முள்ளால் எழுதிய ஓலை

முள்ளால் எழுதிய ஓலை முள்ளால் எழுதிய ஓலை by உ.வே.சாமிநாதையர்
My rating: 5 of 5 stars

தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் 'என் சரித்திரம்' எனக்கு பிடித்த நூல்களில் ஒன்று. 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளின் தமிழ் வாழ்வை ஆவண படுத்திய நூல் அது. எனவேதான் காலச்சுவடில் இருந்து அவரின் கட்டுரை தொகுப்புகள் ஐந்து பகுதிகளாக வருகின்றன என்றவுடன் இந்த புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தக பட்டியலில் சேர்த்து விட்டேன்.

அந்த ஐந்தில் நான் முதலில் படித்தது 'முள்ளால் எழுதிய ஓலை'. பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வு சம்பவங்களின் தொகுப்பான இந்நூல் 18-19ம் நூற்றாண்டு வாழ் தஞ்சை தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவண படுத்துகிறது. இந்த நூற்றாண்டுகளின் பெரும்பாலான தரவுகள் 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் திராவிட, கம்யூனிச அரசியலின் பின் புலத்தில் எழுதப்பட்டவையே. அந்த அரசியல் தாக்கத்தின் முன்னர் தொகுக்க பட்ட கதைகள்/நிகழ்வுகள் வெகு அரிதாகவே இருக்கின்றன. இந்த ஒரு காரணமே இந்த தொகுப்பை ஒரு முக்கிய தொகுப்பாகிறது.

உ.வே.சாவின் அரசியல் என்ன? நான் படித்த வரை அவரின் அரசியல் தமிழாகவே இருக்கிறது. அவரின் ஒவ்வொரு செயலும் தமிழின் வரலாற்றை பாதுகாப்பதும், பேணுவதும் மட்டுமே. சில கதை/கட்டுரைகளில் அந்த கால சாதி அரசியலை அவர் கோடிக் காட்டினாலும் அதை ஒரு விமர்சனமுமின்றி தாண்டி போகிறார். அந்த நிகழ்வை ஆவண படுத்துதல் அன்றி அதன் அரசியலில் நுழைய மறுக்கிறார்.

இந்நூலில் அவர் காட்டும் உலகம் தமிழ் சமூகம் சிறு சமஸ்தானங்களாக இருந்த காலகட்டம். வெள்ளையர்கள் பட்டும் படாமல் 'கிஸ்தி' வசூல் செய்து கொண்டு தமிழ் அரசர்/சமஸ்தானாதிபதிகள் தங்களுக்குள் சண்டை/சச்சரவுகளுடன் இருந்த காலம். இந்த நூலில் பெரும்பாலான கதைகள் சொக்கம்பட்டி (இது திருநெல்வேலி அருகில் உள்ளது) சமஸ்தானாதிபதி பொன்னம்பலம் பிள்ளை, ராமநாதபுர சேதுபதி அரசர்கள், தஞ்சை சரபோஜி ராஜா முதலானோர் பற்றிய நிகழ்வுகளும், உ.வே.சா கேட்ட செவி வழிக் கதைகள் சிலவற்றின் தொகுப்பாகும்.

புத்தக பெயர் உள்ள கதை மருது பாண்டியர் பற்றிய ஒரு கதை. இக்கதையில் வரும் கிராமம் இன்னமும் இருப்பதாய் உ.வே.சா கூறுகிறார். ஒவ்வொரு கதை/நிகழ்வுக்கு பின் குறிப்பில் அதன் கதை மாந்தரின் இன்றைய நிலை குறித்து ஒரு குறிப்பும், அந்த கதை/நிகழ்வு அவருக்கு யாரால், எப்போது கூறப்பட்டது போன்றவற்றை சொல்கிறார். மருது பாண்டியர் பற்றிய மற்றும் ஒரு கதையும் பதிவு செய்கிறார்.

பெரும்பாலான கதை/நிகழ்வுகள் தஞ்சையின் நில சுவான்தார்களாக இருந்த பிராமணர்களை பற்றி இருந்தாலும், அவர்கள் கிராம சூழ்நிலை, வெள்ளையர்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு, மற்றைய சாதிகளுடன் இருந்த உறவு முதலியவற்றுக்கு பதிவு பெறுகிறது. பறையருக்கு தெருக்கோடியில் மரக்காலில் அன்னம் வைப்பதை கூறுகிறார்.

கோயிலில் தாசிகளை முதுகில் கால் ஏற்றி, பிரம்பால் அடித்து தண்டனை கொடுப்பதையும் அதை எந்த சலனமுமின்றி ஒரு கூட்டம் வேடிக்கை பார்ப்பதையும் பதிவு செய்கிறார்.ஒரு விதத்தில் இந்த புத்தகத்தை படிப்பதும் அது போன்று எந்த முன் முடிவும் இன்றி வேடிக்கை பார்த்தல் போன்றதே. இன்றைய அரசியல் முன் முடிவுகளோடு வாசிக்காது ஒரு வரலாற்று ஆவணமாகவே வாசிக்க வேண்டும்.

மொத்தத்தில் தமிழ் ஆர்வலர் அனைவரும் வாசிக்கவேண்டிய தொகுப்பு.

View all my reviews

No comments:

Washington - Ron Chernow

Washington: A Life by Ron Chernow Thats two in a row - or almost in a row. After reading Chernow's 'Grant', wanted to follow ...