பொன்னியின் செல்வன் - நாடகம்

2015 - நிகழ்வு

சென்ற வாரம் மறுபடியும் ஒரு முறை 'பொன்னியின் செல்வன்' பார்த்தோம். அரங்கம் மற்றும் பெரும்பாலான நடிகர்கள் அப்படியே இருந்தாலும், நாடக நேரம் ஒரு 30 நிமிடங்கள் வரை அதிகரித்ததாக இருந்தது. வசனங்களில் சிறு மாற்றங்கள் நாடகம் முழுதும் தெரிந்தது. வாள் சண்டைகள் சென்ற வருடத்தை விட நன்றாக இருந்தது.

நடிகர் மாற்றங்களில் பொன்னியின் செல்வர் மாற்றமே சற்று ஏமாற்றத்தை தந்தது (என் மனைவிக்கும்!!). சென்ற வருடம் நடித்தவரே நன்றாய் இருந்திருக்க, கொஞ்சம் பொருத்தமில்லா தோற்றத்துடன், வசன உச்சரிப்புகளில் ஒரு வெளி மாநில வாசனையும் கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருந்தது.

வானதியாக நடித்த பெண்ணும் சென்ற வருடத்திய வானதியை விட நன்றாக இருந்தாலும் நன்றாக நடித்தார் என்று சொல்ல முடியாது. ஏனைய மாற்றங்கள் எல்லாம் நன்றாகவே இருந்தன.

மதுரை நிகழ்வின் சுருக்கமான பதிவு

'பொன்னியின் செல்வன்' நாவலை நான் படித்த போது நான் 8ம் வகுப்பில் இருந்தேன். அந்த கதை பின்னிய வலையில் கிட்ட தட்ட இராப்பகலாய் 5 பாகங்களையும் படித்து முடித்தேன். பல முறை இது எல்லாம் நடந்ததா? பண்டைய தமிழகம் இப்படித்தான் இருந்ததா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது. என்னுடைய பின்னாளைய பல பிரயாணங்கள் 'பொன்னியின் செல்வன்'ஐ மட்டுமே துணையாக கொண்டு செல்லப்பட்டவை.

'பொன்னியின் செல்வன்' ஒரு படமாக எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று பல முறை யோசித்தததுண்டு. ஆனால் எவரையும் எந்த பாத்திரத்திலும் வைத்துப் பார்க்க முடியவில்லை. 1999இல் மாஜிக் லண்டேர்ன் நடத்திய 'பொன்னியின் செல்வன்' அரங்கேற்றத்தின் போது நான் இந்தியாவில் இல்லை. எனவே வெறும் புகைப்படங்களை பார்த்து தேற்றிக்கொள்ள நேரிட்டது. இருந்தாலும் என்னுடைய நாயகர்களும், நாயகிகளும் மணியனின் அழகிய படங்கலாகவே இருந்து விட்டனர். எனவே மீண்டும் அதே குழுவினர் 'பொன்னியின் செல்வனை' அரங்கேற்றுகின்றனர் என்றவுடன் இந்த முறை விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

'பொன்னியின் செல்வன்' 5 பாகங்கள், பல நிகழ்வுகள், வீர நாராயணம் ஏரியில் இருந்து இலங்கை வரை பல சம்பவங்களுடன் செல்லும் கதை. நடுவில் கடலில் பல நிகழ்வுகள். இவை அத்தனையும் எப்படி மேடையில் கொண்டு வர முடியும் என்பதுதான் இதை எதிர்ப்பார்க்க வைத்தது. பிறகு, கதை மாந்தர்கள். வந்தியத்தேவன் போன்று ஒரு நாயகன், துள்ளலும் எள்ளலுமாக இருக்கும் ஒருவன். அரசாங்கத்தை பின்னிருந்து ஆட்டுவிக்கும் குந்தவை, குரோதத்துடன் நந்தினி, சோகமும், அவசரமுமான ஆதித்த கரிகாலர், வினோத ஒற்றன் ஆழ்வார்க்கடியான் என பல முகங்கள்.

இந்த சவால்களையெல்லாம் ஏற்று, மேடையில் சின்ன மாற்றங்களின் மூலம் பல நிலங்களையும், கடலையும் கொண்டு வந்து என முதல் சவாலான இடங்களை, தன் அரங்கத்தால் அதிர வாய்த்த தோட்டா தரணிக்கு முதல் பாராட்டு. அரண்மனை. கடல், இலங்கை, கோடியக்கரை காடுகள் என அனைத்தும் அருமையாக நம் கண் முன் கொண்டு வரப்பட்டது.1000 வருடங்களுக்கு முந்தைய தமிழர்கள் என்னவிதமான ஆடை அணிதிருப்பர்? அதை மேடையில் எப்படி காட்டுவது? இந்தக் கேள்விக்கு பதிலாக நம் வழக்கமான புராண/ அரச படங்கள்/நாடகங்களின் கண்ணை பிதுங்க வைக்கும் ஆடைகளில் இருந்து வேறுபடுத்தி, அரசனையும், இளவரசிகளையும், ஆண்டிகளையும், சேடிகளையும் நம்பும் வகையில் உடை உடுத்தி நம் முன் நிறுத்திய உடை அலங்கார நிபுணர் ப்ரீதிக்கு இரண்டாம் பாராட்டு (இவரே குந்தவையாகவும் நடித்திருந்தார்)

வந்திய தேவனை கண் முன் நிறுத்திய ஸ்ரீகிருஷ்ணாவிற்கும், ஆதித்த கரிகாலனின் 'melancholy' மனதை கோடிக்காட்டிய பசுபதிக்கும், குரோதத்துடன் பழி வாங்கவும், பழுவேட்டரையரை மயக்கவும் செய்து ஒரு அநாயசமான 'balance' (சிறிது நழுவினாலும் நாரசமாகி இருக்கும்) காட்டிய நந்தினியான மீராவுக்கும் அடுத்த பாராட்டு.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த நாடகத்தில் , பொன்னியின் செல்வனின் கதையில் சில மாற்றங்கள், சில நிகழ்வுகள் ஒன்றாகப்பட்டு, சில நிகழ்வுகளை அறவே தவிர்த்து, சில பாத்திரங்களை விடுவித்து (மணிமேகலை!!) ஒரு திரைக்கதை எழுதும் சவாலை சில குறைகள் இருந்தாலும் பண்ணிக்காட்டிய குமாரவேல் பாராட்ட பட வேண்டியவர்.

ஆழ்வார்க்கடியான் நம்பி, ரவிதாசன் என பலரையும் நம் நம்பும் வகையில் கண் முன் காட்டியதற்கு மிகப்பெரிய பாராட்டு. குந்தவை ஓரளவுக்கு நம்பும் படி இருந்தாலும் (இன்னும் கொஞ்சம் பெரிய பெண்ணாக நினைத்திருந்தேன்), வானதி கொஞ்சம் பொருத்தமில்லாமலும் தெரிந்தது ('யானைப் பாகா' அத்தியாயம் இல்லாமல் இருந்தது என்னை பொறுத்த வரை மன்னிக்க முடியாத குற்றம்!). பெரிய பழுவேட்டரையரும், கந்த மாறனும் ஒரு ஆறு அடிக்கு ஆஜானுபாகுவானவர்களாய் கதையில் வருவார்கள். இதில் கொஞ்சம் சிறு பிள்ளைகலாய் தெரிகிறார்கள்.

கதை ஓட்டத்தில், சிற்சில இடங்கள் தடுமாறுகிறது. சில நடிகர்களுக்கு வார்த்தைகள் குழறியது, பூங்குழலி, சேந்தன் அமுதன் கதை கொஞ்சம் தெளிவில்லாமல் போனது என சில குறைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு கதையை பெரிதும் மாற்றாது எடுத்ததிற்க்கும், இவ்வளவு பிரம்மாண்டத்தில் கதையை மறக்காது, கல்கியின் வசனங்களை நாடகம் முழுவதும் பயன்படுத்தியதர்க்கும் நாடக இயக்குனர் பிரவின் நமது நன்றிக்கு பாத்திரமாகிறார்.

எல்லாவற்றிற்கும் மேல், 'பொன்னியின் செல்வன்' கதை மீதிருக்கும் காதல் இந்த நாடகத்தால் கொஞ்சம் கூடியதற்கும், காட்சி வடிவத்தில் எல்லாவற்றையும் பார்த்து வரும் இன்றைய தலைமுறைக்கு (என் மகன்!!) இந்த கதையை எடுத்துச் செல்ல முயன்றிருக்கும் இந்த முயற்சி வரவேற்க படவேண்டியது.

மதுரையில்..

சென்னையில் 'பொன்னியின் செல்வன்' பார்த்து விட்டு வரும் பொழுது சற்று ஏமாற்றமாக இருந்தது. ஒரு முறை மட்டும் பார்த்துவிட்டு எப்படி திருப்தி அடைவது? எனவே வெளியே வரும் போதே அடுத்து மதுரைக்கு போய் பார்ப்பது என்று திட்டம் போட ஆரம்பித்தாகிவிட்டது.

ரயில் முன் பதிவில் ஆரம்பித்து நாடகத்திற்கு முன் பதிவு செய்ய ஆரம்பித்த போதுதான், மதுரையில் ஒவ்வொருவராக 'நானும் வருகிறேன்' என்று சேர ஆரம்பித்தார்கள். என் அப்பா, அம்மா, அத்தை, அண்ணி, தெரிந்தவர்கள் என்று மொத்தம் 15 பேருக்கு முன் பதிவு செய்தேன்.

அந்த நாளும் வந்தது. எனக்கு கொஞ்சம் காய்ச்சலாக இருந்ததால் முடிந்த அளவு மாத்திரைகளை விழுங்கி விட்டு லக்ஷ்மி சுந்தரம் ஹால் சென்று அமர்ந்தோம்.

அட்சரம் பிசகாது இந்த முறையும் 6 மணிக்கு சரியாக ஆரம்பிக்க பட்டது. சென்னையில் இருந்த ஒன்றிரண்டு வார்த்தை குழறல்கள் இல்லாமல் நாடகம் சென்றது. இந்த முறை ஆதித்த கரிகாலனாக பசுபதிக்கு பதில் பிரபு சாலமன் என்று ஒருவர். அச்சு அசல் பசுபதி போலவே உயரம், உடல் வாகு என்று இருந்தாலும் பசுபதியின் நாடக அரங்க இருப்பு (presence) இல்லை.

அது தவிர இந்த முறை நாடகத்தில் வந்த தேவார பாடல்களை கொஞ்சம் கவனித்து கேட்க முடிந்தது. இந்த பாடல் தொகுப்பை யாரேனும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.அது போக, கல்கியின் இந்த பாடலை பாடியவரும் மிக நன்றாக பாடி இருந்தார்.
அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே
வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?

4 மணி நேரம் சென்றதே தெரியாமல் இன்னமும் ஒரு முறை கண்டு களித்து விட்டு வீடு சேர்ந்தோம். இன்னொரு 15 வருடங்கள் காக்க வேண்டி இராமல் வருடத்திற்கு 2 முறையெனும் அரங்கேற்றினால் நன்றாக இருக்கும்.

1 comment:

Krishnamurthi Balaji said...

VERY WELL-CRITICISED. CREATES AN EAGER TO SEE THE DRAMA. THANKS. WAITING FOR RELEASE AT BANGALORE - K.BALAJI

The Girl with a smile and a Turkey shooter

The Q train runs from the 96th Avenue till the Coney Island . I was waiting for it in the 34th Street - Herald Square station. Four lines ...