கோடிக்கரை / கோடியக்காடு - 1

நிலத்தின் முடிவு என்று ஒரு கருதுகோள் உண்டு. நிலம் முடிந்து கடல் ஆரம்பிக்கும் இடம். ஒரு விதமான மாயமான mystical இடம். அதன் மீது ஒரு விதமான ஈர்ப்பு எப்போதும் எனக்கு.

சில வருடங்களுக்கு முன் ப்ளோரிடாவில் Key Westக்கு இதற்காகவே இரவு முழுதும் கார் ஒட்டி சென்று ஏமாந்தேன். எந்த mystical ஈர்ப்பும் இல்லாமல் இன்னுமொரு அமெரிக்க வர்த்தக நகரமாக மட்டுமே இருந்தது. ஒரு படகு பயணம், கடைகள், cruise கப்பல்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் என்று ஒரு ஆன்மா இல்லாத மற்றுமொரு இடம் மட்டுமே.

கோடிக்கரையின் மீதான எனது ஈர்ப்பு இதனாலேயே. அதன் நிலத்தின் முடிவான நிலை மற்றுமில்லாது, 'பொன்னியின் செல்வனில் வரும் அதன் வர்ணனைகளும் ஒரு காரணம். நிலத்தின் முடிவில் ஒரு ஆளரவம் இல்லாத காடு, காட்டின் முடிவில் எல்லையில்லா கடல். காட்டின் இன்னொரு முடிவில் ஒரு கோயில். கோயிலில் இருக்கும் வயதான பட்டரும், ஒரு இளம்பெண்ணும்.
காடு ஒரு புறம் romanticகாக இருந்தாலும், அதில் இருக்கும் சதுப்பு நிலமும், புதை மணல்களும், இரவில் கத்தும் கோட்டான்களும், கந்தகம் கக்கும் குழிகளும் இந்த நிலத்தின் ராணியாக ஓடித் திரியும் பூங்குழலியும் இந்த இடத்தை பார்க்க தூண்டவிடில் படித்து என்ன பயன்?

இந்த முறை கோடியக்காடு மட்டுமே பார்க்க வேண்டி இருந்தது. குழகர் ஏற்கனவே சென்ற முறை பார்த்து விட்டேன். காட்டுக்குள் செல்ல வேண்டி இருந்ததால் வேதாரண்யத்தில் இருந்து ஒரு கார் எடுத்துக் கொண்டு கோடியக்கரை வன விலங்கு அலுவலகம் சென்று விட்டு அங்கிருந்து காட்டுக்குள் சென்றோம்.

கோடியக்காடு ஒரு சதுப்பு நிலக்காடு. அடர்த்தியான மரங்களோ, பகலிலும் இருண்ட கானகமோ இல்லை. புதர்களும் சதுப்பு நிலங்களும், புதை மணலும் நிறைந்த ஒரு திறந்த வெளிக் காடு.

கிட்டத்தட்ட நண்பகலை நெருங்கிவிட்ட நேரம் என்றாலும் உப்பு காற்றுடன் ஓரளவிற்கே வெப்பம் இருந்தது. கிட்டத்தில் கடல் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பரந்து விரிந்த பேரு வெளியில் நான் சென்ற காரின் சத்தம் மட்டுமே.
எந்த நேரமும் குறுக்கே பூங்குழலி ஓடி வரலாம் என்பது போன்ற ஒரு நினைவு. புள்ளி மான்கள் கூட்டமாக திரிந்து கொண்டிருந்தன. காரின் அரவம் கேட்டவுடன் துள்ளிப் பாய்ந்து ஓடின. நிலம் கடல் மணலுடன் தண்ணீர் நிற்கும் ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தது.

வன விலங்கு துறை கார் முதலிய வாகனங்கள் செல்வதற்காக சரளைக் கல் பாதை அமைத்திருக்கிறார்கள். நீண்ட பாதை, வளைந்து வளைந்து காட்டுக்குள் செல்கிறது.

 வெளி மான் (Black buck) ஒன்று தனியே நின்று கொண்டிருந்தது. நல்ல தூரத்தில் இருந்தாலும், காரின் கதவை திறக்கும் சிறு சத்தமும் அவற்றை ஓட வைக்கிறது. மிக கம்பீரமான மிருகங்கள். அவற்றின் வளைந்த கொம்புகளும், கரும் நிறமும், நீண்ட மெல்லிய கால்களும் அவற்றுக்கு ஒரு தனி அழகை கொடுக்கிறது. இரு கால்களையும் ஒட்டி வைத்துக் கொண்டு எப்போதும் ஓடுவதற்கு தயாராக இருக்கின்றன.

புள்ளி மான்களுக்கும், வெளி மான்களுக்கும் நடுவே காட்டுக் குதிரைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கின்றன. கோடியக்கரையில் இருந்து நிறைய மாடுகளும் இந்த மேய்ச்சல் நிலத்தை தேடி வருகின்றன.

பேசிக் கொண்டே வரும்போது பாதையின் குறுக்கே சாம்பலும் செம்மண்ணும் கலந்த வண்ணத்தில் ஒரு நரி நின்று கொண்டிருந்தது. கோடியக்கரையின் வேட்டை விலங்குகளின் தலைவர் நரி மட்டுமே. நான் புகைப்படம் எடுக்க முனைவதற்குள் சிட்டாய் பறந்து விட்டது.

2 comments:

VarahaMihira Gopu said...

பூங்குழலியை தேடிச்சென்ற வர்ணனை அற்புதம்.பொன்னியின் செல்வன் படித்த பின் கோடிக்கரை போக பல்லாண்டு ஆசை.

இந்த வாரம் நான் போகலாம். பஸ் எதும் இல்லையா? போக கார் வேண்டுமா? படகுகள்?

-கோபு
VarhaMihiraGopu.BlogSpot.in

Muthuprakash Ravindran said...

பஸ் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வேதாரண்யத்தில் இருந்து இருக்கிறது. ஆனால் கோடியக்காட்டுக்குள் செல்ல ஒரு வாகனம் வேண்டும். கார் மட்டுமே இப்போதைக்கு அனுமதிக்க படுகிறது. வனத்துறை ஒரு வேன் வைத்திருந்தாலும் குறைந்தது 10 பேராவது இருந்தால் மட்டுமே அதை எடுப்பார்கள். படகுகள் பற்றி தெரியவில்லை.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...