அசுரன் - சாதியை பேசுதல்.

அம்பேத்கர் சாதிய அடுக்கை ஒரு நான்கு மாடி கட்டிடத்திற்கு ஒப்பிடுகிறார். இடையே எந்த படிகளும் இல்லாத கட்டிடம். மனிதனின் இயற்கையான சுய முன்னேற்றத்திற்கு எந்த வழியும் இல்லாத கட்டடம். யாரும் மேலும் செல்ல முடியாது. கீழேயும் வர முடியாது.

நான் அம்பேத்கரை படிக்க ஆரம்பித்தது ஒரு 10-15 வருடங்களுக்குள் இருக்கும். அதற்குள் காந்தியில் ஆரம்பித்து மார்க்ஸ் வரை படித்து விட்டேன். இன்றைய இந்தியாவில் அம்பேத்கரை வாசிப்பது என்பது மார்க்சுக்கு பின் நிகழ்வதை சாதிய அரசியலின் வெற்றி எனலாம். பள்ளியிலோ கல்லூரியிலோ - காந்தி, நேரு  தவிர்த்து அம்பேத்கர் ஒரு அடிக்குறிப்பாய் மட்டுமே இருக்கிறார். இந்தியாவின் உண்மையான அடித்தளத்தை பற்றிய அறிமுகம் அம்பேத்கரில் இருந்தே தொடங்க முடியும்.

அசுரன் - இந்த புரிதலை, இந்த கட்டமைப்பின் அநீதியை முன் வைக்கிறது. தென் தமிழகத்தின் கரிசல் காடு - அங்கு ஒரு சிறு காட்டுடன் வெள்ளாமை செய்யும் குடும்பம். அந்த காட்டை கேட்கும் உள்ளூர் நாயக்கர் - அதன் காரணமாய் நிகழ்த்தப்படும் வன்முறைகள்தான் கதை. இதில் கீழ்வெண்மணி கொலைகள், வட தமிழகத்தின் செருப்பு அரசியல் எல்லாம் பேசப்படுகிறது.

சாதிய பெருமை என்பது இங்கு இயல்பாய் நிகழ்த்த படுகிறது. இதன் உளவியல் எவ்வளவு நுண்ணியமானது என்று வியந்திருக்கிறேன். இந்த அடுக்கு - எல்லா நிலையிலும் தனக்கு கீழிருப்பவனை சுரண்டுவதை நியாயப்படுத்துவதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இந்த சுரண்டல் கம்யூனிசம் பேசும் சுரண்டல் அல்ல. இங்கு ஒரு நாடாரும், பள்ளரும் தொழிலாளியாய் ஒன்றிணைவது இல்லை. சுரண்டப்பட்டாலும் தான் சாதி பெருமை பெரிதாய் இருக்கிறது. இந்த உளவியல் ஒரு பெரும் ஆய்வுக்குரிய விஷயம். ஆனால் பெருமைக்குரியது அல்ல.

'அசுரன்' இந்த உளவியலையும் காட்டுகிறது. அது போலவே சாதி எப்படி சுரண்டுகிறது - உழைப்பையும், ஒரு மனிதனின் சுய மதிப்பையும் என்றும் காட்டுகிறது. பூமணியின் நாவல் இந்தளவிற்கு வன்முறையை இருந்ததாய் நியாபகம் இல்லை. எனினும் இன்றைய சாதிய நிலை - சமூக வலை தளங்களிலும் - மென்மேலும் இறுக்கமாக பின்னப்படுகிறது.

இதற்கு என்ன தீர்வு? கல்வி ஒன்றே இந்த உளவியலை கொஞ்சமேனும் மாற்ற உதவும். இதையே வெற்றிமாறனும் தீர்வாக முன் வைக்கிறார். அதனாலேயே கல்வியின் சமூக நீதிக்கு நாம் தொடர்ந்து குரல் குடுக்க வேண்டியிருக்கிறது. இது புரிந்திருப்பதனாலேயே கல்வியை ஒரு தீர்வாக அன்றி, ஒரு privilegeஆக பேசும் ஒரு கூட்டம் 'ஆண்ட' சாதிகளிலும் பிற சாதிகளிலும் பேசிக்கொண்டே இருக்கிறது.

படத்தின் கரிசல் காடுகள், தேரி மேட்டின் பனைகள் எல்லாம் ஒரு ஏக்கம் கலந்த கடந்து போன ஒரு காலத்தின் எச்சங்களாக தோன்றின. ஆனால் இவற்றை கடந்து முன் செல்வதற்குதான் இத்தனை போராட்டங்களும், வலிகளும். நம்மை இன்னமும் அதே பழம் பெருமை சொல்லி நம்மிடத்தில் வைக்க வேண்டி ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

அசுரன் - படிக்க வேண்டிய பாடம்.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...