கொரோனா ஊரடங்கு ஆரம்பித்தவுடனே . என்னுடைய நாட்களை எப்படி அமைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அலுவலகம் சென்று வரும் நாட்களில் , ஒரு நாளில் இரண்டு மணி நேரம் சென்னையின் பைத்தியக்காரத்தனமான சாலைகளில் வீடு வந்து சேர்வது என்பது மிகவும் அலுப்பூட்டக்கூடியது. ஒவ்வொரு நாளும் , இன்று யார் வந்து உள்ளே விழுவார்கள் என்ற கவனிப்பிலேயே ஓட்ட வேண்டும். ( யாரும் உங்கள் காரில் விழவில்லை என்றாலும் , ஜனவரி மாதம் எனக்கு நடந்தது போல , உங்கள் பாதையின் வழியில் யாரோ விழுந்துவிட , நீங்கள் ஓரமாக ஒதுங்கி போக , போலீசுக்காரர் நீங்கள் மோதிவிட்டு தப்பி செல்கிறீர்கள் என்று பணம் பறிக்கும் , தாலி அறுக்கும் நாடகங்களும் நடப்பதுண்டு !).
எனவே , ஒரு பெரிய நிம்மதி இந்த இரண்டு மணி நேரங்கள் மட்டுமல்லாமல் , அது கொண்டு வரும் அலுப்பும் இல்லாமல் இருப்பது , இந்த நேரத்தை எதாவது செய்ய வேண்டும் என்று தோன்ற வைத்தது. எனவே , நியூ யார்க்கர் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை மொழிபெயர்த்தேன்.
என்னுடைய எல்லைகளை அறிந்திருப்பது ஒரு விதத்தில் நல்லதாக இருந்தது. உலகை மாற்றும் இலக்கியத்தை நான் எழுதப்போவதில்லை என்பது எனக்கு தெரிந்தே இருந்தது. எனவே , எழுதுவது என்பது மகிழ்வு தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. அதாவது எனக்கு மகிழ்வு தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
"
கொரோனா கொண்டு வரும் தனிமையின் விலை " மொழிபெயர்த்தது மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு விதத்தில் , வாழ்க்கை என்பது இந்த ஊரடங்கினால் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வரும் போது - பெரும்பாலும் நாம் பழகிய வாழ்க்கையை கலைத்துப் போடும் போது , அதை எப்படி எதிர்கொள்வது என்பது தினமும் நடக்கும் ஒரு விவாதமாக இருக்கும் போது , அதையே எழுதவும் செய்வது கடினமாக இருந்தது.
வாழ்வின் அபத்தத்தை எதிர்கொள்ள , அபத்தத்தின் எல்லையில் இருக்கும் ஏதேனும் ஒன்றை மொழிபெயர்க்கலாம் என்று நினைத்தேன். அப்படியே கால்டுவெல்லின்
குடுமி பற்றியக் கட்டுரையை படிக்க நேர்ந்தது. இப்போதைய காலத்திற்கு , அது கொண்டு வரும் irrelevance தேவை என்று நினைத்தே அதை மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் , எழுதுவது என்பது கடினமாக இருந்தது. மொழிபெயர்ப்பது அதனினும் கடினமாக இருந்தது. எத்தனை வார்த்தைகளை ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறோம் என்பது புரிந்தது. ஆனால் , மொழி பெயர்ப்பது - ஒரு நாளைக்கு 3-4 பக்கங்கள் , வார இறுதியில் 7-8 பக்கங்கள் என்று செய்ய முடிவதாகவே இருந்தது.
' குடுமி பற்றிய சிந்தனை'களுக்குப் பின் , இன்னொரு பிடித்த விஷயமான கிராமத்தெய்வங்கள் பற்றி '
தென்னிந்திய கிராம தெய்வங்கள் ' பற்றி படிக்க ஆரம்பித்தேன். அதையே மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தேன்.
இந்தப் புத்தகங்கள் எல்லாம் பொது பதிப்புரிமையில் இருப்பவை. மிகவும் பழைய புத்தகங்கள். இவற்றை gutenberg மற்றும் archive தளங்களில் தேடிப் படித்து , பின் முடிவு செய்வது ஒரு வேலையாக இருந்தது. ஆனால் இதில் நான் படித்து , மொழி பெயர்க்காமல் விட்டவை பல.
இவற்றின் ஊடே , பல புதிய தகவல்களும் வந்தன. ஆதிச்சநல்லூரில் முதல் அகழ்வு நடத்திய அலெக்சாண்டர் ரீயாவின் கட்டுரையை , பழைய ' இந்தியன் ஆண்டிகுவாரி ' இதழ்களைப் படிக்கும் போது பார்த்தேன். கால்டுவெல் பழைய கொற்கைப் பற்றி எழுதியதையும் படித்தேன். அவற்றின் தொடர்பும் , continuityயும் அதை சேர்த்து '
கொற்கை ' என்று மொழி பெயர்க்க வைத்தது.
இது என்னுடைய முன் முடிவான அபத்தங்களின் எல்லையை விட்டு விலகுவதாக இருக்கவே , இன்னொரு
நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பை மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். இவை எல்லாம் தமிழ் கதைகள். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டவை. அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பதைவிட அபத்தமாக என்ன இருக்கப் போகிறது ? அதன் முதல் கதையைப் படித்துவிட்டு , கற்பகவிநாயகம் தொலைபேசியில் , தமிழில் அந்தக் கதை கீரைக் குழம்பைப் பற்றியது என்று கூறியது ( கீரை என்பது ஆங்கில மொழிபெயர்ப்பில் cabbage ஆகி , என்னுடைய மொழிபெயர்ப்பில் முட்டைகோஸ் ஆகிவிட்டது - இதை யாராவது cauliflower என்று திரும்பவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்கள் என்று
காத்திருக்குகிறேன் ) , இந்த அபத்த எல்லையில் இன்னமும் இருப்பது உறுதியானதால் நிம்மதி தந்தது.
இதற்கு நடுவே , என்னுடைய blog இல் இருந்த
தமிழ் மற்றும்
ஆங்கில பயணக் கட்டுரைகளைத் தொகுத்து , இரண்டு புத்தகங்களாக வெளியிட்டாகிவிட்டது. ஆங்கில புத்தகத்தை ,
paperback ஆக பதிப்பித்தும் பார்த்தாகிவிட்டது.
இப்போது , கொஞ்சம் தீவிரமான அகழ்வாராய்ச்சி பற்றிய புத்தகம் ஒன்றை மொழிபெயர்க்கலாம் என்று பிரெஞ்சு மொழியில்
பல்லவர்கள் பற்றி எழுதப்பட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். அதிக உழைப்பை எடுத்துக் கொண்ட புத்தகம். பல முறை சரிபார்த்து , திருத்தி நல்ல முறையிலேயே வந்தது.
இப்போது
நீலகிரி பற்றிய ஒரு பழைய பயணக் கட்டுரையை மொழிபெயர்த்து பதிப்பித்துவிட்டேன். அடுத்து ஏதாவது ஆங்கில இலக்கிய நூல் ஒன்றை மொழிபெயர்க்கலாம் என்று நினைப்பு. அது போக இன்னமும் சில கட்டுரைகள் , புத்தகங்கள் என இன்னொரு வருடத்திற்கான தகவல்களைத் திரட்டிவிட்டேன்.
நாளொன்றுக்கு 1 மணி நேரத்திற்கு மேல் எழுதுவதில்லை. நல்ல முறையில் பிழை திருத்தாமல் பதிப்பிப்பதில்லை. இப்போது அழிசி பதிப்பகத்தின் தொடர்பும் இருப்பதால் , முகப்பு அட்டைகள் மிகுந்த நல்ல முறையில் வருகின்றன. எனவே, குறையொன்றுமில்லை என்றே கூற வேண்டும்.
இறுதியாக , நூற்றுக்கணக்கில் இந்தப் புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்பவர்களில் வெகு சிலரே , அவற்றை வாசிக்கின்றனர். இருந்தாலும் , கடந்த இரண்டு மாதங்களும் , மாதம் 10000+ பக்கங்கள் என் புத்தகங்களில் வாசிக்கப் பட்டிருக்கின்றன. 65 புத்தகங்களுக்கு மேல் விலை கொடுத்து வாங்கப் பட்டிருக்கின்றன. வேறென்ன வேண்டும் ?