ஒரு கனவு

சற்று முன் ஒரு கனவு.

10 நாட்கள் விடுமுறை வருகிறது, எங்கு செல்ல என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.
நீண்ட கடற்கரை. ஓரமாக நடந்து கொண்டிருக்கிறேன்.
கரை முழுவதும் மக்கள் கூட்டம். சற்று உயரமான மேட்டில் நின்று பார்க்கிறேன்.
"யாழ்ப்பாணம்" என்று ஒரு குறி. "எப்படி இங்கே?" என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.
அப்போது ஒரு பெண். அந்த கூடத்தில் கையில் ஒரு கூடை நிறைய புறாக்கள் வைத்துக்கொண்டு வருகிறாள்.அவை விற்பதற்கு இல்லை. புறாக்கள் ஒன்றின் மீது ஒன்று மிதித்து கொண்டு இருக்கின்றன. கையில் இருக்கும் காமெராவில் பதிகிறேன். என்னை பார்த்தவுடன் கூட்டத்தில் மறைந்து விடுகிறாள்.
மெதுவாக நடக்கிறேன். ஓர் நகரம். பழைய கட்டிடங்கள். அடித்த வர்ணங்கள் மறைந்து போய், சுவரொட்டிகள் ஒட்டி, குண்டு துளைத்த செங்கல்களுடன் நிற்கும் கட்டிடங்கள்.
ஒரு பழைய வீடு. வாசலில் 'புராதன சின்னம்' என்று ஒரு குறி. உள்ளே நுழைகிறேன். மங்கிய ஓவியங்கள். ஒற்றை காலுடன் ஒருவர் 'இவை சோழ காலத்தவை' என்கிறார். நான் அவர் (இல்லாத) கால்களை பார்க்கிறேன். அவசர அவசரமாய் வெளியே வருகிறேன்.
நிறைய விளக்குகளுடன் பிரகாசமாய் ஒரு கட்டிடம். சற்று தயக்கத்துடன் வாசலில் நுழைகிறேன். ஓட்டல். வாசல் அருகே 'Weter' என்று ஒரு board. சலூன் கடைகளில் இருக்கும் பெரிய நாற்காலியில் ஆஜானுபாகுவான ஒருவர். தமிழனுக்கே உரிய உயரம். பெரிய மீசை. ஒரு லுங்கியில் மேலாடை இன்றி. சற்று தயக்கத்துடன், 'ஓர் போட்டோ எடுக்கலாமா? என்கிறேன்.
"சரி சார்"
"weter என்றால் என்ன" - நான்
"வரும் பயணிகளுக்கு அதோ அந்த ஈர துணியால் முகம் துடைப்பேன்."
"பயணிகள் வருகிறார்களா?"
"தெற்கில் இருந்து சொந்தம் தேடுபவர்கள், அரசியல்வாதிகள், இதோ நீங்கள்"
அவலத்தின் நடுவே பயணியாய் நிற்க வெட்கமாக இருக்க, அடுத்த கேள்வி.
புலிகள் பற்றி கேக்கலாமா என்று யோசிக்கிறேன். எங்கே ராணுவம்? என்று ஒரு கேள்வி வருகிறது. சுற்றி பார்க்கிறேன். கூட்டம் கூட்டமாக மக்கள்.

விழிக்கிறேன். மணி 6.05. பக்கத்தில் தூங்கும் மனைவி, பிள்ளைகளை பார்த்து சற்று தெளிவு.

தமிழகம் 'வேட்டைக்காரன்'ஐ பார்க்க தயாராகி கொண்டிருக்கிறது.

No comments:

Washington - Ron Chernow

Washington: A Life by Ron Chernow Thats two in a row - or almost in a row. After reading Chernow's 'Grant', wanted to follow ...