கொற்கை

தூத்துக்குடியில் என் அம்மாவின் சின்னையா ஒருவர் இருந்தார். சில பள்ளி விடுமுறைகளில் அங்கு செல்வதுண்டு. பெரிய வீடு. வாசல் ஒரு தெருவில் என்றால் பின் வாசல் வேறொரு தெருவில். வீட்டின் பின் புறம் பெரிய களம் உண்டு. ஒரு வாலி பால் கோர்ட்ம் உண்டு (இரு மாமாக்களும் வாலி பால் விளையாடுவார்கள்). எல்லாவற்றையும் விட வீட்டின் முன்புறம் பெரிய தோட்டமும் சறுக்கு, ஊஞ்சல் என விளையாட்டு பொருட்களும் உண்டு. மதுரையில் பூங்காக்களிலேயே அவற்றை பார்த்திராத எனக்கு அங்கே விளையாட பிடிக்கும்.  
 
'கொற்கை' ஜோ டி கிருஸ்ன் நாவல், பிலிப் என்னும் சிறுவனின் கதையை 1914 இல் ஆரம்பித்து, 2000 இல் அவரது மரணத்தில் முடிகிறது என்று கொஞ்சம் எளிதாய் சொல்லலாம். ஆனால் 1150 பக்கங்களில் பிலிப்பின் வாழ்வோடு கொற்கை என்ற ஊரின் வரலாறும் அதன் மனிதர்களும் அவர்களின் 3-4 தலைமுறை கதைகளுமாய் கதை விரிகிறது.
 

என் அம்மாவின் சின்னையா (செண்பகமூர்த்தி - என் மாம்பா (அம்மாவின் அப்பா) எப்போதும் 'செம்முட்டி' என்றுதான் கூப்பிடுவார்கள்) எப்போதும் ஒரு பளிச்சென்று இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை போட்டிருப்பார். கையில் ஒரு வெள்ளி வெற்றிலைசெல்லம். எப்போதும் வெற்றிலை மென்று சிவப்பான வாய். அவரிடம் பேச கொஞ்சம் பயமாகவே இருக்கும்.
 

முத்து குளித் துறைமுகமாய் இருந்த கொற்கை எப்படி தோணி துறையாய் மாறி கப்பல் வந்து போகும் பெரிந்துறையாய் மாறும் கதையும், ஊடே ஊடே அதில் வாழ்ந்து கேட்ட குடும்பங்களும், செல்வம் கொழிக்கும் புது பணக்கரர்களுமாய் பல கதைகள். ஒன்றின் ஊடே ஒன்றை செல்லும் கதைகள் பின்னைப்பாய் இருக்கும் குடும்ப அட்டவணைகள் இல்லாமல் பிடிபடவில்லை.
 

பல கதைகளுடன் பிணையும் வரலாற்றின் பின்புலங்களில் கதை மனிதர்கள் அவ்வபொழுது காணமல் போய் விடுகிறார்கள். இதனால் கதை பிடிக்கும் அளவிற்கு கதையின் மனிதர்கள் பிடிப்பதில்லை.
 

 அம்மாவின் சின்னய்யவிற்கு மளிகை வியாபாரம். நெல்சன் ஸ்டோர்ஸ் என்றால் தெரியாதவர்களே கிடையாது. ரொம்ப நாள் இந்த நெல்சன் யார் என்று யோசித்ததுண்டு. அம்மாவின் சின்னையாவின் அப்பா பெயர் நெல்லையப்ப நாடார் என்றும் அந்த நெல்+சன் தான் கடை பெயர் என்று ரொம்ப நாள் கழித்து தெரிந்து கொண்டேன். 

சொல்லப்படும் பரவர்களின் கதைகளின் இடையே சிவகாசி கலகத்தின் காரணமாய் பிழைக்க வந்த நாடக்கமாரின் வாழ்வும் சொல்லப்படுகிறது. எல்லா நாடக்கமாரும் வாழ்வில் வேகமாய் முன்னேறுகிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள். மகமை வைத்து ஒற்றுமையாய் இருக்கிறார்கள். உண்மை வேறாய் இருக்கிறது. இங்கும் எல்லோரும் ஒற்றை பரிமாணத்திலேயே காட்ட படுவதால் ஒருவரும் மனதில் ஓட்ட மறுக்கிறார்கள். 


சொல்லப்படும் எண்பத்து ஐந்து ஆண்டு வரலாற்றின் அரசியல் தொட்டு மட்டுமே காட்ட படுகிறது. தொழிற்சங்கங்கள், கட்சி அரசியல், பரதவர்-நாடார் மோதல்கள், கலகங்கள், கப்பல் துறையான போது எழுந்த எதிர்ப்புகள், இலங்கை அரசியல் பாதிப்பு என எல்லாமும் போகும் பொழுது ஒரு வரி கோடிக் காட்டபடுதே அன்றி எந்த நிகழ்வும் 'கொற்கை'யை எப்படி மாற்றுகிறது என்ற பதிவுகள் இல்லை.  


 என் அம்மாவின் ஜோதி சித்தி அதற்கு நேர் எதிர். எப்பொழுதும் அவ்வளவு பெரிய வீட்டை நிர்வாகம் பண்ணும் களைப்பு முகத்தில் இருக்கும். மாதர் சங்கத்தில் பொறுப்பு, பூஜை,பஜனைகள் என்று பரபரப்பாகவே இருப்பார்கள். திருவாசகம் பாடினால் கேட்டு கொண்டே இருக்கலாம் என்று அம்மா சொல்லுவார்கள். நான் கேட்டதில்லை. ஆனால் வீட்டில் இருக்கும் போது எதாவது தீனி வந்து கொண்டே இருக்கும். அன்ன லக்ஷ்மி.

கதையின் பெண்கள் எல்லாம் கஷ்ட படுகிறார்கள். பெரும்பாலோர் சோரம் போகிறார்கள். யார் மனைவி யாருடன் படுக்கிறாள் என்பதே பல சமயம் பிடிபடவில்லை. கதையின் எல்லா பிராமண பெண்களும் யாருக்காவது தொடுப்பாக இருக்கிறார்கள் அல்லது யார் குடியையாவது கெடுக்கிறார்கள். பிலிப் விதவை மறுமணம் புரியும் சலோமியும் அவள் நினைவுகளை யாரிடமும் சொல்லாமலே செத்து போகிறாள். அண்ணி கொடுமையில் கலியாணம் செய்யாமல் வாழும் லிடியா தல்மேயதவும் அவள் கோபங்களை சொல்வதில்லை. மொத்தமும் ஆணின் பார்வையாகவே 'கொற்கை' இருக்கிறது.
 

கல்லூரி சென்ற பொழுது படிக்க வரும் பிள்ளைகளின் பெயரில் உள்ள பெர்னாண்டோக்களும், ரோட்ரிகோக்களும் யார் இவர்கள் என்று யோசிக்க வைத்திருக்கிறது. அம்மாவிடம் கேட்ட போது அவர்கள் எல்லாம் மீன் பரவர்கள், கத்தோலிக்கர்கள் என்றாள். சரியாக பிடிபடவில்லை எனினும், பின்னாளில் கரைக்கு வந்த போர்துகேசியர்கள் ஒட்டு மொத்தமாய் பரதவர்களை கத்தொலிக்கத்திர்க்கு மாற்றிய கதையை கேட்ட போது கொஞ்சம் கோபம் கூட வந்தது. 
 
'கொற்கை'யிலும் தல்மேய்தாக்களும், ரிபிராக்களும், பல்டோனக்களும் வருகிறார்கள். பர்னாந்துமார்கள் ஒருவருக்குள் ஒருவர் சண்டை பிடிக்கிறார்கள், மேலே ஏறுபவனை கீழே தள்ளுகிறார்கள், பலருடனும் படுத்து எழுகிறார்கள். ஆனால் ஒருவரின் வாழ்வும் முழுமையாக சொல்லபடாததால் அவர்களின் வீழ்ச்சியில் பச்சாதாபத்தை விட ஒரு திருப்தியே ஏற்படுகிறது. எல்லோரின் வாழ்வின் அவலத்தை விட 'ஜோ டி' அவர்களின் வாழ்வின் உச்சத்தின் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதால் கூட இருக்கலாம்.
 

இதற்கெல்லாம் அப்பால், 'கொற்கை' தெக்கத்தி கடலோர மக்களின் வாழ்வை பதிவு செய்கிறது. யாரும் கவனிக்காத சமூகமான பரதவர்களின் வாழ்வின் ஒரு சிறு பகுதியை பதிவு செய்வது ஓர் முக்கிய காரணி. அதையும் தாண்டி அந்த மக்களின் வரலாற்றையும் ஊடாய் நெய்கிறது. இந்த ஒற்றை காரணம் போதும் இந்த புத்தகத்தின் முக்கியத்தை நிலை நிறுத்த. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.        











பதிப்பகம் - காலச்சுவடு பதிப்பகம்
எழுத்தாளர்  - ஜோ டி குருஸ்
விலை - 800  ரூ 















No comments:

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...