இப்போது நான் பகிரும் இந்த முதுமக்கள் தாழிகள் பற்றிய விவரங்களின் மூலம் இந்த Antiquary பத்திரிகையின் வாசகர்கள் யாரேனும் இவை உலகின் வேறு பாகங்களிலும் கிடைக்கின்றனவா என்ற என்னுடைய கேள்விக்கு விடையளிக்க உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
நான் குறிப்பிடும் தாழிகள், உடையும் நிலையில் இருக்கும், மனித எலும்புகளைக் கொண்டிருக்கும் பெரும் மண் பாண்டங்கள். இவை பல அளவுகளில் கிடைக்கின்றன. அவற்றுள் இருக்கும் மனிதரின் அளவைப் பொறுத்து வேறுபடுகின்றன. நான் கண்டறிந்தவற்றில் பெரியது பதினோரு அடி விட்டத்துடனும், சிறிய தாழி நான்கிலிருந்து ஐந்து அடி விட்டத்துடனும் இருந்தது. இந்தத் தாழிகள் ஒன்று போல் இருப்பதில்லை. ஒவ்வொன்றும் சிறு சிறு மாறுதல்களுடன் இருக்கிறது. ஆனால் பொதுவாக இவை இந்தப் பக்கங்களில் நிலங்களுக்குத் தண்ணீர் எடுக்கப் பயன்படும் கூனை என்னும் பெரிய மண் பாண்டங்கள் போல் இருக்கின்றன. இவற்றிற்குக் கைப்பிடியோ, அடிப்பகுதியோ, விளிம்போ அல்லது மூடியோ இருப்பதில்லை. இவை நடுவில் அகலமாக விரிந்து, அடிப்பாகம் ஒரு புள்ளியாக முடிந்துவிடுகிறது. இவற்றைப் புதைப்பதன் மூலமே இவை நிற்க வைக்கப் படுகின்றன. இந்தத் தாழிகள் இவற்றைச் செய்த மக்களின் கைவினைத் திறனைக் காட்டுகிறது. இவை நல்ல களிமண்ணாலும், நன்றாகச் சுடப்பட்டு, இப்போது இந்தப் பகுதியில் செய்யப்படும் எந்தப் பாத்திரங்களையும் விட நன்கு வலிமையாக இருக்கின்றன. ஒரு மனிதனின் உடலை மடங்கிய நிலையில் இவை எளிதாகக் கொண்டு விடும். ஆனால் இவற்றின் வாய் குறுகலாக ஒரு தலை மட்டுமே நுழையும் அளவில் இருக்கிறது. எனவே, இவற்றின் உள்ளே உடல்கள் வெட்டியோ அல்லது அவை மக்கிப்போன பின் அவற்றின் எலும்புகள் உள்ளே போடப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இந்த எலும்புகள் பெரும்பாலும் மக்கி போய் விட்டதால் இந்த அனுமானங்களை நம்மால் நிரூபிக்க முடியாது. எலும்புகள் சிறு துண்டுகளாக மட்டுமே கிடைக்கின்றன. பெரும்பாலும் மணல் இவற்றை நிரப்பியுள்ளது. கொற்கையில் கிடைத்த பெரிய தாழியில் எலும்புகள் கெட்டித்துக் கல் போல் ஆகிவிட்டதைப் பார்த்தேன். அந்தத் தாழியின் உள்ளே ஒரு முழு உடலையும் வைக்க முடியும் என்றாலும், இந்த எலும்புகள் எல்லாம் பிரிந்து கிடந்ததனால் அறுதியாகக் கூற இயலவில்லை. குற்றாலம் அருகே இலஞ்சியில் கிடைத்த தாழியில் ஒரு முழுமையான எலும்புக்கூடு கிடைத்தது. மண்டையோடும், அதன் கீழே மார்பெலும்புகளும், அதன் இரு புறமும் இரண்டு முழங்கால் எலும்புகளும் இருந்தன. எனவே இங்கு உடலை இரண்டாய் மடித்துத் தலை முதலாக இந்தத் தாழியின் உள்ளே செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் தோள் பகுதி எப்படி உள்ளே சென்றிருக்க முடியும் என்று ஊகிக்க முடியவில்லை. இந்த எலும்புகள் காவிக்கல் போன்று இருந்தது. இவற்றை வெளியில் எடுக்கும் போதே சிறு துகள்களாக உதிர்ந்து விட்டது. ஒரு பல்லும், சிறு மண்டையோட்டு பகுதியும் தவிர எதையும் எடுக்கமுடியவில்லை. அவற்றின் மூலம் இது ஒரு முழுதும் வளர்ந்த மனிதனின் எலும்புக்கூடு என்று அறிந்தோம். அப்போது திருவிதாங்கூர் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரை எங்களுடன் இருந்தார். அவர் இந்தப் பற்களின் தேய்மானத்தைக் கண்டு, அவை தானியங்களை உண்பதால் வரும் தேய்மானம் என்று கூறினார். முன் பற்களில் இருந்த தேய்மானங்கள், பயரினங்களை உண்பதால் ஏற்படுபவை என்றும் கூறினார். பின்னர், இங்கு வசிக்கும் மக்களின் பற்களைச் சோதித்து அவை இது போன்ற தேய்மானங்களுடன் இருப்பதைக் கண்டேன். அவர்களும் இது போன்ற உணவு பழக்கம் உடையவர்கள் என்று கூறினார்கள். இந்தத் தாழிகளில் உள்ள எலும்புகள் சுண்ணாம்பு நீராகுவதைப் போன்று எதுவும் நான் பார்க்கவில்லை.
இந்த எலும்புகளுடன், சில இடங்களில், சிறு மண் பாத்திரங்களும் இந்த தாழிகள் உள்ளே இருப்பதைக் கண்டேன். சில இடங்களில் தாழிக்கு வெளியிலும், சில இடங்களில் உள்ளேயும் இருந்தன. இவை பல அளவுகளில், பெரும் நேர்த்தியுடன் செய்யப்பட்டு, வெகுவாக மெருகேற்றப்பட்டு இருந்தன. முதலில் நான் இவை பளபளப்பு கூட்டப்பட்டு இருப்பதாக நினைத்தேன். சென்னைக் கலைக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் ஹண்டர் இது மெருகேற்றப்பட்டது என்று உறுதி செய்தார். எதுவாக இருந்தாலும், இவை போன்ற வேலையை இன்று இந்தப் பகுதியில் காண முடிவதில்லை. சில இடங்களில் கருப்பு வண்ணம் பூசப்பட்டு இருக்கின்றன. இந்த கருப்பு பாத்திரங்கள் மக்கி போய் கிடைத்ததால், சில நேரங்களில் இவை சுண்ணாம்பாக்கப்பட்ட எலும்புகளாக கருதப்படுவதுண்டு.
இந்தச் சிறு பாத்திரங்களின் ஐந்து படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை இந்தப் பக்கத்து மக்களிடம் காட்டிய போது, நான்காம் எண் உள்ளது எண்ணெய் வைத்திருக்கும் பாத்திரம் என்றும், ஐந்தாம் எண் உள்ளது ஒரு துப்புத்தொட்டி(படிக்கம்) என்றும் கூறினர். யாருக்கும் மூடியுடன் இருக்கும் இரண்டாம் எண் பாத்திரம் என்னவென்று தெரியவில்லை. இப்போது இந்தப் பாத்திரங்கள் எல்லாம் மணிவெண்கலத்தில் செய்யப்படுகின்றன. மண் பாண்டங்களாகச் செய்வதில்லை. இவற்றை இந்தத் தாழிகளுடன் வைப்பது, மறு உலகத்தில் இந்தத் தாழியில் இருப்பவரின் ஆவி, இந்தப் பாத்திரங்களின் ஆவிகளை வைத்து சாப்பிடவும், குடிக்கவும் உபயோகப்படுத்த இருக்கலாம்! தேங்காய் அளவில் சிறு கற்கள் இந்தத் தாழிகள் இருக்கும் இடங்களில் குவியலாக வைக்கப்பட்டிருக்கின்றன. தாழியின் வாயைச் சுற்றி வட்டமாகவும் அடுக்கப் பட்டிருந்தது. இவற்றை வைத்தே அங்குத் தாழி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்தப் பகுதி மக்களுக்கு இந்தத் தாழிகளை உபயோக படுத்திய மக்கள் யார் என்றோ, அவர்கள் எப்போது இருந்தார்கள் என்றோ தெரியவில்லை. அவர்கள் சமணர்களாக (ஜைனர்கள் அல்லது புத்த மதத்தினர்) இருக்க முடியாது. சமணர்களைப் பற்றி இங்குப் பல மரபுகள் இருக்கின்றன. அவற்றில் எதுவும் தாழிகள் உடன் சம்பந்தமாக இல்லை. இவற்றைப் பற்றி இந்த மக்கள் ஒரு கதை சொல்கின்றனர். அது அவர்களின் அறியாமையைக் காட்டுவதாக மட்டுமே இருக்கிறது. அந்தக் கதை இதுதான். திரேதா யுகத்தில், அதாவது லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் இறப்பு என்பதை அறியாதவர்கள். அவர்கள் வயது ஆக ஆகச் சிறியதாகிக் கொண்டே போவார்கள். காலப்போக்கில் அவர்கள் மிகவும் சிறியதாகி விடுவதால், வீட்டின் விளக்கு மாடத்தில் அவர்களை வைத்து விடுவார்களாம். அவர்களைப் பார்த்துக் கொள்வது பெரும் வேலையாக இருந்ததால், இளம் வயதினர், அவர்களை ஒரு பானையில் வைத்து, பாத்திரங்களில் அரிசி, நீர் , எண்ணெய் போன்றவற்றையும் வைத்து, ஊருக்கு வெளியே புதைத்து விடுவார்களாம்.
இந்தத் தாழிகளின் பெயரை வைத்தும் இவற்றைச் செய்தவர்களை அறிய முடிவதில்லை.இவற்றின் பெயர் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. தமிழ் அகராதியில், இவை 'மடமடக்கத் தாழி' எனப்படுகிறது. மக்களிடையே இது 'மடமடக்கன் தாழி' என்று சொல்லப்படுகிறது. இதற்கு அவர்கள் தரும் அர்த்தம் சரியானதாக எனக்குத் தெரியவில்லை. இந்தத் தாழிகளில் புதைக்கப்படும் சிறிய மனிதர்கள் சில சமயம், பானை பொங்குவது போன்று பொங்கி வெளியே வந்துவிடுவார்களாம். இதைவிட மக்களிடையே சொல்லப்படும் இன்னொரு வார்த்தை கொஞ்சம் அர்த்தம் உடையதாக உள்ளது. 'மடமட்டான் தாழி' என்பதாகும் அது. சமசுகிருதத்தில் 'மடன்மட்ட' எனில் 'பைத்தியம்' என்று பொருள். தமிழில் சில இடங்களின் இது 'மிகப்பெரிய' என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது. பஞ்சதந்திர கதைகளில் பெரும் காடுகளைச் சொல்ல இது பயன்படுகிறது. இந்தத் தாழிகளின் பெரிய அளவினால் இது மக்களினால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். பண்டிதர்களை விட மக்கள் சரியான வார்த்தை பிரயோகம் செய்கின்றனர்.
இப்படி இறந்தவர்களைத் தாழியில் புதைத்த இந்த மக்கள் யார் என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. இந்தத் தாழிகளும், அவற்றின் உள்ளே உள்ளவைகளும் மட்டுமே இப்போதைக்கு நமக்கிருக்கும் சான்றுகள். இதில் இருந்து, இவற்றில் புதைக்கப்பட்டவர்கள் குள்ள மனிதர்கள் இல்லை என்பது தெளிவு. இதற்குள் எப்படி உடல்களை வைத்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் அந்த எலும்புகள் சாதாரண மனிதருடையவை என்பதில் ஐயமில்லை. அந்த மண்டையோடும், பற்களின் தேய்மானமும் இவர்கள் இப்போது இங்கிருக்கும் மக்களைப் போன்றவர்கள் என்று தெரிகிறது. பெர்லினில் முனைவர் ஜாகர் திறந்த ஒரு தாழியில் ஒரு சிறுதானியக் கதிர் இருந்ததாம். அவற்றில் மணிகள் இல்லை ஆனால் அந்தக் கதிர் இருந்தது. இந்தத் தாழிகள் வரிசையாக அடுக்கப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதில் இருந்து இது ஒரு இடுகாடாக இருக்கலாம். இதன் அருகில் இந்த மக்கள் கிராமங்களில் வாழ்ந்திருக்கலாம். இவர்கள் நாகரீகமானவர்கள் என்பது இந்தப் பானைகளின் உயரிய தரத்தில் இருந்தும், சில தாழிகளில் கிடைத்த இரும்பு சாதனங்கள் அல்லது ஆயுதங்கள் வைத்தும் தெரிந்து கொள்ளலாம். முடிவாக, இப்போது இங்கு வாழ்ந்து வரும் மக்களின் மூதாதையராக இருக்கலாம். இது உண்மையாக இருந்தாலும், இந்த மக்களின் எந்த ஒரு மரபும், தொழிலும் வேறு திறன்களும் மற்றும் இந்தத் தாழி முறையும் இன்று இல்லை. இதன்றி, அவர்கள் வேறு ஒரு இனத்தவர் என்று முடிவெடுத்தால், அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள், எப்படி மறைந்தார்கள் என்ற எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.
இந்தத் தாழிகளை நான் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், வடக்கு, தெற்கு திருவிதாங்கூரிலும் - தெற்கு தொடர்ச்சி மலைகளின் இருபுறங்களிலும் பார்த்திருக்கிறேன். உங்கள் பத்திரிகைக்கு அனுப்பியதன் நோக்கம், இது போல் இந்தியாவின் மற்ற மாகாணங்களில் காணப்படுகிறதா என்பதைத் தெரிந்துக் கொள்ளவே. இவை கிடைக்கும் இடங்கள் அனைத்தும் அறியப்பட்டால், இந்த மனிதர்களின் வரலாற்றை ஒரு வேளை நம்மால் கண்டறிய முடியும்.
இடையன்குடி , திருநெல்வேலி மாவட்டம் 1877