காலா - அசுத்தத்தின் அரசியல்

பார்ப்பதா வேண்டாமா என்று யோசித்து வியாழன் இரவு வெள்ளி டிக்கெட்கள்  இருப்பது கண்டு 'காலா' பார்த்தோம்.

பா. இரஞ்சித்தின் அரசியல் என்ன என்பது எல்லோருக்கும் ஒன்று. இந்துத்துவத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல். 'காலா' பேசும் அரசியலும் அதுவே.

இந்து சாதி பிரிவுகளின் கட்டமைப்பு சுத்தம் x அசுத்தம் என்ற dichotomyஇன் கட்டுமானமே. பிராமணன் தலையாகவும் சூத்திரன் பாதமாகவும் இருப்பதன் தர்மமும் இதுவே. அதே போன்றே வெள்ளை x கருப்பு என்பதும். சாதிய அடுக்கின் கீழே கருப்பு - மேலே செல்ல செல்ல வெளுப்பாகிறது.  இந்த பின்னணியில் நில உடமை பிரச்சினைகளை பேசுகிறது - 'காலா'.

இது இரஞ்சித்தின் படம். படத்தின் விமர்சனங்கள் , விவாதங்கள் எல்லாம் அதை சுற்றியே நடக்கிறது.திரைப்படத்தின் இந்த அரசியல் மற்ற எல்லா விஷயங்களையும் விட முன் நிற்பதே இதன் சான்று.

சாதீய பெருமை பேசும் படங்கள் - குறிப்பாக இடை நிலை சாதி பெருமை பேசும் படங்கள் - பெரும்பாலும் அவை மட்டுமே. ஒரு சாதாரண கதையின் ஊடே ஊர் பெரிய பண்ணை/ நாட்டாமை/ தலைவர் தன பெருமைகளை (தன் சாதியின் பெருமை) பேசி பல தடைகளை தாண்டி வெற்றி பெறும் template படங்கள். இரஞ்சித் , இதிலிருந்து விலகி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை முன்வைக்கிறார். அதில் வெற்றி பெருகிறாரா என்பது விவாதத்திற்கு உரியதாக இருந்தாலும் , இந்த விலகலே இரஞ்சித்தின் வெற்றியாகிறது.

'காலா' பேசும் நிலம் உரிமை பிரச்னை - இன்று இம்மக்கள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை. சென்னையிலேயே சைதையிலும் வடசென்னையின் பல பகுதியிலும் - அடையார், கூவம் நதியின் ஓரம் வசிக்கும் மக்கள் இன்று கண்ணகி நகர், செம்மஞ்சேரி என ஊரின் வெளியே அதிகாரத்தின் மூலம் நகற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது ஒவ்வொரு பெருநகரத்திலும் , அழகுபடுத்தல், சுத்தம் போன்ற காரணங்கள் காட்டப்பட்டு இம்மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறை.

இதுவே காலாவின் போராட்ட மய்யம். இந்த தாராவி மக்களின் வாழ்க்கை, கஷ்டங்கள், அவர்களுக்கு காலா சேட் மூலம் கிடைக்கும் சுயமரியாதை, அதன் பின்னான போராட்டத்தின் வன்முறை என்று கதை செல்கிறது.

இந்த போராட்டத்தின் இன்னொரு முனையில் - சுத்தமான மும்பையை வேண்டும் வலது சாரி இந்துத்துவத்தின் முகம். இது இன்றைய இந்தியாவின் நிதர்சனம் - ஆனால் அதை முன்னிறுத்தி இரஞ்சித் தன அரசியலின்  மறுமுனையை தெளிவாக்கி விடுகிறார். தன் நாயகனை ராவணன் என்று கூறுவதன் திராவிட தெளிவு - திராவிட சித்தாந்தத்தின் இந்த முனை ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் இணைகிறது.

அம்பேத்கார், புத்தர், காலாவின் வீட்டிற்கு எதிரே உள்ள பீப் கடை என்று அடையாளபடுத்துதல் தெளிவாக இருக்கிறது. புத்தகங்கள் படமெங்கும் விரவிக் கிடக்கின்றன. ஆதவன் தீட்சண்யாவின் 'மீசை என்பது வெறும் மயிர் ', டேனியல் படைப்புகள் , ராவண காவியம் என இரஞ்சித் தன அரசியலை எந்த குழப்பமும் இன்றி முன்வைக்கிறார்.

ஆனால் 'அட்டகத்தி' 'மெட்ராஸ்' போன்ற படங்களின் தெளிவான வாழ்வியல் கதை தன்மை இன்றி வெறும் சாகச நாயக படமாக பல இடங்களிலும் இருப்பதே 'காலா'வின் குறை. கரிகாலனின் காதலியாய் வரும் சரினாவின் பாத்திரம், அந்த ராப் பாடும் பொடியன்கள், நண்பர்கள் என பலருக்கும் படத்தில் தெளிவான பாத்திர படைப்புகள் இல்லை. சந்தோஷ்  பின்னணி இசை நன்றாக இருந்தாலும், பாடல்கள் ஏதும் சிறப்பாக இல்லை.

தன சித்தாந்தத்திற்கு நேர் எதிர் சித்தாந்தத்தை முன் வைக்கும் படத்தில் சமூக விரோதியாக நடித்திருப்பதற்க்காக ரஜினியை பாராட்டலாம். சில இடங்களில் இதனாலேயே அவரின் வசனங்கள் உணர்ச்சிவசப்பட வைப்பதற்கு பதிலாய் யோசிக்க வைக்கிறது.

'காலா' பேசும் அரசியல்,  நம் சமகால அரசியல். ஒரு திரைப்படமாக இதை வடிவமைத்ததில் குறைகள் இருந்தாலும், பேசாப் பொருளை பேசியது பாராட்ட வேண்டியது. இரஞ்சித் நாயக பிம்ப சமரசங்களை விடுத்து எடுப்பராயின், தமிழ் சினிமாவிற்கு இன்னும் சில நல்ல படங்கள் கிடைக்கும்.

1 comment:

Unknown said...

Impartial constructive criticism.

புலியின் நிழலில்

புலியின் நிழலில் by Namdeo Nimgade 'புலியின் நிழலில்' நாம்தேவ் நிம்கடேயின் வாழ்க்கை வரலாறு. கைர்லாஞ்சி படுகொலைகளின் பின்னணியு...