புலியின் நிழலில்

புலியின் நிழலில்புலியின் நிழலில் by Namdeo Nimgade


'புலியின் நிழலில்' நாம்தேவ் நிம்கடேயின் வாழ்க்கை வரலாறு.

கைர்லாஞ்சி படுகொலைகளின் பின்னணியுடன் துவங்குகிறது. தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத சாதிகளின் பின்னணியும் கொண்டு எந்தவித பொருளாதார பின்னணியும் இல்லாது - சமூக விழிப்புடன் தன பங்கையும் ஆற்றி வாழ்வில் ஒரு நிலைக்கு வருவது என்பது அதில் ஒரு பாதி பின்னடைவை கொண்டு முன்னுக்கு வரும் எவருக்கும் கொஞ்சம் புரியும்.

பாபாசாகேப் அம்பேத்கருடனான தன்னுடைய உறவை ஆவணப்படுத்தும் நோக்கமே தன்னை எழுத வைத்ததாக சொல்லுகிறார் நாம்தேவ். எனக்கும் இந்த புத்தகத்தில் பிடித்தது அம்பேத்கர் என்னும் மனிதரே. அவரின் பிம்பங்கள் இன்றி ஒரு அளப்பரிய தலைவராய் வருகிறார்.

சாதி பற்றிய எந்த உரையாடலும் அரசியல் சார்ந்தே நடக்கிறது. இந்த புரிதல் முக்கியமானது. இந்த உரையாடல் நிகழாமல் - நம் நிலையிலும் கீழாய் ஒரு உலகம் தினசரி அவமானங்களையும், வன்முறையையும் எதிர்கொண்டு இயங்குகிறது என்ற விழிப்புணர்வு வராது இந்த உரையாடல் முழுமை பெறுவதில்லை. இந்த உணர்வு வரவிடாமல் இருக்கவே ஊரும் சேரியும் பிரிக்க படுகிறது. சாதியத்தின் கொடூர நிதர்சனம் பூசி மொழுக படுகிறது.

இன்றைய நிலை இப்படி இருக்க நாம்தேவின் ஸாத்கவ் கிராமம் 100 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நாம்தேவ் ஓரிடத்தில் சொல்லுகிறார். உயர் சாதி கல்யாண மாப்பிள்ளை - பெண் ஊருக்கு வண்டியில் போகிறார். இருட்டுவதற்குள் போய்விட வேண்டும் - அவர்கள் வண்டிக்கு முன் கீழ்சாதியை சேர்ந்த இருவர் ஓட வேண்டும். அவர்கள் உயர்சாதி கூட்டத்திற்குள் வந்துவிட கூடாது. எனவே மாடுகளை விட வேகமாய் ஓடவேண்டும். பெண் ஊர் சேர்ந்தவுடன் மாட்டு தொழுவத்தில் தூக்கம் - தூக்கி எறியப்படும் இலைகளை பொருக்கி சாப்பிட்டு கொள்ளவேண்டும். இப்படி மனிதனை மாட்டிலும் கீழாய் நடத்திய சாதி முறையை இப்போதும் எங்கும் தூக்கிக் கொண்டு அலைகிறோம்.

இப்படி இலை பொறுக்கும் நாம்தேவ் , பதினாலாவது வயதில் பள்ளிக்கு செல்ல தொடங்குகிறார். அங்கிருந்து நாகபூரில் கல்லூரி. அம்பேத்கரின் இயக்கத்தில் இணைகிறார். நாகபூரிலும் எதிர்கொள்ளும் சாதிய அடக்குமுறைகளை தாண்டி படித்து முடித்து - IARIஇல் வேலைக்கு சேர்கிறார். PhD பண்ண விஸ்கான்சின் பல்கலைக்கழகம் அழைக்கிறது. முனைவர் ஆகி , அம்பேத்கரின் பாதையில் பௌத்தம் தழுவுகிறார்.

'மதம் மனிதனை மிருகமாக்கும் - சாதி அவனை சாக்கடையாக்கும்' என்று சொன்ன பெரியாரும் , 'கற்பி, ஒன்றுசேர், போராடு ' என்ற அம்பேத்கரும் இணையும் புள்ளி - கல்வி. சாதீய கீழ்மையிலுருந்தும், பொருளாதார கீழ்மையிலுருந்தும் கல்வி மட்டுமே வெளிக்கொணர்கிறது. அதை மறுப்பதன் மூலமே சாதீயம் சாத்தியமாகிறது. நாம்தேவ் வகுப்பறையின் வெளியில் நின்று பாடம் கேட்கிறார் - உயர் சாதி மாணவனைவிட அதிக மதிப்பெண் பெற்றதற்கு அடித்து தூக்கி போட படுகிறார். அதையும் தாண்டி படித்த ஒவ்வொரு நாம்தேவிற்கும் ஈடாய் வேறு எத்துணை பேர் கொலை செய்யப்பட்டும், திரும்ப கிராமங்களுக்கும் சென்றிருப்பார்கள் என்று தோன்றாமல் இல்லை.

நாம்தேவின் அம்பேத்கர் வெகு சன சித்தரிப்பில் இருந்து விலகி ஒரு உயரிய தலைவராய், எப்போதும் தான் நம்பிய ஒன்றை வலியுறுத்தும் நபராய் வெளிவருகிறார். தன படிப்பின் மீதான நம்பிக்கை அவரை ஒரு பெரும் தலைவராய் நிலை நிறுத்துகிறது. நாம்தேவ் அவரை தன் தலைவராய் காண்கிறார். அவரது அரசியல் அதிலிருந்தே வருகிறது. கல்வியின் முக்கியத்தை அம்பேத்கரை பார்த்தே வழி நடக்கிறார்.

இத்தகைய புத்தகங்கள் சொல்வது என்னை பொறுத்த வரை ஒன்றே. சாதிய ஒழிப்பு என்பது அனைவரும் படிப்பதனால் மட்டும் வரப்போவதில்லை. அதையும் தாண்டிய மனிதம் வரவேண்டியும் இருக்கிறது. 

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...