The Discovery and Conquest of Peru - Zarate.
பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன்.
1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற்காக கப்பல்களில் பயணம் செய்து, இன்றைய பெரு நாட்டையும், அன்றைய மாபெரும் இன்கா அரசையும் வந்தடைகின்றனர். அடுத்த ஐந்து வருடங்களில், பிரான்சிஸ்கோ பிஸ்சாரோவின் தலைமையில் அவர்கள் கிட்டத்தட்ட 4000 கிலோமீட்டர்கள் நீளமுள்ள இன்கா பேரரசை 168 வீரர்களை கொண்டு, பல்வேறு சூழ்ச்சிகளின் மூலம் கைப்பற்றுகிறார். அதன் பின்னர் நிகழ்ந்த பல்வேறு அக்கிரமங்களையும் - முக்கியமாக, அங்கே கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி பற்றிய கணக்குகளை சரிபார்க்க அரசரின் பிரதிநிதியாக சாராதே அங்கே வந்து சேர்கிறார். அவரே அதுவரை அங்கு நடந்தவற்றை வரலாறாக பதிவு செய்கிறார். ஸ்பானியர்களின் பார்வையில் எழுதியிருந்தாலும், பிரான்சிஸ்கோவும் அவரது சகோதரர்களும் அப்போது அரசருக்கு எதிரியாக கருதப்பட்டதால், அங்கு நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் ஓரளவிற்கு பதிவு செய்யப்படுகிறது.
1492ல் கொலம்பஸ் அமெரிக்காவை, அதன் கரீபிய தீவுகளை கண்டறிந்தார். 1517ல் இன்றைய மெக்ஸிகோ - அன்றைய அஸ்டெக் அரசு வீழ்த்தப்படுகிறது. அதிலிருந்து பத்து வருடங்களில் தென் அமெரிக்கா ஸ்பானிய பேரரசால் வீழ்த்தப்படுகிறது. ஆனால் அதற்கு செய்யப்பட்ட சூழ்ச்சிகள், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எல்லாம் நம்பமுடியாததாக இருக்கிறது. பொருளாசையும், மதவெறியும் ஒன்று சேரும் இடத்தில் நிகழும் கொடுமைகளை சாராதே எந்த உணர்ச்சியும் இல்லாமல் பதிவு செய்கிறார்.
ஸ்பானியர்கள் இன்காக்களை சந்தித்த நேரத்தில், இன்கா பேரரசு ஒரு உள்நாட்டுப்போரின் முடிவில் இருக்கிறது. அதில் வெற்றி பெற்ற அடஹுவால்பா, ஸ்பானியர்களை சந்திக்க ஒப்புக் கொள்கிறார். அந்த சந்திப்பு ஒரு dark comedy போல நிகழ்கிறது. பல்லக்கில் வரும் இன்கா பேரரசனை, ஸ்பானியர்களுடன் வந்திருக்கும் கத்தோலிக்க பாதிரி ஒருவர் எதிர் கொண்டு, விவிலியத்தை கைகளில் காட்டி, அரசனை உடனே கிறிஸ்துவனாக மதம் மாற சொல்கிறார். மொழியும் தெரியாமல், பைத்தியம் போல உணர்ச்சிவசப்பட்டு கொண்டிருக்கும் பாதிரியின் கையில் இருந்து விவிலியத்தை வாங்கி பார்த்துவிட்டு, அரசன் அதை கீழே எறிகிறான். அதுவே போதுமானதாக இருக்கிறது மற்றவர்களுக்கு. பேச்சுவார்த்தைக்கு வந்த அரசனை ஸ்பானியர்கள் வன்முறையை நிகழ்த்தி கைது செய்கிறார்கள்.
ஸ்பானியர்களின் துப்பாக்கியும், அவர்களது குதிரைகளும் அங்கிருந்த இன்கா வீரர்களிடையே ஏற்படுத்திய பயம், இன்று நம்மால் புரிந்து கொள்ள முடியதாக இருக்கிறது. பெருவின் இந்தியர்களை பிரிவினைப்படுத்தி, தங்கமும், வெள்ளியும் கொள்ளையடிக்கப்படுகிறது. சிறையில் இருக்கும் அரசன், புரட்சி செய்ய முயலுவதாக சொல்லி கொல்லப்படுகிறார்.
இந்தியர்கள் தங்க, வெள்ளி சுரங்கங்களில் கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். ஐரோப்பியர்களின் பெரியம்மையும், மற்ற நோய்களும் இந்தியர்களின் மக்களை கொன்று குவிக்கிறது. இவற்றை போகிற போக்கில் பதிவு செய்துவிட்டு, தங்கத்தையும், வெள்ளியையும் எப்படி ஸ்பெயினிற்கு எடுத்து செல்வது என்று ஸ்பானிய வீரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு சாகிறார்கள். இந்தப் புத்தகம் எழுதப்படும் 1555ம் வருடத்திற்குள், பெரு பெருவாரியாக கொள்ளையடிக்கப்பட்டு, அதன் பூர்வகுடி இந்தியர்களில் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இன்காக்கள் இன்னமும் இருபது வருடங்கள் எதிர்ப்பை காட்டினாலும், அவர்களும் அழித்தொழிக்கப்படுகிறார்கள். பெருவின் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்டது மட்டுமல்ல, அவர்களது கலாச்சார அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. இன்றும் அவர்களது மொழியை, ஸ்பானியர்களுக்கு முந்தைய வரலாற்றை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. பூர்வகுடிகளின் வரலாற்று பதிவுகளை எல்லாம், கத்தோலிக்க குருமார்கள் சாத்தானின் வேலை என்றும், அவர்களது கோவில்களை எல்லாம் சாத்தானின் வசிப்பிடங்கள் என்றும் (ஆனால் அங்கிருக்கும் தங்கமும், வெள்ளியும் சாத்தானின் கறைபடாதவையாக இருக்கின்றன) கூறி ஒரு கலாச்சார அழித்தொழிப்பும் நடைபெறுகிறது. ஸ்பானிய குடியேற்றம் ஆரம்பிக்கிறது.
இந்தப் புத்தகத்தை எப்படி அதிர்ச்சி இல்லாமல் வாசிப்பது என்றே தெரியவில்லை. வாசிக்கும் போதெல்லாம், இந்தியாவை ஆங்கிலேயருக்கு பதிலாக ஸ்பானியர்கள் கைப்பற்றியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கேள்வி பயங்கரமாக முன் எழுந்து கொண்டிருந்தது. கோவாவில் நிகழ்ந்த அழித்தொழிப்புகளை ஒரு உதாரணமாக கொண்டால், இந்தியாவை சர்வநாசம் செய்திருப்பார்கள் என்று மட்டும் தெரிகிறது. மாறாக ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக இருந்ததற்கு மகிழ்வதா இல்லை நொந்து கொள்வதா என்றும் தெரியவில்லை.
Subscribe to:
Posts (Atom)
The Discovery and Conquest of Peru - Zarate.
பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...
-
I consider Vanathy as one of the most complex and intriguing character ever created in the Tamil novel world (OK, I still consider Yamini of...
-
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையா...
-
ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது. இந்த வருட புத்தக கா...