காதல் என்னும் வன்முறை

அர்ஜுன் ரெட்டி பார்த்ததில் இருந்து இந்த காதல் என்ற வஸ்து எப்படிப்பட்டது என்று யோசித்து கொண்டிருக்கிறேன். இது பற்றி பல வருடங்களுக்கு முன் என் டைரியில் சில குறிப்புகள் மட்டும் எடுத்து வைத்திருந்தேன். அதை கொஞ்சம் விரித்து எழுதியதே.

காதல் ஏன் வருகிறது? அது என் எல்லோரிடமும் வருவதில்லை? ஏன் இப்படி உருகி போகிறோம்? என்று பல முறை யோசித்திருக்கிறேன். நடுவில் தீவிரமாய் ஸ்ரீ வைஷ்ணவம் படித்த காலங்களில் இதே கேள்விகள் ஆழ்வார்களையும் துரத்தியதையும்,அவர்கள் ஆன்மீக வழியாய் 'சேஷத்துவம்' என்று சரணாகதி தத்துவம் எழுதியதையும், அநித்திய காமம் எப்படி இந்த மேலான சரணாகதியை தடுக்கிறது என்றும் வாசித்திருக்கிறேன். இது அது பற்றி அல்ல.

காதல் , என்னை பொறுத்தவரை, ஒரு வன்முறையான நிகழ்வு. இந்த வன்முறை என்பது தனிப்பட்ட முறையில் நிகழ்வது. நம் உள்ளேயே நிகழ்வது. இந்த வன்முறை மனம் சம்பந்த பட்டது. காதல் மிருதுவான ஒரு உணர்வாய் இருக்கலாம், ஆனால் அது மனதில் நிகழ்த்தும் மாற்றங்கள் வன்முறையானவை. ஏன்?

 அதற்கு காதல் என்பது என்ன என்ற சிறு புரிதல் அவசியம். காதல் , என்னை பொறுத்த வரை, சுயமிழத்தல். நம் சுயம் என்பதை ஒரு ஆண்/பெண்ணின் பொருட்டு இழப்பது. இதுதான் கண்டதும் காதலாகிறது. நாம் நமது சுயத்தை இழக்க தயாராகிவிடுகிறோம் - பார்த்த முதல் நொடியில் , அந்த ஒருவருக்காக. சில நேரங்களில் இது சற்று தள்ளி நிகழ்கிறது.

சுயம் இழத்தல் என்பது மனதளவில் ஒரு வன்முறையான நிகழ்வு. அந்த ஒருவருக்காக நாம் நம்மை மாற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் விருப்பு, வெறுப்பு, கோபம் என எல்லாம் மாறுகிறது. அதுவரை நாம் யாராக இருந்தோமோ அதுவாக இல்லாமல் நாம் காதலிப்பவருக்காக மாறுகிறோம். வேறு ஒன்றும் முக்கியமில்லாமல் போய் விடுகிறது. இந்த மாற்றமே காதலில் ஏனைய சிக்கல்களுக்கு காரணி.

இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. காதலும் , களவும் போற்றப் பட்ட நம் தமிழகத்தில் பெரும்பாலான கல்யாணங்கள் - சுயத்தை அழிப்பதாகவே முடிகின்றது. இழப்பதற்கும், அழிப்பதற்கும் இருக்கும் வேற்றுமை - வாழ்வதற்கும், சாவதற்கும் உள்ள வித்தியாசம். ஆனால் இது வேறு ஒரு நாளுக்கான விவாதம்.

இந்த சுயமிழத்தலை தன்னிலையில் அனுபவிக்கும் போது நிகழும் மாற்றங்களை நாம் காதலிக்கும் நபரிடமும் எதிர்பார்க்கும் போதே இது மனம் சார்ந்த வன்முறையில் இருந்து உடல் சார்ந்த வன்முறையாகிறது. ஒரு தலை காதல், ஆசிட் வீச்சு போன்ற வன்முறைகள் இந்த தளத்திலேயே நிகழ்த்தப்படுகின்றன.

இந்த சுயமிழத்தல் ஒரு விதத்தில் ஒரு irreversible process. காதலுக்கு முந்தைய 'நான்' என்பது திரும்பி செல்ல முடியாத ஒன்றாய் ஆகிவிடுகிறது. காதல் நிறைவேறாத நிலையில், திரும்பி செல்லவும் முடியாமல் போகும் நிலையிலேயே காதல் தோல்வி என்பது சுயத்தை அழித்தலில் (மனத்தளவிலோ, உடலளவிலோ) சென்று முடிகிறது. வேறு ஒரு சுயத்தை தனக்கு தேடுவதும் சில சமயம் நிகழ்கிறது. என்னை பொறுத்தவரை காதலில் தோல்வியோ வெற்றியோ இல்லை. காதல் மட்டுமே உள்ளது.

காமம் என்பதும் இதன் அடிப்படையிலேயே காதலின் ஊடே நிகழ்கிறது. நாம் தனியே இழந்த சுயங்களை இணைத்து நமது சுயமாய் உருவாக்குகிறது. இதுவே காதலின் காமத்திற்கும் , வெறும் காமத்திற்குமான வேறுபாடாய் ஆகிறது. பல முறை, இந்த சுயம் இழத்தலின் வன்முறை - உனக்காய் நான் மாறியிருக்கிறேன், எனவே you are obliged to have sex - என்ற அளவிலும் காமம் கை கூடுகிறது.

இது இன்னொரு கேள்வியை முன் வைக்கிறது. இந்த காதல் ஒருவருடையதா - இல்லை இருவருடையதா? அதாவது இந்த obligation - இது சரியா , தவறா?. என்னை பொறுத்த வரை , நான் சுயம் இழப்பதோ , காதலிப்பதோ என்னுடையது. உன் obligation என்பது உன் இருப்போடு முடிந்து விடுகிறது. இதற்கு பின்னால் எதிர்பார்ப்புகளின் ஏமாற்றங்களை தாங்க முடியாத மன நிலையும் காரணமாய் இருக்கலாம். ஆனால் காதல் என்பது ஒரு very personal உணர்வு என்பது என் நிலை.

இந்த நிலையை பெருமாளை வைத்து அடைவதே நிரந்தரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் பாரதந்திரிய தத்துவம். நம்மாழ்வாரின் இந்த பாசுரம் சொல்லும் காதல் இதுவே. ஆனால் இதுவும் வேறு ஓர் .நாளுக்கானது.

" கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்குசக் கரங்கள்’ என்றுகை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு!’ என்னும்;
இருநிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!
இவள் திறந்து என்செய்கின் றாயே?"

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...