பாஞ்சாலி சபதம்

மகாபாரதம் எப்பொழுதும் மனதிற்கு பிடித்தமான ஒன்று, நீதி என்பது ஒரு வரையறுக்கப்பட்ட ஒன்றாய் இன்றி ஒவ்வொரு செய்கையும் நியாயபடுத்தபடும் வழியிலேயே உருவாக்க படுகிறது. ஒவ்வொரு காலத்திலும் எது சரி எது தவறு என்பது வேறுபாடும் பொழுது 'கட்டுடைத்தல்' என்பது ஒரு நேரத்தில் கேலி கூத்தாகிவிடுகிறது.

திரௌபதியின் மான பங்கம் என்பது மகாபாரதத்தின் முக்கியமான ஒரு அச்சு. துரியன் குருஷேத்திரத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. அன்று அவிழ்ந்த கூந்தல் தருமனின் தம்பிமார்களை ரத்த வேட்டைக்கு ஆயத்த படுத்தியது.

நான் தமிழ் மேல் ஆர்வம் கொண்ட நேரம் முதலில் எல்லோரும் போல் ஒரு மலிவு விலை 'பாரதியார் கவிதைகள்' புத்தகம் வாங்கினேன். இயற்க்கை வருணனைகள், தேசிய பாடல்கள் என்று ஒரு பாதகமும் இன்றி சென்று கொண்டிருந்த வாசிப்பு, 'பாஞ்சாலி சபதத்தில்' ஒரு ரௌத்திரம் காட்டியது. அதன் வாசிப்பு வேகம், அந்த எழுத்தில் இருந்த கோபம் என்னுள் எழுந்தது. பாரதி கட்டி எழுப்பும் அந்த சித்திரம் எதனாலும் அழிக்க முடியாததாகியது. என் பின்னாளைய மகாபாரத வாசிப்புகளுகெல்லாம் அடித்தளமாகியது.
ஒரு அவையின் நடுவே ஒரு பெண்ணிற்கு நடக்கும் அநீதி என்பது காலங்கள் தாண்டியும் இன்றும் ஒரு பொது நிகழ்வாகவே இருக்கிறது. இன்றும் பெண்களை கூண்டில் ஏற்றி ஊரின் நடுவே தீர்ப்பு வழங்குவது நமது கலாச்சாரத்தின் ஒரு பாகமாகவே இருக்கிறது. பாரதியின் ரௌத்திரம் இதை தொட்டே வெடிக்கிறது. அண்ணனை 'எரி தழல்' கொண்டு சுடவும் துடிக்கும் ரௌத்திரம். ரத்தத்தால் கூந்தல் கழுவ சபதம் போடும் ஒரு பெண்ணின் ரௌத்திரம். துரதிர்ஷ்டவசமாக அது போன்ற சபதங்கள் போட எல்லா பெண்களாலும் முடிவதில்லை.

-------
பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' தருமன் ராஜசூய யாகம் முடித்ததில் ஆரம்பிக்கிறது. துரியன் யாகத்திற்கு வந்த பரிசு பொருட்களை கண்டு பொறாமை கொள்கிறான்.
"நெஞ்சத் துள்ளோர் பொறாமை யெனுந்தீ
நீள்வதால் உள்ளம் நெக்குரு கிப்போய்,
மஞ்சன் ஆண்மை மறந்திண்மை மானம்
வன்மை யாவும் மறந்தன னாகிப்"
எப்படியாவது பாண்டவர்களுக்கு தீது செய்ய தான் மாமனை கேட்க்கிறான்.
"ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய்;-அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித்
தாளிதை எண்ணு வாய்;
பேச்சை வளர்த்துப் பயனென்று
மில்லை,என் மாமனே!-அவர்
பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய்."
திரௌபதியின் சிரிப்பு அவனை வெறுப்பின் உச்சத்தில் நிறுத்துகிறது. சகுனி சூதிற்கு ஆவன செய்கிறான்.
தருமன் முதலில் மறுத்து பின் இணங்குகிறான். சூது தொடங்குகிறது. தருமன் செல்வம் இழக்கிறான். பின் தன் நாட்டை இழக்கிறான்.

"கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும்,

வாயில் காத்து நிற்போன்-வீட்டை வைத் திழத்தல் போலும்
ஆயிரங்க ளான-நீதி யவை உணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்;-சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்."

தன் தம்பிகளை வைத்திழக்கிறான். பின் தன்னையே தோற்கிறான்.

"சங்கை யிலாத நிதியெல்லாம்-நம்மைச்
சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள்!-இதை
எங்கும் பறையறை வாயடா-தம்பி!’"

என்று துரியன் கூத்தாடுகிறான். வெற்றியின் வெறி கள் குடித்த குரங்கு போல் அவனை ஆட்டுவிக்கிறது. சகுனியோ பாஞ்சாலியை வைத்தட சொல்கிறான்.

"இவர் மேவிடு தேவியை வைத்திட்டால்,-(அவள்)
துன்னும் அதிட்ட முடையவள் இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம்’"

தோற்கிறான். துரியன் மாமனை கொண்டாடுகிறான்.

"என்துயர் தீர்த்தா யடா!-உயிர் மாமனே!
ஏளனந் தீர்த்துவிட் டாய்.
அன்று நகைத்தா ளடா!-உயிர் மாமனே!
அவளைஎன் ஆளாக்கி னாய்."

முதலில் பாகனையும் பின் தன் தம்பியையும் பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வர அனுப்புகிறான்.

"நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான்.வழிநெடுக.மொய்த்தவராய்."

வேடிக்கை பார்க்க துச்சாதனன் இழுத்து வருகிறான். அன்றும் இன்றும் வேடிக்கை பார்ப்பதே நமது கடமை.அவையில் திரௌபதி நியாயம் கேட்கிறாள்.

"பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்!
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ?"

பீமன் கோபம் கொள்கிறான்.

"
இது பொறுப்ப தில்லை,-தம்பி!
எரி தழல் கொண்டு வா.
கதிரை வைத் திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம்."

அர்ஜுனன் அவனை அடக்குகிறான். கர்ணன் எடுத்து கொடுக்க, துச்சாதணன் திரௌபதி துகில் உரிய முயற்சிக்கிறான்.

"முன்னிய ஹரிநா மம்-தன்னில்

மூளுநற் பயனுல கறிந்திட வே,
துன்னிய துகிற்கூட் டம்-கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட் டான்."

பீமன் சபதமுரைக்கிறான்.

"இந்த

ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி ‘வந்திரு’என்றான்-இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே,-என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,
தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்"

அர்ஜுனன் சபதத்திற்கு பின், பாஞ்சாலி சபதமுரைக்கிறாள்.

"தேவி திரௌபதி சொல்வாள்-‘ஓம்,

தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன் யான்;-இது
செய்யு முன்னே முடியே’னென் றுரைத்தாள்."

பாஞ்சாலி சபதம் முடிகிறது.


No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...