'இதற்கு முன்னும் இதற்கு பிறகும்'

மனுஷ்யபுத்ரனின் கவிதை நூல் வெளியிட்டு விழாவிற்கு போய் இருந்தேன். கவிதைகள் வாசிக்கும் மனநிலை எப்போதோ தொலைந்து போய் விட்டாலும் இது போன்ற நிகழ்வுகளின் நிழலில் எங்கேனும் கண்டெடுக்கலாம் என்று ஒரு சிறு ஆசை.
கல்யாண்ஜியும் கலாப்ரியாவுமே எனக்கு நவீன கவிதைகளை அறிமுகம் செய்தவர்கள்.

"...................
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை. "

போன்ற கவிதைகள் தந்த அனுபவத்தை இன்றும் வேறு எதுவும் தரவில்லை.
ஆனந்தின் 'காலடியில் ஆகாயம்' ஒரு புதிய உலகத்தை அறிமுக படுத்தியது. அந்த
சிறு தொகுப்பு நிதமும் ஒரு அனுபவம் தந்தது. விக்ரமாதித்யன் அறிமுகம் தவிர்க்க முடியாததாகியது.

"கைபட

தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்"

போன்ற கவிதைகள் கொடுத்த அதிர்வுகளும், மெல்லிய நகையுடன் வார்த்தைகள் உருவாக்கும் படிமமும் மயக்கியது. இதன் பிறகே பிரமிள், ஆத்மாநாம், பசுவய்யா முதலானவர்களை தேடி படித்தேன்.

மனுஷ்யபுத்திரன் அறிமுகம் சுஜாதாவின் மூலமாக வந்தது. 'என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருகிறார்கள்' படித்தேன். ஆனால், எனது கவிதை படித்தல் கிட்டத்தட்ட நின்று விட்ட தருணம் அது. நிறைய மாற்றங்களும், ஏமாற்றங்களும் நிறைந்த நாட்கள். வந்து விழும் எழுத்துகள் கடந்த காலத்தை நினைவுருத்துவதாக எண்ணி தமிழ் வாசிப்பதையே நிறுத்தி வைத்திருந்த நாட்கள்.

அதனால் தானோ என்னவோ இந்த புத்தக வெளியீடுக்கு போக தோன்றியது. விக்ரமாதித்தனும் கோணங்கியும் குற்றாலத்தில் நடத்திய கலாட்டாக்களை பற்றி கேள்விப்பட்டு இருந்த எனக்கு இந்த விழா ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு ராஜா பட்டி மன்றம் போல் நடந்த நிகழ்ச்சி. என்ன ஒரு தரப்பு மட்டுமே வந்து இருந்தது. வசந்த பாலன், தமிழச்சி தங்கபாண்டியன், சாரு, எஸ். ரா போன்றோர் ஏன் மனுஷ்ய புத்திரன் ஒரு பாப்லோ நெருடா போன்று உலகெங்கும் பேச படவில்லை என்பதையே பேசினார்கள். ஆளுக்கு ஒரு மூன்று கவிதைகளை வாசிக்கவும் செய்தார்கள்.

ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிதைகள் பற்றிய விவாதத்தை எதிர் பார்த்து சென்ற எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே. யார் அதிகமான Latin American, Russian பெயர்களை பேசுவது என்பதில் ஒரு சிறு போட்டியே நடந்தது. Marguerite Duras, Lenin, Dostoevsky, Tolstoy, Lorca, Borges, Neruda, Mayakovsky போன்ற சில பெயர்கள் நினைவில் இருக்கிறது. இந்த பட்டியலில் லெனின் என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை. பிரபஞ்சன் மனுஷ்ய புத்திரன் டுராஸ்க்கும் Dostoevsky கும் நடுவில் இருப்பதாக கூறினார். ஒரு வேளை எனது சிறு இலக்கிய அறிவிற்கு அது எட்டவில்லை என்றே நினைக்கிறேன்.

.பு பேசும் பொழுது சக கவிஞர்கள் யாரும் வராதது பற்றி கொஞ்சம் வருத்த பட்டார். அதே வரியில், ரா. பார்த்திபன் வரவில்லை என்றும் வருத்தபட்டு கொண்டார். நிஜமாக அவர் யாரை குறித்து வருந்தினார் என்று தெரியவில்லை. நா. முத்து குமாரும், தமிழச்சியும் 'போன்ற' வேறு சில கவிஞர்களை எதிர் பார்த்தாரோ என்னவோ.

ஆனால், சிறிது நாட்களாய் தளர்ந்து கிடந்த மனதில் ஒரு உற்சாகத்தை இலக்கியம் மட்டுமே கொடுக்க முடியும் என்பதை உணர்தேன். விழா முடிந்து இரவு 10 மணிக்கு மவுண்ட் ரோட்டில் கார் கண்ணாடிகளை திறந்து விட்டுக் கொண்டு, முகத்தில் அறையும் சிலீர் காற்றின் நடுவே மனதிற்கு பிடித்த பாடலை அலற விட்டு கேட்டுக்கொண்டு வந்த போது ஒரு கவிதைக்குள் இருந்ததை உணர்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு. அதற்கு மட்டுமாவது நன்றி சொல்ல வேண்டும்.

1. நடந்து முடிந்த விழாவிற்கு பிறகு, வெளியில் வைத்திருந்த வெளியிடப்பட்ட புத்தகத்தை வாங்க தைரியம் வரவில்லை. எனவே முதலில் Lorca, Borges எல்லாம் படித்துவிட்டு .பு விடம் வரலாம் என்று இருக்கிறேன்.
2. அடுத்த வாரம் எஸ்.ராவின் 'துயில்' புதின வெளியீடு இருக்கிறது. ஒரு ஐந்து நிமிடம் தலை காட்டிவிட்டு புத்தகத்தை மட்டும் வாங்கி கொண்டு ஓடி வந்து விடலாம் என்று ஒரு எண்ணம்.

No comments:

துப்பறியும் சிவாஜி

சிவாஜி கணேசனுடன் நேற்றிரவில் துப்பறிய சென்றிருந்தேன். சிவாஜி கணேசன் துப்பறியும் கதையின் நாயகர் அல்லர். அது ஜெயசங்கர் ஆகும். ஆனாலும...