இருண்ட உலகம் - மணிரத்னத்தின் சினிமா

இன்னும் ஒரு மணிரத்ன சினிமா. வந்தவுடன் 'நீங்க பார்க்கலையா?' என்று எழுப்பப்படும் கேள்விகள். ஆனந்த விகடனில் மணி எப்படி காலத்திற்கு ஏற்ப 'update' செய்து கொள்கிறார் என்று சிலாகித்து விமர்சனம்/ பேட்டிகள்.

கடைசியாக நான் திரைஅரங்கில் பார்த்த மனிரத்ன படம் 'இருவர்'. அதன் பிறகான கசப்புணர்வில் திரையில் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். 'இருவரின்' நேர்மையின்மையும், உண்மை திரிபும் அதை எது வென்று வகுக்க முடியாத ஒரு துளையில் இட்டுவிட்டது.

'அக்னி நட்சத்திரம்' முதல் 'இருவர்' வரை முதல் நாள் திரைஅரங்கில் பார்த்து வந்த மணியின் படங்கள் கவர்ச்சி இழந்தது அவற்றின் ஜிகினாக்களின் உள்ளே இருந்த அரசியலும், அதன் அடிப்படை நேர்மையற்ற திரை வர்த்தகமும் மட்டுமே.

தொழில் நுட்ப நேர்த்தியில் ஒரு வீச்சு காட்டிய 'அக்னி நட்சத்திரம்' என் பள்ளி நாட்களில் வந்தது. சிவகாசி 'பழனியாண்டவரில்' கிட்டத்தட்ட எல்லா நாட்களும் பெஞ்சு டிக்கெட்டில் படுத்துக் கொண்டே ரசித்த படம். 'இதயத்தை திருடாதே'வும் 'அஞ்சலி'யும் உணர்வுகளின் ஊடே பார்த்த படங்கள். பாடல்கள் , வசனங்கள் என ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்த படங்கள்.

மௌன ராகம் படம் வெளியாகி பல நாட்கள் கழித்தே பார்த்தேன். 'தளபதி' ரஜினி படமாக இருந்ததாலும் பார்த்தேன். 'ரோஜா' பார்த்துவிட்டு தேச பக்தியில் திளைத்திருந்திருக்கிறேன். ஆனால் 'திருடா திருடா'விற்கு அப்புறம் நான் திரையில் பார்த்த ஒரே மணிரத்னம்  படம் 'இருவர்'.

கதை களங்களை புத்திசாலிதனமாக அமைப்பதன் மூலமாகவும் கதையில் தேச பற்று போன்ற ஜிகினாக்களை தொங்க விட்டு தொழில் நுட்ப நேர்த்தி காட்டுவதன்றி வேறொன்றும் இல்லாமல் போனதை உணர்ந்த போது பெருமளவு ஏமாற்றப் பட்டதாக உணர்ந்தேன்.

மணிரத்னத்தின் படங்கள் ஒரு template மாத்திரமே உள்ளவை. ரோஜாவோ உயிரேவோ பம்பாயோ இந்த templateஐ உணரலாம். அந்த படங்களின் வர்த்தகம் மட்டுமே அந்த templateயை நியாயபடுத்துபவை. பிரச்சினைகளை பின் தள்ளிவிட்டு தனி மனித கதைகளை சொல்ல வேண்டுமெனில் இந்த பின்னணி தேவையில்லை. அந்த பின்னணி ஒரு sensation உருவாக்கவே அன்றி அதை பற்றிய இயக்குனரின் நேர்மையான பார்வை அல்ல.

உதாரணமாக 'கன்னத்தில் முத்தமிட்டால்' கதையை எந்த பின்னணியிலும் எடுக்கலாம். பம்பாயோ காஷ்மீரோ அந்த கதையை ரொம்பவும் சுலபமாக மாற்றிவிடலாம். நக்சல் பின்னணியும் மலையாள வடகிழக்கு பின்னணியும் பொருந்தும். பின் எதற்கு 'விடுதலை புலிகளும், இலங்கையும்? காரணம் மணி அதற்கும் இந்த பின்னணிகளில் படம் எடுத்து விட்டார். இன்னொருமுறை எடுத்து கையை சுட்டுக் கொள்ள அவர் என்ன முட்டாளா? எனவே இன்னுமொரு 'sensational' பின்னணியாக மட்டுமே இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை நேர்மையின்மை, பிரச்சினையின் தனது பார்வை சொல்லாது ஒரு 'prop' ஆக அதை கொண்டு வருவது மணியை வெறும் வியாபாரியாக மட்டுமே ஆக்கும்.

'இருவர்' - திராவிட வரலாற்றின் பதிவாக இருக்கும் என்று எண்ணி மதுரை 'சினிப்ரியா'வில் வெளியான இரண்டாம் நாள் பார்த்த 10 பேரில் நானும் ஒருவன். அந்த படத்தின் நேர்மையின்மை , வரலாறும் இல்லாமல் கதையாகவும் இல்லாமல் செய்யப்பட்ட ஒரு குழப்பத்தில் கிட்டத்தட்ட மனமுடைந்து வெளி வந்தேன். நம் பதின் பருவ heroக்கள் அவர்களின் பீடத்தில் இருந்து வீழும் போது ஏற்படும் மன வலி அளப்பரியது.

மணி ஒரு வியாபாரியாக , ஷங்கர் போன்று, தனது படத்தின் வியாபரமே முக்கியம் என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டால் ஒரு வேளை அந்த படங்களை பார்க்க ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு அறிவு ஜீவியாக தன்னை கட்டமைத்து கொண்டிருக்கும் வரை மணிரத்னத்தின் இருண்ட வியாபார உலகத்தில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை.

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...