ஜே.ஜே.சில குறிப்புகள்

“இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது நான் வெறுப்படைகிறேன்” 

ஜே.ஜே.சில குறிப்புகள் - நேற்றிலிருந்து இது குறித்து உனக்கு எழுத தோன்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்ற கேள்வியை கேட்பதை நிறுத்தி பல நாட்களாயிற்று. நமக்கு தோன்றுவதற்கு எல்லாம் ஒரு காரணம் இருக்க வேண்டுமா என்ன?

கல்லூரி நாட்களின் ஆரம்பத்தில் படித்து வெகு நாட்கள் பாலு போலவும் , ஜே.ஜே போலவுமாய் திரிந்த நாட்கள் உண்டு. சரித்திர நாவல்களின் கவர்ச்சியை முழுவதுமாய் வெறுக்க வாய்த்த "என்ன சிவகாமி அம்மாள் தன்னுடைய சபதத்தை முடித்துவிட்டாளா?" என்ற கேள்வியும், ஜே.ஜே வின் மதிப்பீட்டு தேடல்களும், நாம் வாழும் இந்த உப்பு சப்பில்லாத வாழ்வின் கேள்விகளும் என்னை தூங்க விடாது செய்த நாட்கள்.

இன்றும், ஜே.ஜே மனதின் வேகங்களை திரும்ப திரும்ப கேள்விகளுக்கு உள்ளாக்கி கொண்டே இருக்கிறான். அவனின் சமரசமற்ற வாழ்வு , நாம் வாழ்வு முறைகளை கேள்விக்கு உள்ளாக்கி கொண்டே இருக்கிறது. வாழ்வின் ஒழுக்கம், மதிப்பீடுகள்
என்றால் என்ன என்ற கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. ஜே.ஜே யின் அகம்பாவமும் , அதன் தோல்வியும் என்ன சொல்ல வருகிறது?

ஜே.ஜேயின் விழுமியங்கள் வெறும் கதைகளின் ஒழுக்க விவரணைகள் அல்ல. அவை அவன் வாழ்வின் சம்பவங்களின் ஊடே கட்டி அமைக்க பட்டவை. அவன் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறான், அழகியல் கோட்பாடு, எண்ணங்கள், புரட்சி,

அரசியல், வணிக இலக்கியம் என அவன் கேள்வி கேட்காத விஷயங்கள் சிலவே.

வெண்குஷ்டம் வந்த ஓமண குட்டி அவனுக்கு தேவதையாய் தெரிகிறாள். ஒருவிதத்தில் அதுவே சரியாகவும் படுகிறது. காதலுக்கும் காமத்திற்கும் மனதிற்கு அணுக்கமான பெண்/ஆண் தானே தேவை - அவளின் தோற்றமும், ஏனைய விஷயங்களும்
எதற்கு? அது பார்வையின் குறைபாடு அல்ல. காதலின் வெளிப்பாடு.

பிச்சைக்காரன் தேய்த்து தள்ளும் காசின்  அடியில் அழியும் அகம்பாவம் பல நாட்கள் இரவில் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.  பாலு தேடி செல்லுவது ஜே.ஜேவையா இல்லை அவனையேவா.

வாழ்வே ஒரு தேட்டமாக இருக்கிறது. ஜே.ஜே இந்த தேட்டத்தின்  மாய மானாகவும், தேடும் ராமனாகவும் இருக்கிறான். இருத்தலின் வலியும், தோல்வியுற்ற வாழ்வின் எக்காளமும் எப்போதும் நம்மை துரத்திக்கொண்டே இருக்கிறது.

ஆல்பர்ட் காம்யுவின் மரணத்தோடு ஆரம்பிக்கிறது இப்புத்தகம். அவனின் இருத்தலிய முரண்களையும் , அதன் சோகத்தையும் உள்ளடக்கியதாக பாலுவின்  கதையும்,ஜே.ஜேயின் கதையும் விரிகிறது.

ஜே.ஜே என்ன சொல்ல வருகிறான்? வெறும் மேலோட்டமான வாழ்வில் கொஞ்சம் நுண்னுணர்வை கொண்டு  வாழ சொல்கிறான்.  அது ஆனால் எவ்வளவு கடினமானது. போன வாரம் மொட்டை மாடியில் ஒரு சூரிய உதயம் பார்த்தேன். மனதை உடைக்கும் சோகம். சம்பத் மலை உச்சியில் ஒரு உதயம் பார்த்து விட்டு ஜே.ஜேஇடம் விவரிப்பது நினைவுக்கு வந்தது. சூரிய உதயம் பார்ப்பது மனதை உடைக்கும் என்றால் பார்க்காமல் இருப்பது எப்படி இருக்கும்?

ஜே.ஜே ஏதும் சொல்வதில்லை. வெறும் வாழ்வை கொஞ்சம் ரசனையோடு வாழ சொல்கிறான். அதில் தோற்று செத்து போகிறான். தான் வாழ்வது ஒரு ரசனையற்ற வாழ்வு என்பதை உணராமலேயே இறப்பது அதனினும் மேன்மையா என்ன?

1 comment:

gowthamnithish said...

Excellent post. I want to contact you to discuss about certain books.Your mail id, please.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...