பிரபஞ்சன் - நினைவுகள்

பிரபஞ்சன் மறைவின் செய்தி இன்று மாலை கேட்ட பொழுது என் பதின்ம வயதின் ஒரு நினைவு உதிர்ந்துவிட்ட உணர்வு.

'வானம் வசப்படும்' தொடராய் வந்த பொழுது வாசித்தது நினைவுக்கு வந்தது.  பிரபஞ்சனா அல்லது பிரஞ்சு பாண்டிச்சேரியின் மீதான ஈர்ப்பா என்று புரியாத நிலையில் வாசித்த நாட்கள். சென்னை வந்து சேர்ந்த நாட்களில் பாண்டி ஈர்த்தத்திற்கு இதுவே காரணம்.

பிரபஞ்சனின் எழுத்துக்களில் இருக்கும் மென்மை கலந்த அன்பு மனத்திற்கு தந்த அமைதி விவரிக்க முடியாது. ஒவ்வொரு நாவலின் பெண் கதாபாத்திரங்களும் அன்பின் பிரதிகளாகவே இருந்தார்கள். அவரின் எழுத்தே அந்த அன்பின் ஊற்றாய் இருந்தது.

அந்த அன்பின் வழியே மட்டுமே அவர் பெண்களையும் பார்த்தார். அதனாலேயே அவரால் பெண்களின் நிலையை உணர்ந்து எழுத முடிந்தது. பெண்களை புனிதத்திற்கும் வேசித்தனத்திற்கும் இடையே ஊசலாடவிடும் கலாச்சாரத்தை விமர்சிக்க முடிந்தது.

"மனைவி என்பவள் இங்கு துணை இல்லை ; சரி சமம் இல்லை; மாறாக அடுப்பறை அரசி ; படுக்கை அறை பத்தினி.
நமது திருமணம் பெண்களை கொன்றொழித்துவிட்டது. "

குடித்துவிட்டு கழுத்தை நெறிக்கும் கணவன்களோடு இன்னமும் வாழ்ந்து  கொண்டிருக்கும் பெண்ணிற்கு புதிய அறம்  விதைக்க வேண்டும் என்று சொல்ல முடிந்தது.

'இன்பக்கேணி ' நெடு நாள் கழித்து வாசித்த ஒன்று. ஆயியின் அன்பின் கேணியாய் இருந்த அந்த கதை பின்னொரு நாளில் பாண்டிச்சேரியில் ஆயி மண்டபத்தை தேடி போய் பார்க்க வைத்தது.

'மரி என்கிற ஆட்டுக்குட்டி' கற்றுக் கொடுத்த மனித நேயம் , அன்பின் வீர்யம் எல்லாம் கொஞ்சம் மனிதத்தையும் கூடியவரை பிறரிடம் அன்பையும் செலுத்த கற்றுக்கொடுத்தது.

பிரபஞ்சனை பற்றி எழுத வேண்டுமெனில் அன்பை தவிர்க்க முடியாததே அவர் எழுத்து வாழ்வின் சாராம்சமாகும். பிறிதொருமுறை அவரின் எல்லா நாவல்களையும் வாசிக்க ஒரு காரணமாக அவரது மரணம் இருக்கும்.

No comments:

Spider-man: Far from home - Not a Review

While watching the movie - 'Spider-man: Far from home' - over the weekend, I was thinking of the way the entire 'Avengers' ...