கொரோனா கொண்டு வரும் தனிமையின் விலை - 2

"ஒரு பழக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்டால் மீண்டும் அதற்குள் செல்வது மிக கடினமானது" என்கிறார் ஹோல்ட்-லுண்ட்ஸ்டாட். "பொருளாதார பின்னடைவு பற்றி கவலை படும் நாம், இந்த சமூக தனிமை கொண்டு வரும் சமுக பின்னடைவை பற்றியும் கவலை பட வேண்டும். இந்த வைரஸ் நாட்களை தாண்டிய பின்னரும் இந்த சமூக தனிமை நாட்கள் நம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்" என்கிறார்.
இதன் பின் உள்ள அறிவியலை அறிதல் அவசியம். தனிமை என்பது வெறும் உணர்வல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாகம் எப்படி தண்ணீரை தேட வைக்கிறதோ, பசி எப்படி உணவை தேட வைக்கிறதோ, அது போன்றே தனிமை பிற மனிதர்களை தேட வைக்கும் உயிரியல் அறிகுறி என்கிறார் ஹோல்ட்-லுன்ஸ்டாட்*.  வரலாற்றுரீதியாகவும் பிற மனிதர்களுடனான நமது உறவு உயிர் வாழ்வதற்கு ஒரு இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் காலங்களில் இந்த தனிமை பிற மனிதர்களை தேடவைக்கும்.
இந்த கோவிட்-19 கொண்டு வரும் பல முனை நெருக்கடி - சுகாதாரம், பொருளாதாரம், சமூக வாழ்வு , வேலை - போர் களங்களில் நிகழ்வது போன்ற அழுத்தங்களை கொடுத்து PTSD என்னும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு போன்ற நோய்களை கொண்டு வரக்கூடியது. 2005 கத்ரினா புயல் காலங்களில் லூசியானா மாநிலத்தில் மக்கள் கண்ட பேரழிவு இது போன்ற மன நல பாதிப்புகளை ஏற்படுத்தியது. 2001இல் உலக வர்த்தகமைய தாக்குதலில் பாதிக்க பட்டவர்களுக்கு வைத்தியம் புரிந்த மருத்துவர் சூ வர்மா சொல்வது இது "9/11 தாக்குதலோ அல்லது கத்ரினா புயலோ அல்லது ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியோ எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்து முடிந்த விஷயங்கள். இந்த கொரோனா பாதிப்போ இன்னமும் எவ்வளவு காலங்களுக்கு நீடிக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கின்றது. இது இந்த மன அழுத்தங்களை இன்னமும் அதிகரிக்கும்."
இந்த மன அழுத்தங்கள் தங்கள் வழமையான வடிகால்கள் - பிற மனிதர் தொடர்பு - இல்லாமல் இருக்கின்றன. "ஒருவரை அன்பால் தொடும்போது ஆக்சிடாக்சின் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. இதே ஹார்மோன் தாய்-பிள்ளை தொடுதலின்போதும், கலவியின் உச்சத்திலும், அன்பாய் அரவணைக்கும் போதும் சுரக்கும்" என்கிறார் சூ வர்மா. இன்றைய நிலைமையில் இந்த அவசியமான ஹார்மோன் சுரப்பு பலருக்கும் இல்லை.
நீடித்த தனிமை ஒரு நாளைக்கு 15 சிகரெட்களை ஊதுவதற்கு சமம் என்கிறார் மருத்துவர் வர்மா. இது இருதய நோய்கள், வாதம், உடல் பருமன் முதலிய நோய்களோடு மரணத்தையும் கொண்டு வரும். ப்ளோரிடா மாநில பல்கலைக்கழகம் 2018இல் நடத்திய ஆய்வு இத்தனிமை டெமென்ஷியா என்னும் மறதி நோய் வரும் வாய்ப்பை 40 சதவிகிதம் அதிகரிக்கிறது என்கிறது.
Woman at the Window - Salvador Dali
இந்த தனிமை மன அழுத்த நோய் வரும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேலான இந்த மன அழுத்தம் - அதாவது இந்நோயின் ஒன்பது அறிகுறிகளில் ஏதேனும் ஐந்து (மகிழ்வூட்டும் நிகழ்வுகளில் நாட்டமின்மை, குற்றவுணர்வு, சோம்பல் , பசியின்மை, தூக்கமின்மை, கவனமின்மை, மெதுவாக இருத்தல் போன்றவை) இரண்டு வாரங்கள் தொடர்ந்தால், அது மேலும் ஒரு முறை மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பை 50 சதவிகிதம் அதிகரிக்கிறது.  இரண்டு முறை மன அழுத்தத்திற்கு ஆளாவது மூன்றாவது முறைக்கான வாய்ப்பை 75 சதவிகிதமும், நான்காவது முறைக்கு ஆளாவதற்கான வாய்ப்பை 90 சதவிகிதமும் அதிகரிக்கிறது. இந்த சுழற்சியில் இருந்து விடுபடுவது எளிதல்ல.

 இந்த கொரோனா கொள்ளை நோய், நாமும், நம் மூளையும் இந்த பூமியில் வாழ்வதற்கு எது தேவை என்று கற்று வந்ததற்கு நேர் எதிரான ஒன்றை செய்ய சொல்கிறது. விர்ஜினியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஜேம்ஸ் கோஆன், கடுமையான உளைச்சலில் நம் மூளை எப்படி வேலை பார்க்கும் என்பதை விர்ஜினியா மலைகளில் வாழும் சலமாண்டெர் உயிரினத்துடன் ஒப்பிடுகிறார். "சலமாண்டெர் ப்ளூ ரிட்ஜ் மலை பிரதேசத்தில் நல்ல குளிரான, இருட்டான, ஈரப்பதமான இடத்தில வாழக்கூடியது. அதை நன்கு சூரியன் சுட்டெரிக்கும் ஒரு பாறையில் விட்டால் அது மீண்டும் தன்னுடைய இருட்டு பாறைக்கு அடியில் செல்ல முயலும். இன்றைய நமது நிலைமை இத்தகைய பாறையில் விடப்பட்ட சலமாண்டெர் போன்றது. ஆனால் பாறைக்கு அடியில் மீண்டும் செல்ல முயல்வது நம் உயிருக்கு ஆபத்து என்று சொல்லப்பட்டு விட்டோம்."

மனிதர்கள் ஏன் கைகளை பிணைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பது குறித்து பாடம் எடுப்பவர் ஜேம்ஸ். அவரின் கருத்தில் நமது மூளை ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நம் உணர்வுகளையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் உடையது. ஒரு சமூகத்தின் ஒரு பகுதியாய் இருப்பது இந்த திறனை அதிகரிக்க வைக்கிறது. நாம் தனியாகவோ, ஒருவருடன் தொலைபேசியில் அல்லது ஒரு திரையில் பேசுவதை விட, அதே நபருடன் நேருக்கு நேர் உரையாடும்போது நம் மூளை இன்னமும் திறனுடன் செயல்படுகிறது. "தொலைவில் இருக்கும் ஒருவரை விட நாம் அருகில் இருக்கும் ஒருவரையே விரும்புவோம். நம் மூளை எப்போதும் எது செய்தாலும் அதை இருப்பதிலேயே சிக்கனமான முறையில் செய்ய முயலும். ஒரு சமூகத்தில் வாழ்வது இதை சாத்திய படுத்துகிறது. இதுவே (Economy of Action) என்னும் உயிரியல் தத்துவம்" என்கிறார் ஜேம்ஸ். நமக்கு பிடித்தமான ஒருவருடன் கைகளை பிணைத்திருக்கும் போது நம் மனமும், உடலும் அமைதி அடைகிறது, மேலும் மூளை நரம்புகளில் காணப்படும் வலிகள் குறைந்து ஒரு வலி நிவாரணி மருந்து சாப்பிட்டதற்கு இணையாக இது இருக்கிறது. தொடுதல் நம் மூளையை அமைதி படுத்துகிறது. ஒரு காணொளி உரையாடல் இதே அமைதியை கொடுப்பதற்கு நம் மூளை இன்னமும் கொஞ்சம் அதிகமாய் மெனக்கெடவேண்டியிருக்கிறது என்கிறார் ஜேம்ஸ் கோஆன் .    

இன்று உலகம் முழுவதும் மெய்நிகர் உலகில் எப்படி சமூகமாய் இயங்குவது என்று மனிதர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஜூம், பேஸ் டைம், ஸ்கேய்ப் மற்றும் பல தளங்களில் பேசுவது, விளையாட்டு தளங்களில் நண்பர்களுடன் விளையாடுவது , ஒரே நேரத்தில் ஒரே பாட்டிற்கு நடனம் ஆடுவது போன்றவை அதிகரித்திருக்கிறது. என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒரு மெய்நிகர் மது பார்ட்டிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் இது போன்று தளங்களை கொண்டு நமது தனிமையையும், சமூக வாழ்வையும் மீட்டெடுக்க முயல்வது தோல்வியிலேயே முடியும். ஜேம்ஸ் கோஆன் கூறுகிறார் - "இது நம்மிடம் வேறுவிதமான அழுத்தங்களாக வெளிவரும், கோபப்படுவது அல்லது நோயுருவது போன்று வெளிப்படும். மனிதர்கள் சமூகத்தில் இயங்குவது என்பது  தவிர்க்க முடியாதது. சமூக தனிமை என்பது நம் அழிவு என்பது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக  நமது  பரிணாம வளர்ச்சி நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்"   

"இந்த கொள்ளை நோய் நமக்கு  சில நன்மைகளையும் செய்திருக்கிறது" என்கிறார் கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ உளவியலாளர் ஆமி ரொக்கச். "கடந்த நூறாண்டுகளாக நம்முடைய வாழ்வு தொழில்நுட்பம் சார்ந்து பணம் சம்பாதித்தல் மற்றும் சொத்து சேர்த்தால் என்றே கழிந்துள்ளது. மனித உறவுகளை நாம் பேணுவதற்கு எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. இப்போது தீடீரென்று நாம் அனைவரும் வீட்டை விட்டு வெளிவர முடியாத நிலையில், நாம் உளவியல்ரீதியாகவும், உயிரியல்ரீதியாகவும் வாழ்வதற்கான முக்கிய வாய்ப்பு, இந்த உறவுகளை மீட்டெடுப்பதில் இருக்கிறது" என்கிறார் அவர். இந்த ஊரடங்கில் நானும் பல வருடங்களாக தொடர்பில் இல்லாத பல நண்பர்களுடன் மீண்டும் தொடர்பில் இருக்கிறேன்.

ரொக்கச் மேலும் சொல்கையில் " இந்த தனிமை நாம் விரும்பி ஏற்று கொண்டதல்ல, எனவே அது இன்னமும் கடுமையானதாகவே தோன்றும். இந்த தனிமையின் நாட்கள் முடிவுற்று நாம் வெளி வரும் போது சமூகம் பெரிதாய் மாறிவிடப்போவதில்லை. மனிதர்களாகிய நாம் மிகவும் மெதுவாய் கற்றுக்கொள்பவர்கள். ஆனால் நாம் ஒவ்வொருவரும் "நான் சில நல்ல விஷயங்களை இந்த நாட்களில் செய்தேன்' என்று சொல்லுவோம் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு சமூகமாய் ஒன்றிணைந்து இருப்பதே நமது உடல் ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் பாதுகாப்பு என்பதை  உணர்ந்து விடுவோம் என்பதே என் நம்பிக்கை" . 

No comments:

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...