காவல் கோட்டம்

காவல் கோட்டம் [Kaaval Kottam] 10-12 வருடங்களாக வாசிப்பதை தள்ளி போட்டதன் காரணம் இவ்வளவு பெரிய புத்தகம் ஏமாற்றிவிடுமோ என்றுதான். இந்த பயம் அஞ்ஞாடி அல்லது கொற்கையை வாசிக்கும் போது வரவில்லை. இந்த முறை எப்படியாவது வாசித்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

முதலில், நல்ல விஷயங்கள். வரலாறு என்ற விதத்தில் பல தெரியாத செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் மதுரை எனது சொந்த ஊர் என்ற முறையில் பல புதிய விஷயங்கள் தெரிய வருகிறது.

இது ஒரு வரலாற்று நூல். நிறைய வரலாறு சொல்லப்படுகிறது. எந்த குறிப்பும் இல்லாமல். ஆசிரியர் இதை வரலாறாக எழுதுவதா, புதினமாக எழுதுவதா என்ற குழப்பத்தில் இருந்ததாகவே எனக்கு தெரிந்தது. எங்கே அவர் பெயர்களை மாற்றி இருக்கிறார் என்ற ஆராய்ச்சியே பெரிதாக போய்விட்டது. நானும் கூகுள் பண்ணிக் கொண்டே இருந்தேன். கதை மாந்தர்களில் யார் உண்மையில் வாழ்ந்தவர், யார் கற்பனை பாத்திரங்கள் என்ற தெளிவு இல்லை. புதினத்தில் எதற்கு இது எல்லாம் என்று கேட்கலாம். இது புதினமாக இல்லை என்பதுதான் சிக்கல்.

புத்தகத்தை இரண்டு பாகமாக பிரிக்கலாம். முதல் பாதி 1350இல் இருந்து மதுரையின் ‘வரலாற்றை’ புதினமாக சொல்ல முயல்கிறது. பல பாத்திரங்களும் வருகிறார்கள், சண்டை போடுகிறார்கள், செத்து போகிறார்கள். முந்தைய அத்தியாயத்தில் இருந்தவர்கள் அடுத்த அத்தியாயத்தில் இல்லை என்று பல தடங்கல்கள். இதைத் தொடர்ந்து பாளையக்காரர்களின் கதை என்று அதே தொனியிலேயே தொடர்கிறது. எனவே ஒருவித சந்தேகத்துடன் இது வரலாறா என்று சோதித்துக் கொண்டே படிப்பதில், புத்தகத்திற்குள் நுழையவே முடிவதில்லை.

1800களில் ப்ளாக்பார்ன் மதுரை ஆட்சியராக வந்த பின்னர் இந்தக் கதை பின்னுக்கு தள்ளப்படுகிறது. தாதனூர் என்ற கற்பனை கிராமத்தின் கள்ளர்கள் மதுரைக்காவலை பார்க்கும் கதை ஆரம்பிக்கிறது. இந்த கிராமத்தின் உண்மைப்பெயர் கீழக்குயில்குடி என்று ஆசிரியரே பின்னுரையில் சொல்கிறார். எனவே எதற்காக இந்தப் பெயர் மாற்றம் என்ற தெளிவு இல்லை. இங்கிருந்து மதுரையின் வரலாறு அப்படியே விடப்படுகிறது. இப்போது நாம் கள்ளர்களின் களவு வாழ்வை தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். இங்கும் எந்தவிதமான பாத்திரங்களும் நம்மை கதைக்குள் இழுக்க முயல்வதில்லை. கதை பல கிராமங்களில், பல பெயர்களுடன் களவு சம்பந்தமான சாகசங்களுடன் அதன் பாதையில் செல்கிறது.

கடைசி 100 பக்கங்களில் குற்ற பழங்குடியினர் சட்டம் அமுல்படுத்த படும்போது, இந்த மக்கள் படும் துயரங்கள் இதனால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 900 பக்கங்களில் நம்முடன் ஒரு பாத்திரம் கூட நெருங்கவில்லை என்பதுதான் இந்த புத்தகத்தின் தோல்வி. எதற்காக முதல் 500 பக்கங்களில் மதுரையின் வரலாறு சொல்லப்பட்டது. ஏன் அது அப்படியே விடப்பட்டது என்றும் புரியவில்லை. ஒன்று வரலாறாக எழுதியிருக்கலாம் அல்லது புதினமாக எழுதியிருக்கலாம். இரண்டும் இல்லாமல், கிண்டியதில் எப்போது முடிப்போம் என்ற நிலை வந்துவிட்டது.மிகவும் ஏமாற்றம் கொடுத்த புத்தகம்.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...