அஞ்ஞாடி - 2

நான் சிறு வயதில் சிவகாசி செல்லும் போது  மின்சாரம் என்பது எப்பவாவது வரும் ஒரு வஸ்து. பெரும்பாலான நாட்கள் விளையாட்டிலும், சினிமா தியேடர்களிலும் செல்லும். இருட்டில் வீட்டில் இருக்கும் என்றாவது ஒரு நாளில் எங்கள் மாம்மை எதாவது பழைய கதை சொல்லுவர். ஒரு முறை கள்ளர்கள் திரண்டு வந்து சிவகாசியை கொள்ளை அடித்த கதை சொல்லி இருக்கிறார். எங்களை இருட்டில் தெருவில் விளையாட விடாமல் செய்வதற்காக சொன்ன கதையாகவே அதை நினைத்திருந்தேன். அவர் கதையில் நாள் பூராவும் நடந்த கொள்ளையில் பலரும் கொல்லப்பட்டதும் பல வீடுகள் கொள்ளை அடிக்க பட்டதும், இரவில் தீப்பந்தங்களோடு கொள்ளை நடந்ததும் கேக்க கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

நாடார்கள் திருமணத்தின் போது பல்லக்கில் செல்லும் உரிமைக்காக ஆரம்பிக்கும் போராட்டம், அவர்களின் பொருளாதார நிலையின் மீதான தாக்குதலாய் மாறுகிறது. status quo வை நிலைநிறுத்த வரும் ஆங்கில அதிகாரிகள் அந்த பகுதியின் சாதி பின்னணிகளை அறியாமல் போலிசின் உதவியுடன் அடக்கவே முயல்கிறார்கள். இதில் ஆங்கில பாதிரிகளின் குறுக்கீடுகள் வேறு.

சிவகாசி சிவன் கோவிலின் உள் நுழையும் போராட்டம் இதே காலகட்டத்தில் நடக்கிறது. தாங்கள் அதிகமாய் இருக்கும் ஒரு ஊரில் உள்ள கோவிலில் நுழைய முடியாதது நாடார்களுக்கு சாதிய கீழ்மையுடன் தங்கள் பண பலத்தின் வீச்சையும் மட்டு படுத்துவதாய் இருக்கிறது. பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஒரு பிராமணரை அர்ச்சகராய் கொண்டு வருவது, பூணூல் அணிவது, சத்ரிய குல நாடார்கள் என்று தங்களுக்கு ஒரு சரித்திரத்தை கொண்டு வருவது என சமூகத்தில் மேல் எழும்பும் ஒவ்வொரு சாதியும் கட்டி எழுப்பும் பிம்பங்களை ஆரம்பித்து வைக்கிறார்கள் (Sanskritization).

50-60 வருடங்களாய் உயர்ந்த சாதி உரிமைகளை விடாது கேட்டு வந்த நாடர்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பது என்பது 1800களின் இறுதியில் நடக்கும் சிறு சிறு கிராம கொள்ளைகளில் ஆரம்பிக்கிறது. சிறு கடைகள், வீடுகள் புகுந்து கொள்ளை அடிப்பது என்று நடக்கும் கொள்ளைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த கொள்ளைகளே நாடர்கள் அதிகம் வசிக்கும், அவர்களின் செல்வ நிலை உயர்ந்து இருக்கும் சிவகாசியை கொள்ளை அடிக்க யோசிக்க வைக்கிறது.

சிவன்  கோவில் நுழைவின் பிரச்சினையில், பதட்டத்தில் இருக்கும் நாடார்கள் சிவகாசியை கொள்ளை இட்டுவிட்டால் அதன் பின் தங்கள் சாதிய நிலை இன்னமும் கீழே போய்விடும் என்று சிவகாசியை காப்பாற்ற தயார் ஆகிறார்கள். செண்பக குட்டி, அய்ய நாடார் போன்றோர் தலைமையில் ஜூன் 6,1899ம் தேதி நடக்க போகும் கொள்ளையை தடுக்க கூடுகிறார்கள்.

சிவகாசி கொள்ளை, எழும் அலையின் உச்சியாய் விழுந்தது. அதன் பின் இருந்த எதிர்ப்புகள் எல்லாம் நீர்த்து போன அளவிலேயே இருந்தது. பெரும் எதிர்ப்பாய் இருந்த மறவர்களும், குற்ற பரம்பரை சட்டம் மற்றும் காவல் பணிகளின் பொறுப்பு ஆங்கில போலீசுக்கு போனதும், அவர்களை தரையில் அழுத்தியது.

1900களில் ஆரம்பித்த விடுதலை போராட்டமும் 1920களில் நடந்த கோவில் நுழைவு போராட்டங்களும் பெரிய எதிர்ப்புகளை காணாது சிவகாசியில் நடந்து முடிகிறது. இதற்க்கு பிறகும் பயணிக்கும் கதை வெகு விரைவில் 1980களுக்கு வந்து முடிகிறது.

கிராமங்களின் சாதிய வேறுபாடுகள், உயரும் பொருளாதார நிலை கொண்டு வரும் மாற்றங்கள், அதன் பொருட்டு மாறும் மனிதர்கள் என்று பூமணியின் கதை செல்கிறது.  

வர்க்க வேறுபாடுகளின் கதையாகவும், பொருள்லாதார மாற்றம் எப்படி சாதிய கட்டமைப்பை மாற்றி போடுகிறது என்பதின் கதையாகவும் விரியும் கதை, சில இடங்களில் வெறும் வரலாற்றின் வர்ணனைகளாய் போய் விடுகிறது. சற்று அலுப்பை கூட்டும் விதமாய் இருக்கிறது இது.

அது போலவே வரலாற்றின் விமர்சனங்கள் எதுவும் இல்லது வைக்க படும் கதை வரலாற்று மனிதர்களின் முன்/பின் நிலைகள் இல்லாது  நிகழ்வுகளின் விளைவுகள் சொல்லப்படாமல் போகிறது. உதாரணமாக ராக்லாந்து  பாதிரியின் செயல்கள் என்ன மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது என்பது இல்லை. 1000 பக்ககங்கள் விரியும் கதையில் எல்லாவற்றையும் விவரிக்க முடியாதுதான்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு family tree இருந்திருந்தால் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்த மாதிரியான வீச்சு கொண்ட ஒரு கதை தமிழில் எழுதபடுவது அவசியமாகவே தெரிகிறது. இப்பொழுது படித்து கொண்டிருக்கும் 'ஆழி சூழ் உலகு'ம்  இது போன்றே ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வரலாற்று புனைவுகள் படிக்கும் ஆர்வமும், (கொஞ்சம் பொறுமையும்) இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.


நாவல் - அஞ்ஞாடி

பதிப்பாளர் - க்ரியா

விலை - 925 ரூ

1 comment:

Rathnavel Natarajan said...

அஞ்ஞாடி புத்தகம் - திரு பூமணி எழுதியது.
அருமையான விமர்சனம்.
நன்றி.

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...