இரண்டு புத்தகங்கள்

பள்ளி காலங்களில் தொலை காட்சியில் பார்த்த 'மகாபாரதம்' தான் முதலில்யோசிக்க வைத்தது. அதற்கு முன்பே ராஜாஜிஇன் 'மகாபாரதம்' படித்திருந்தாலும்வீட்டில் அம்மாவுடன் கிருஷ்ணன் செய்வது எல்லாம் சரியா என்று விவாதித்தது நினைவில் இருக்கிறது.

அதற்கு பிறகு, 'மகாபாரதத்தை' ஒரு கதையை மட்டும் இன்றி ஒரு காலவாழ்கையின் பதிவாகவும், இன்றும் இருக்கும் பல அறச்சிக்கல்களை எதிர்நோக்க ஒரு வழியாகவும், காந்தியின் 'கீதை' உரை படித்த பொழுது, மகாபாரதம்என்பது ஒரு dynamic entity ஆக, நாம் வாழும் வாழ்கையின் பல தரிசனங்களை உள்ளடக்கியதாக தோன்றியது.

வாசுதேவன் நாயரின் 'இரண்டாம் மூலமும்' (Randam Moozham - Malayalam), பிரதிபாராயின் 'யஜ்ன சேனி' (Yajna Seni - Oriya) யும் ஒரு அளவில் வாசிப்பு மற்றும்சிந்திக்க வைத்தாலும், இன்னும் இன்னும் படிக்க புத்தகங்களை தேடவேவைத்தது. என் விருப்பம் மகாபாரதத்தின் உரைகளோ, மொழிபெயர்ப்புகளோஅல்ல. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இன்றைய கேள்விகளுக்கு பதில் தேடும் தேடலே எனது.

தற்கால இந்திய இலக்கியங்களின் வழியே இதனால் நான்அறிமுகபடுத்திகொண்ட எழுத்தாளர்கள் பலர். அரசின் அதிகாரத்தை எதிர்த்துபோரிடும் ஒரு பெண்ணை, மஹா ஸ்வேதா தேவி எழுதும் பொழுது அவளுக்கு திரௌபதி' என்று பெயரிடுகிறார். சிவாஜி சாவந்த், மராத்தியில் கர்ணனின் வாழ்க்கையை 'ம்ருத்யஞ்சய' என்று எழுதுகிறார்.
அந்த வரிசையில் கடந்த 3 மாதங்களில் நான் படித்த இரண்டு புத்தகங்கள்.

1. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்


'உப பாண்டவம்' மகாபாரதத்தின் ஒரு நீட்சியாகவே எழுதபடுகிறது. அச்வதாமனின் காலங்கள் தாண்டிய வாழ்வில் ஆரம்பித்து எல்லா பாத்திரங்களின் உள் மனச் சிக்கல்களை பேசி முடிகிறது.
'துரியோதனன் படுகளம்' கூத்தில் ஆரம்பித்து, ஏகலைவன், அம்பா, சிகண்டி, சஞ்சயன் என பலரின் எண்ணங்களை தேடி நீள்கிறது.

திரௌபதியின் மண சிக்கல்கள், சிந்தனை ஓட்டங்கள், அவள் கோபம், அவமானத்தில் எழும் சீற்றம் ஒரு போரில் முடிகிறது. மகாபாரதத்தில் என்னை மிகவும் 'பாதித்த' என்று சொல்லலாம் பாத்திரம் திரௌபதி. அவள் ஒருத்தி பொருட்டே போர் நடக்கிறது. தான் அவமானபடுத்தபட்டதற்கு ஓடும் ரத்த ஆற்றில் மட்டுமே தீர்வு என்று முடிவெடுத்து ஒரு பதினாலு வருடங்கள் ஐவரையும் வேறு சிந்தனை இன்றி செலுத்துகிறாள்.

"
துரியன் உங்க சகோதரனைப் போலத்தான். அர்ச்சுனன்
போல பொம்பள கிட்ட கள்ளத்தனம் பண்றவன் கிடையாது'
"

துரியன் திரௌபதியை சபையில் அவமதித்ததை தவிர வேறு தவறு செய்யதவனாகவே வருகிறான். குருட்டு தந்தைக்கு பிறந்து தான் உரிமையை நிலை நாட்டவே போரிட வருகிறதாக சித்தரிப்பு. எனக்கு உடன்பாடில்லை. இது துரியனை நல்லவனாக கட்டவே உதவும். துரியன் அதையும் மீறுபவன்.

தமிழில் ஒரு முக்கிய படைப்பு.

2. பார்வா - எஸ். எல். பைரப்பா (Translation - K Raghavendra Rao, Sahitya Akademi pubication)

'பார்வா'வை படிக்க ஒரு 2 மாதங்கள் ஆகிவிட்டது. இது ஒரு முழு மகாபாரத கதை என்பதோடு, நான் படிக்கும் நேர அளவும் கொஞ்சமே.

'பார்வா' மகாபாரதத்தை குந்தி, யுயுதனா, சஞ்சயா, பீமா, கர்ணன் என பலரின் பார்வை வழியே கதையை எடுத்து செல்கிறது. கதையின் mythological elements விலக்கி விட்டு வெறும் கதையாய், எல்லா 'Deus ex machina' நிகழ்ச்சிகளையும் விவரிக்க முனைகிறது. உதாரணமாக, திரௌபதி சபையில் வைத்து துகிலுரியப்படும் போது கிருஷ்ணன் வரவில்லை. திருதராஷ்டிரா, பீஷ்மர், விதுரர் முதலியோர் துரியோதனனை தடுத்து நிறுத்துகின்றனர்.

கிருஷ்ணன் ஒரு சிறு பாத்திரமே ஏற்கிறார். பீமனும் துரியோதனனும் கதை மாந்தர்களை இருக்கிறார்கள். தர்மன் சூதாடியாகவும், போர்களத்தில் கோழையாகவும் சித்தரிக்க படுகிறார். திருதராஷ்ட்ரன் வில்லனாகிறான். போர் திரௌபதியின் பொருட்டு அல்ல, பாண்டவர்களின் பிறப்பின் legitimacy இன் காரணமாக நடைபெறுகிறது.

போர்கள வர்ணனைகள் வெகுவாக வருகிறது. போரின் உக்கிரம், போர்களத்தின் சமத்துவம், அரை உயிருடன் இருப்பவனை சுற்றி காத்திருக்கும் கழுகுகள், நாய்கள், கழிவுகளின் நெடி, ரத்த பெருக்கு, அப்புற படுத்தாமல் கிடக்கும் பிணங்கள் என குரு ஷேத்திரம் இதுவரை இல்லாத ஒரு வர்ணனை பெறுகிறது.

என்னை பொறுத்தவரை 'பார்வா' கதையை அதன் மாயங்களில் இருந்து விடுவித்தாலும், தீவிரமான எந்த தத்துவத்தையும் முன் வைக்கவில்லை. கதா பாத்திரங்களின் மன சிக்கல்கள், போரின் அர்த்தமின்மை, பனிரண்டு நாட்கள் போருக்கு பிறகு அமைதியை யோசிக்கும் துரியனின் முரண் என எதுவும் பேசப்படவில்லை.

உத்தரையின் இறந்து பிறக்கும் மகனை வைத்து, குந்தியும் திரௌபதியும் குல விருத்தியை குறித்து விவாதிப்பதோடு முடிகிறது. கிருஷ்ணன் த்வாரகை அழிவதை பார்த்து கொண்டிருக்கிறான். தர்மன் போருக்கு பிந்தைய அமைதியை தாங்க முடியாதவனாக அரியணையில் இருக்கிறான்.

ஒரு வேளை, கன்னட மூலத்தில் கதையின் வீச்சு இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம்.

No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...