சர் வால்டர் ஸ்காட்டின் நாவல்கள் தொலைக்காட்சி தொடர்களாக பிபிசியில் வந்த போது, அவற்றை போல எப்போது தமிழில் எடுப்போம் என்று யோசித்திருக்கிறேன். வாசிப்பது ஒரு இன்பம் என்றால், வாசித்ததை திரையில் பார்ப்பதும் கூடத்தான் (சில சமயங்களில் அது பெருந்துயராகவும் இருக்க கூடும்.) எனவேதான் 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாக வருகிறது என்பது ஒரு விதத்தில் எதிர்பார்ப்பையும், இன்னொரு புறம் சிறிது பயத்தையும் கொடுத்தது.
ஆனால், மணிரத்தினம் நாவலை, திரைமொழியில் வெற்றிகரமாக எடுத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். சிற்சில நெருடல்கள் இருந்தாலும், திரைப்படம் ஒரு வெற்றிகரமான முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
பெரும்பாலானவர்கள் வாசித்த அல்லது கேட்டறிந்த கதை ஒன்றை திரையில் எடுப்பது மிகவும் சவாலானது. சரியான நடிகர்கள், சரியான திரைக்கதை, கதை நகர்த்தல்கள், எல்லாவற்றையும் விட முக்கியமாக திரையில் கதையை வசனம் மூலமாக இல்லாமல் காட்சிகள் மூலமாக நகர்த்துவது என பலவற்றையும் சரியாக செய்ய வேண்டும். மணிரத்தினம் அதை சரியாக செய்திருக்கிறார்.
'பொன்னியின் செல்வன்' அடிப்படையில் ஒரு பழிவாங்கும் கதை. அதனுடன் சிறிது காதலையும் சேர்த்து கல்கி உப்புமா கிண்டியிருப்பார். ஆனால் ஸ்காட்டின் நாவல்களை போல வீரம், காதல், நகைச்சுவை என்று எல்லாவற்றையும் கலந்து கட்டிய கதைகள். எனவே அவற்றை திரையில் எடுக்கும் போது அந்த சதவிகிதங்கள் மிகுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் அதை சரியாக செய்வதால் வெற்றியடைகிறது.
ஆதித்த கரிகாலனாக விக்ரம் எதிர்பார்த்தது போலவே படத்தை தூக்கி நிறுத்துகிறார். கதையில் போலல்லாது, இங்கே ஆதித்த கரிகாலனும், வந்தியத்தேவனும் கிட்டத்தட்ட சரிபாதி காட்சிகளில் வருகிறார்கள். எனவே படத்தின் அச்சாணி கதையான கரிகாலன் - நந்தினியின் காதல் எந்த இடத்திலும் பின்னுக்கு தள்ளப்படாமல், கதையின் ஆதார நிகழ்வை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறது.
இங்கே திரைக்கதையை பாராட்ட வேண்டும். இது போன்ற பெரிய நாவலின் ஆதார கதையை சிதைக்காமல் எழுத தனித்திறமை வேண்டும். கதையின் காட்சிகள் சில மாற்றி அமைக்கப்பட்டும், சில நீக்கப்பட்டும் இருந்தாலும் மூலக்கதையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் கதை எழுதப்பட்டிருக்கிறது.
வந்தியத்தேவனாக கார்த்தி ஒரு ஏளனமான உடல்மொழியையும், கல்கியின் கதாநாயகனின் நகைச்சுவையையும் சரியாக கொண்டு வந்து விடுகிறார். அவருக்கும் குந்தவைக்கும் இடையிலான காட்சிகளில் துளிர்க்கும் காதல், இளவரசியை காதலிக்கலாமா என்ற ஏக்கம் என பலவற்றை வெளிக்கொணர்கிறது. ஆழ்வார்க்கடியான் நம்பியாக சில காட்சிகள் வந்தாலும் ஜெயராமின் நடிப்பு மிகவும் இயற்கையாக காட்சிகளோடு ஒன்றி விடுகிறது.
குந்தவை. திரிஷாவை இவ்வளவு அழகாக எங்கும் பார்த்ததில்லை என்று சொல்லவேண்டும். நந்தினியாக வரும் ஐஸ்வர்யாவை மிகவும் சாதாரணமாக பல காட்சிகளில் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார்.
சில குறைகளும் இருக்கின்றன. பூங்குழலி இன்னமும் சற்று விரிவாக காட்டப்பட்டிருக்கலாம். தீடீரென்று அவளது படகில் வந்தியத்தேவன் எழுவது சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அவர்கள் சந்திப்பை இன்னமும் சரியாக கையாண்டு இருக்கலாம்.இசை சில இடங்களில் நெருடலாக இருந்தாலும், பல இடங்களில் .நன்றாகவே இருக்கிறது. மதுராந்தகன், சேந்தன் அமுதன் போன்ற பாத்திரங்கள் இன்னமும் சற்று இளமையாக இருந்திருக்கலாம்.
ஆனால், இவை எல்லாம் மேல்பூச்சாக மட்டுமே தெரிபவை. இது போன்ற ஒரு படத்தை சரியாக எடுத்து கொடுத்திருக்கும் மணியை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
அப்படியே, தமிழர்களின் வரலாறு, பெருமை என்றெல்லாம் போட்டு குழப்பிக் கொள்ளாமல், வெறுமனே சிறந்த பொழுதுபோக்கு படமாக பாருங்கள். இன்னமும் ரசிக்க முடியும்.
புத்தகத்தை வாசித்திருந்தாலும், வாசித்திருக்காவிட்டாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.