நட்சத்திரம்

அதிகாலை.

வீட்டு பால்கனியில் நின்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். கைக்கு எட்டும் தூரத்தில் சூரியன். தாங்க முடியாத வெப்பம்.
சேவல் கொண்டை சிவப்பில் நெருப்பு எரிவது அருகில் தெரிகிறது.
நில நடுக்கம் போல் ஒரு அதிர்ச்சி. நான் என் மனைவியை கூப்பிடுகிறேன். 'வேகமாய் வா'.
வெளியில் வருகிறாள். இருவரும் பார்க்கும் பொழுதே சூரியனில் இருந்து வேகமாய் நெருப்பு துண்டுகள் கீழே விழுகின்றன.
ஒரு சிறு ஓட்டை விழுகிறது. அதில் இருந்து இன்னும் பெரிய துண்டுகள். சிறு ஓட்டை பெரிதாகிறது. இப்பொழுது நிறைய சிறு ஓட்டைகள். வெப்பம் வேகமாய் குறைகிறது. சிறு ஓட்டைகள் எல்லாம் பெரிதாகின்றன.
கண் முன் சூரியன் துண்டு துண்டாய் சிதறி சட்டென்று மறைகிறது.
இருள். குளிர். மெல்லிய நீலமாய் வானம். எதுவுமற்ற பெருவெளியில் எல்லையில்லா வானம்.
வெப்பம் தணிந்ததில் அது வரை அடைந்து கிடந்த மனித கூட்டம் இப்போது தெருவில். எதற்கென்று தெரியாது ஒரு கொண்டாட்டம்.
கட்டறுத்த மகிழ்வில் சுழற்றி விட்ட பம்பரம் போல் பறக்கும் பூமி. சட்டென ஒரு தூரத்து நட்சத்திரத்தின் இழுப்பில் ஒரு தள்ளாட்டம். வெகு தூரத்தில் தெரியும் புதிய சூரியனை பார்த்து உற்சாக ஒலி எழுப்பும் கூட்டம்.
நானும் என் மனைவியும் ஒரு மரத்தின் கீழ்.
'என்ன ஆகும் இனி?'
'ஒளி இல்லை. மரங்கள் முதலில் செத்து மடியும். மரங்கள் இல்லை கரியமிலம் குடிக்க. பூமியின் வெப்பம் உயரும். ஆக்சிஜென் குறையும். தூரத்து சூரியனை பார்த்துக் கொண்டே நாமும் செத்து மடிவோம்'
விழுந்த இலை நீல நிறத்தில்.


No comments:

துப்பறியும் சிவாஜி

சிவாஜி கணேசனுடன் நேற்றிரவில் துப்பறிய சென்றிருந்தேன். சிவாஜி கணேசன் துப்பறியும் கதையின் நாயகர் அல்லர். அது ஜெயசங்கர் ஆகும். ஆனாலும...