கபாலி

1999இல் நான் முதல் முறையாக KL எனப்படும் கோலா லம்பூர் சென்றேன். KLஇன் புது விமான நிலையத்தில் என் கவனத்தை முதலில் ஈர்த்தது அங்கே , low skilled வேலைகள் என்று சொல்லப்படும் அனைத்திலும் தெரிந்த தமிழ் முகம்கள். துப்புரவு பணியாளர்கள், உணவகத்தில் சுத்தம் செய்பவர்கள் என எல்லோரும் தமிழர்கள். கல்லாவில் இருப்பவர், போலீஸ் போன்றவற்றில் தமிழ் முகங்கள் இல்லை.
அது வரை அமெரிக்காவில் இருப்பவர்களை விட மெத்த படித்த மேதாவிகளாய் அங்கு சென்று அமெரிக்கா பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் இந்தியர்களை பற்றி மட்டுமே தெரிந்திருந்த எனக்கு, இங்கே இன்னொரு அந்நிய நாட்டில், அமெரிக்காவில் இந்தியர்கள் , மெக்ஸிகோ மக்களை எப்படி நினைக்கிறோமோ அப்படியான ஒரு சூழலில் தமிழர்களை பார்த்தது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. அன்று அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த 'அபிராமி' என்ற பெண்ணுடன் பேசினேன். கொஞ்சம் வித்தியாசமான தமிழில் 'தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. சினிமா பாப்போம்' என்றெல்லாம் பேசினார். அங்கிருந்து ஒரு கார் எடுத்துக் கொண்டு KL சென்றேன்.
எனது காரோட்டி ஒரு சீனாகாரர். அருமையாக தமிழ் பேசினார். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் மலேசியாவின் பல பிரச்சினைகளையும் அதற்கு அரசு எடுத்து வரும் விஷயங்களையும் பற்றி பேசினார். தமிழர்களுக்கும் சீனர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை , மலாய்களின் விவகாரங்கள் மட்டுமே மலேசியாவின் பிரச்சினைகளுக்கு காரணம் என்றார். KL எனக்கு சென்னையை போன்றே தோன்றியது. அகலமான ரோடுகள், உயரமான கட்டிடங்களை எடுத்து விட்டால் KL இன்னொரு சென்னைதான். அதனாலேயே அங்கு திரும்ப திரும்ப சென்றேன்.
'நாடு விட்டு நாடு வந்து'. முத்தம்மாள் பழனிசாமியின் கதை மலேசியா தோட்ட தமிழர்களின் வாழ்வு கதையாக இருந்தது. அதற்குள் 'NEP ', 'பூமி புத்ரா' போன்றவற்றை பற்றி படித்து வைத்திருந்தேன். பினாங்கு, தண்ணீர் மலை போன்ற இடங்களுக்கு என்னை ஈர்த்தது இந்த கதைகளே.
'கபாலி' ஒரு ரஜினி படம். இத்தனை சமூக பிரச்சினைகளை கொண்டிருக்கும் மலேஷியா தமிழர்களை பற்றிய படம். ரஜினி இருப்பதால் அந்த பிரச்சினைகள் அங்கே இல்லாமல் போக போவதில்லை. ஆனால் இங்கிருக்கும் தமிழர்களுக்கு இப்படி ஒரு நாடும், அந்த நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளும் தெரிய வைப்பதில் , அந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்ததில் ரஜினி நிற்கிறார்.
நான் ரஜினி படங்களுக்கு விமர்சனங்கள் எழுதியதில்லை. ரஜினி ரசிகனாக இருந்தாலும், ரஜினியின் படங்கள் வெறும் வணிக கேளிக்கை படங்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இருந்ததில்லை. அந்த கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு மட்டுமே நான் ரஜினியின் படங்களை பார்ப்பேன். எனவே, கபாலி ஒரு வித்தியாசமான படமாக தெரிகிறது. வெறும் கேளிக்கையாக இல்லமால் ஒரு மக்களின் பிரச்சினையை முன் வைக்கிறது. அந்த பிரச்சினைகளை புரிந்து கொள்வதில், குறைந்த பட்சம் அந்த மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளை வெளிக் கொணர்வதில் ஒரு முதலடி எடுத்து வைக்கிறது.
இந்த படத்தின் விமர்சனங்களில், படத்தின் வணிகம் எப்படி பல சிறு படங்களை பாதிக்கிறது, அதன் மூலமாக பாதிக்கப்படும் தொழிலாளிகள் என்பது ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டின் போதும் வைக்க படுவதே. ஆனால் இந்த முறை இத்துடன் நம் தமிழ் தேசிய வாதிகள் சேர்ந்து கொண்டார்கள். இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. ரஜினி தமிழன் இல்லை என்பது ஒன்று. மூன்று தலைமுறைகளாக இருந்தும் இன்றும் இரண்டாம் தர குடிமக்களை போல் நடத்தபடும் மலேஷியா தமிழ் மக்களுக்கு இது நன்றாகவே புரியும். கடல் கடந்து வாழும் தமிழர்களின் பிரச்சினைகளை பேசியதற்காக அவர்கள் சந்தோச படவேண்டும். இன்னொன்று ரஞ்சித்தின் அரசியல். சாதி அரசியலை ஆதரிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம்தான். வெறும் தட்டையான அரசியல் பிரச்சினைகள் புரிதலுடன் இருப்பவர்களுக்கும், உலகை 'கருப்பு/வெள்ளை' என பார்ப்பவர்களுக்கும் இன்னமும் கஷ்டமே.
இது போன்ற ஒரு விமர்சனத்தை ஒரு ரஜினி படத்திற்கு எழுதுவேன் என்று நானே நினைத்ததில்லை. அதற்கு ரஞ்சித்துக்கு நன்றி சொல்ல வேண்டும். ரஞ்சித் ஒரு சுவாரசியமான, கவனிக்க படவேண்டிய இயக்குனர் என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறார்.
மற்றபடி வெறும் கேளிக்கை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக ஷங்கர் தன் பாணியில் ஒன்றை எடுத்து வருகிறர். அது வரை, 'கபாலி' தந்த நல்லுணர்வு நிலைக்கும்.
மகிழ்ச்சி!

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...