சுமி , மாம்மையின் சகோதரி. என் மாம்மையின் அப்பா - தனுஷ்கோடி என்பது அவர் பெயர் - அவர் பிறந்த பிறகே செல்வ செழிப்பாக இருந்தாராம். அதனால் அவருக்கு தனி மரியாதை.
விருதுநகரில் உள்ள பெரிய 10 பணக்காரர்கள் இருக்கும் வாடியான் தெருவில் அவர்கள் வீடு. மாம்மை கூட பிறந்தவர்கள் , அவரையும் சேர்த்து ஏழு பெண்கள் , மூன்று ஆண்கள்.
வலதில் இருந்து மூன்றாவது - தனலட்சுமி மாம்மை. இடத்தில் இருந்து முதலாவது - ஜானகி மாம்மை. |
14, 15 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுத்து விடும் காலம். அப்போது , தனக்கு திருமணம் செய்யக் கூடாது என்று தனலட்சுமி மாம்மை உறுதியாக சொல்லிவிட்டார். ஆச்சர்யமாக , தாத்தாவும் அதற்கு சம்மதம் சொல்லி , மற்றப் பெண்களுக்கு திருமணம் செய்துவைத்தார். ஆசிரியை பயிற்சி பெற்ற சுசீலா மாம்மையும் , கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. திண்டுக்கல்லில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து , ஒய்வு பெற்று இருக்கிறார்.
எப்படியோ அந்த தாத்தாவிற்கும் , தனலட்சுமி மாம்மை கூடே இருக்கும் வரையே தனக்கு தனம் என்பது தெரிந்திருக்க வேண்டும். எனவே தான் முப்பது வயது நெருங்கும் போது , தான் இறக்கும் நேரம் வந்துவிட்டதாக தனலட்சுமி மாம்மை சொன்னபோது அவரும் தளர்ந்து போனார். தான் இறக்கப் போகும் நாள் , தனக்கு செய்யவேண்டிய கிரியைகள் என எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிவிட்டாராம்.
அப்போது , விருதுபட்டியில் (இப்போது விருதுநகரில்) இருந்த ஆலை அதிபர்களுள் தாத்தாவும் ஒருவர். பெரிய ஆலை , வேலைக்கு வரும் பலர் , பெரு முதலாளியாக அங்கே அறியப்பட்டவர். தனது செல்வங்களின் காரணமாக அவர் கருதிய மகள் இறக்க போகிறாள் என்பது அவரால் தாங்க முடியாததாக இருந்திருக்க வேண்டும்.
அவர் கூறியது போலவே , சொன்ன தினத்தில் எந்த தொந்தரவும் இன்றி , தனது உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு தனலட்சுமி மாம்மை சென்றுவிட்டார்கள். அதற்கு அடுத்து நிகழ்ந்தவை அசாதாரமானவை.
தாத்தா வீட்டில் இருந்த பசு மாடு , கால் ஒடிந்து , இறந்து போனது. அரிசி ஆலையில் சம்பள தினம் அன்று , களத்தில் கணக்குப்பிள்ளை சம்பள பணம் வைத்திருந்த பெட்டியில் இருந்து பணம் , களம் முழுவதும் பறந்து போயிற்று.
இந்த சகுனங்களினால் தொழில் நசிந்ததைக் கண்டு மனம் தளர்ந்தாரோ இல்லை ஆசை மகள் இறந்ததைத் தாங்க முடியாமலோ , தாத்தா உடல் நலம் குன்றினார். அவர் கண்ணுக்கு மட்டும் தனலட்சுமி மாம்மை தெரிந்ததாகவும் , அவரை தெய்வமாக வணங்கி வந்தால் , எல்லோரையும் நன்றாக வைத்திருப்பதாகவும் கூறியதாகவும் சொல்வார்களாம். எனவே , அக்காள் தங்கை , அனைவரது வீட்டிலும் அவரின் அந்த கருப்பு வெள்ளை படத்தை வைத்து பூசை செய்வதாக சொன்னார்.
இன்றும் அந்த வீடு 1950களில் இருந்தது போலவே இருப்பதாகவும் , இன்றும் அந்த வீட்டில் வேறு யாரும் குடி போகமுடிவதில்லை என்றும் எனது மாமா சொன்னார்.
படிப்பு முடிந்தவுடன் , நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். வானதி பிறப்பதற்கு ஒரு வாரம் முன்பாக மாம்மை இறந்துவிட்டார். அவரின் கடைசி சடங்கிற்கு கூட அதனால் போகமுடியவில்லை.
அந்த கருப்பு வெள்ளை படம் அந்த வீட்டில் இருந்தது , என்னவாயிற்று என்று தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் , தனலட்சுமி மாம்மை , எங்கள் ஜானகி மாம்மையுடன் , எங்கள் நன்மையை மட்டுமே விரும்புவார் என்பது நிச்சயம்.