கோடிக்கரை / கோடியக்காடு - 2

இந்த சரளைக்கற்களின் பாதையின் முடிவில் திறந்த வெளிக் குறைந்து புதர்கள் இன்னமும் அடர்த்தியாக இருக்கின்றன. அதுவரை தூரமாக தெரிந்த கலங்கரை விளக்கம் சட்டென்று அருகில் வருகிறது. இந்த இடங்களில் சதுப்பு நிலம் இன்னமும் கலங்கிய நீருடன், புதை மணல்களை தன்னுள் கொண்டு அமைதியாக இருக்கிறது. புதை மணலில் புதையும் ரவி தாசனின் அவலக்குரல் மெதுவாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த கலங்கரை விளக்கத்தில் ஏறி பார்க்கலாம் எனினும் மாலை வேளைகளில் மட்டுமே இது திறக்க படுகிறது. இதை தாண்டியவுடன் ஒரு மணற்குன்றின் முன் பாதை முடிவுறுகிறது. அலைகளின் சப்தம் மிக அதிகமாக இருக்கிறது.

அந்த மணற்குன்றின் மீதேறினால் பறந்து விரியும் கடல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரியும் மணற்க்கடற்க்கரை. இந்த பரந்த வெளியில் கடந்து போன வாழ்வின் எச்சமாய் ஒரு இடிந்த கலங்கரை விளக்கம். அது ஒரு கலங்கரை விளக்கம் என்பதே அதை பற்றி தெரிந்திருந்தால் மட்டுமே ஊகிக்க முடியும். 

கோடியக்காட்டின் கடல் மிகவும் கலங்கலாகவும், அலைகளோடும் இருக்கிறது. பல இடங்களில் கடல் உள் வந்து இருப்பது தெரிகிறது. கடற்கரை இன்னமும் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்பதால் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கிறது.
சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தின் மிச்சம் இந்த கரையில் கடந்து போன வரலாற்றின் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. 1100 வருடங்களுக்கு முன் இந்த அத்துவான காட்டின் முடிவிற்கு வந்து அங்கு ஒரு கலங்கரை விளக்கும் அமைக்க தேவை என்ன?

என்ன மாதிரியான இடமாக இது இருந்தது அப்போது? கடலோடிகளாய் தமிழர்கள் இருந்ததற்க்கான குறிப்புகள் சிலவே. கடலோரம் முழுதும் சென்றிருந்தாலே ஒழிய இந்த இடத்தில் நிலம் திரும்புவதும் அதன் பொருட்டு ஒரு கலங்கரை விளக்கின் தேவையும் உணரப்படிருக்கும். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு கடல் வாணிபம் இந்த பக்கமாக நடந்திருந்தாலே இதன் தேவை அவசியமாகி இருக்கும்.

இது போன்ற நினைவுகளின் ஊடே இந்த அழகிய கடற்கரையில் ஒரு தூரம் நடந்து விட்டு வந்தேன். மேலே ஏறி பார்ப்பதற்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது. கோடியக்காட்டின் அழகின் ஒரு சிறு பகுதியை இங்கு இருந்து பார்க்க முடிகிறது.


'பொன்னியின் செல்வனில்' கல்கி குழகர் இன்னமும் தனிமையில் இருப்பது பற்றி எழுதுகிறாரே ஒழிய இந்த கலங்கரை விளக்கின் நிலை பற்றி எழுதவில்லை. இப்போது வெறும் அரை வட்டமான செங்கல் குவியலாய் மட்டுமே நிற்கிறது இந்த கலங்கரை விளக்கம்.

கிளம்ப மனமில்லாமல் இங்கு திரிந்து விட்டு மெதுவாக காருக்கு திரும்பினேன். திரும்பி வரும் போது இன்னமும் நிறைய வெளிமான்களும், புள்ளி மான்களும் பார்த்தேன். பெட்டை மயில்கள் நிறையவும் ஓடித் திரிந்து கொண்டிருந்தன. ஒற்றை காட்டுப் பன்றியும் நின்று எங்களை வெறித்துக் கொண்டிருந்தது.

இவ்வளவு தூரம் வந்து விட்டு குழகரை பார்க்காமல் வந்தால் எப்படி? வெளியில் இருந்து பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று கோயிலுக்கு சென்றேன். குழகர் கோயிலை காணவில்லை. இங்கிருந்த சோழர் கால குழகர் கோயிலுக்கு பதிலாக நாம் நமது கலைத்திறனுடன் ஒரு புதிய கோயிலை சமைத்திருக்கிறோம். வாசலில் இருக்கும் இரண்டு துவார பாலகர்கள் மட்டுமே சோழர்களை நினைவுருத்துகிறார்கள்.

அப்படியே அங்கிருந்து கிளம்பி வேதாரண்யம் வந்து சேர்ந்தேன்.

More pictures here --> https://plus.google.com/photos/104749384557340720796/albums/5929965155419744513

கோடிக்கரை / கோடியக்காடு - 1

நிலத்தின் முடிவு என்று ஒரு கருதுகோள் உண்டு. நிலம் முடிந்து கடல் ஆரம்பிக்கும் இடம். ஒரு விதமான மாயமான mystical இடம். அதன் மீது ஒரு விதமான ஈர்ப்பு எப்போதும் எனக்கு.

சில வருடங்களுக்கு முன் ப்ளோரிடாவில் Key Westக்கு இதற்காகவே இரவு முழுதும் கார் ஒட்டி சென்று ஏமாந்தேன். எந்த mystical ஈர்ப்பும் இல்லாமல் இன்னுமொரு அமெரிக்க வர்த்தக நகரமாக மட்டுமே இருந்தது. ஒரு படகு பயணம், கடைகள், cruise கப்பல்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் என்று ஒரு ஆன்மா இல்லாத மற்றுமொரு இடம் மட்டுமே.

கோடிக்கரையின் மீதான எனது ஈர்ப்பு இதனாலேயே. அதன் நிலத்தின் முடிவான நிலை மற்றுமில்லாது, 'பொன்னியின் செல்வனில் வரும் அதன் வர்ணனைகளும் ஒரு காரணம். நிலத்தின் முடிவில் ஒரு ஆளரவம் இல்லாத காடு, காட்டின் முடிவில் எல்லையில்லா கடல். காட்டின் இன்னொரு முடிவில் ஒரு கோயில். கோயிலில் இருக்கும் வயதான பட்டரும், ஒரு இளம்பெண்ணும்.
காடு ஒரு புறம் romanticகாக இருந்தாலும், அதில் இருக்கும் சதுப்பு நிலமும், புதை மணல்களும், இரவில் கத்தும் கோட்டான்களும், கந்தகம் கக்கும் குழிகளும் இந்த நிலத்தின் ராணியாக ஓடித் திரியும் பூங்குழலியும் இந்த இடத்தை பார்க்க தூண்டவிடில் படித்து என்ன பயன்?

இந்த முறை கோடியக்காடு மட்டுமே பார்க்க வேண்டி இருந்தது. குழகர் ஏற்கனவே சென்ற முறை பார்த்து விட்டேன். காட்டுக்குள் செல்ல வேண்டி இருந்ததால் வேதாரண்யத்தில் இருந்து ஒரு கார் எடுத்துக் கொண்டு கோடியக்கரை வன விலங்கு அலுவலகம் சென்று விட்டு அங்கிருந்து காட்டுக்குள் சென்றோம்.

கோடியக்காடு ஒரு சதுப்பு நிலக்காடு. அடர்த்தியான மரங்களோ, பகலிலும் இருண்ட கானகமோ இல்லை. புதர்களும் சதுப்பு நிலங்களும், புதை மணலும் நிறைந்த ஒரு திறந்த வெளிக் காடு.

கிட்டத்தட்ட நண்பகலை நெருங்கிவிட்ட நேரம் என்றாலும் உப்பு காற்றுடன் ஓரளவிற்கே வெப்பம் இருந்தது. கிட்டத்தில் கடல் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பரந்து விரிந்த பேரு வெளியில் நான் சென்ற காரின் சத்தம் மட்டுமே.
எந்த நேரமும் குறுக்கே பூங்குழலி ஓடி வரலாம் என்பது போன்ற ஒரு நினைவு. புள்ளி மான்கள் கூட்டமாக திரிந்து கொண்டிருந்தன. காரின் அரவம் கேட்டவுடன் துள்ளிப் பாய்ந்து ஓடின. நிலம் கடல் மணலுடன் தண்ணீர் நிற்கும் ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தது.

வன விலங்கு துறை கார் முதலிய வாகனங்கள் செல்வதற்காக சரளைக் கல் பாதை அமைத்திருக்கிறார்கள். நீண்ட பாதை, வளைந்து வளைந்து காட்டுக்குள் செல்கிறது.

 வெளி மான் (Black buck) ஒன்று தனியே நின்று கொண்டிருந்தது. நல்ல தூரத்தில் இருந்தாலும், காரின் கதவை திறக்கும் சிறு சத்தமும் அவற்றை ஓட வைக்கிறது. மிக கம்பீரமான மிருகங்கள். அவற்றின் வளைந்த கொம்புகளும், கரும் நிறமும், நீண்ட மெல்லிய கால்களும் அவற்றுக்கு ஒரு தனி அழகை கொடுக்கிறது. இரு கால்களையும் ஒட்டி வைத்துக் கொண்டு எப்போதும் ஓடுவதற்கு தயாராக இருக்கின்றன.

புள்ளி மான்களுக்கும், வெளி மான்களுக்கும் நடுவே காட்டுக் குதிரைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கின்றன. கோடியக்கரையில் இருந்து நிறைய மாடுகளும் இந்த மேய்ச்சல் நிலத்தை தேடி வருகின்றன.

பேசிக் கொண்டே வரும்போது பாதையின் குறுக்கே சாம்பலும் செம்மண்ணும் கலந்த வண்ணத்தில் ஒரு நரி நின்று கொண்டிருந்தது. கோடியக்கரையின் வேட்டை விலங்குகளின் தலைவர் நரி மட்டுமே. நான் புகைப்படம் எடுக்க முனைவதற்குள் சிட்டாய் பறந்து விட்டது.

Empty Nest or Vanathy goes to college - 2

 Here it is customary to say something about the Indian education system. But I am so stumped that I do not know where to start.  When raisi...