கொஞ்சம் பெண்

Whatsappஇல் ஒரு உரல்/அம்மி /நெல் அவிப்பது போன்று படம் போட்டு அதனருகில் 'இதில்  சமைத்த காலங்களில் நோயில்லாமல் இருந்தோம்' போன்று வரும் அறிவாளித்தனங்கள். இது போன்றவற்றை பார்க்கும் போது இதில் எத்துணை பேர் உரலில் மாவாட்டி இருக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். அல்லது அம்மியில் மசாலா அரைத்திருப்பார்களா? இவை எல்லாம் பெண்களை  உடல் உழைப்பை சுரண்டிய விஷயங்கள். இவற்றை பகிர்வதன் மூலம் இவர்கள் சொல்வது அந்த சுரண்டலை இப்போது நிகழ்த்த முடியவில்லை என்ற ஆதங்கத்தை.
Because I like Frida?

என் மாம்மை (அம்மாவின் அம்மா) பற்றிய எனது நினைவுகள் எல்லாம் அவர் வீட்டு அடுப்படியில் இருப்பது என்பது தற்காலிகமானது அல்ல. எனக்கு, சிவகாசியில், அந்த பெரிய வீட்டில் அவரை வேறெங்கும் பார்த்த ஞாபகமே இல்லை. வேறு இடங்களில் பார்க்கும் போதும் வீட்டை கழுவுவது, பரப்பி கிடைக்கும் சாமான்களை எடுத்து வைப்பது என்று வேலை மட்டுமே வாழ்க்கையாய் இருந்தார். அவருக்கு வேறு என்ன பிடிக்கும் - அவர் சிவாஜி ரசிகையா இல்லை MGR ரசிகையா என்று தெரியாது. வீட்டு வேலைகள் தவிர அவருக்கு வேறு அடையாளம் இருந்ததாய் நினைவில்லை.

பெண்களை வீட்டு வேலை பார்க்க சொல்வதில் இருக்கும் அரசியல் அவர்களை உடல் உழைப்பின் மூலம் வெறும் வேலைக்காரிகளாய் மாற்றுகிறது. அவர்களுக்கு என்று ஒரு சுயத்தை இல்லாமல் செய்து அவர்களை வீட்டிற்குள் அடைக்கிறது. இது வெறும் பெண்ணியம் அல்ல. நம் அம்மாக்களும் , பாட்டிகளும்  தங்கள் சுயங்களை இழந்து, அடுப்படி தவிர வீட்டின் பிற பாகங்களே தெரியாது வாழ்ந்து மடிந்ததன் நிதர்சனம்.

இன்றும் வேலைக்கு போகும் பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலை பார்க்க நிர்பந்திக்க படுவதும் (அல்லது அன்பாய் வற்புறுத்த படுவதும்), மறுப்பவர்கள் பெண்ணியவாதிகள் என்றும் , ஆப் பாய்ல்கள் என்று எள்ளி பேசப்படுவதின் உளவியல் இதுதான். வாஷிங் மெஷின்கள் வந்து விட்ட நாட்களில் கைகளில் துவைக்க சொல்வதன் வன்முறை, ஒரு முறை உட்கார்ந்து கைகளில் துவைத்து பார்த்தால் மட்டுமே விளங்கும்.

ஒரு பெண் காலை 5 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகள் பார்த்துவிட்டு, வேலைக்கும் சென்றுவிட்டு, திரும்பவும் வீட்டு வேலை பார்க்க முடியும் எனில் வேலைக்கு போகும் ஆண்கள் அந்த வேலைகளில் சரி பாதியை ஏன் பார்க்க முடியாது? இது சாதாரண நியாயம் மட்டுமே - இதுவே இங்கு புரட்சிகர பெண்ணியமாக பார்க்க படும் அவலமான சமூகத்தில் வாழ்கிறோம்.

இந்த நியாயம் எடுத்து வைக்கப்படும் போது, ஒரு ஆண் இதை தன்னுடைய அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாக பார்க்கிறான். இதன் எதிர்வினை - நைச்சியமாக நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும் , ஆணவமாக திமிர் பிடித்தவள் என்றுமாக இருக்கிறது.

இதன் நீட்சியாகவே சுக பிரசவ பேச்சும் இருக்கிறது. நானும் என் மகன் பிறப்பதற்கு முன் இதுபோல் பேசி இருக்கிறேன் - 'அந்த காலத்தில் பெண்கள் புதருக்குள் போய் பிள்ளை பெற்றுவிட்டு வரும் போது ஏன் இப்போது இவ்வளவு ஆர்ப்பாட்டம்?' என்று. அதன் பின் பல முறை பிரசவ அறைகளில் நின்ற அனுபவம் normal birth  என்பது எத்தகைய ஒரு  misnomer என்று புரிய வைத்தது. எனக்கு தெரிந்து எந்த பெண்ணும் இயற்க்கை பிரசவம் பண்ண வேண்டி கேட்பதில்லை. நம் வாழ்வு முறைகள் மாறும் போது அதற்கேற்ப நாம் மாறாவிட்டால்  மரணங்கள் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. இது போன்ற கிறுக்கர்களிடம் மாட்டிக்கொள்ளும் பெண்ணே இப்போதும் மரணமடைகிறாள்.

கார்ல் மார்க்ஸ் கணபதியின் இந்த வார்த்தைகளே இதை எழுத தோன்ற வைத்தது.
"நாம் பேசுகிற பழம்பெருமை எல்லாவற்றிலும் உள்ளார்ந்த ஆணாதிக்கக் கூறுகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவளை ஒப்பிட இப்போது உள்ள தலைமுறைப் பெண்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கிறது. முந்தைய தலைமுறைப் பெண்களைப் போல உடலுழைப்பு இல்லாததால் இந்த தலைமுறைப் பெண்கள் நிறைய நோய்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. 
பகல் முழுக்க உடலுழைப்பு இல்லாமல் இருந்துவிட்டு, அந்தியில் நடக்கப்போகும் ஒருத்தியின் செயல் மேனாமினுக்கித்தனம் அல்ல. அதுவொரு விடுதலை. அவள் தலைமுறைகளாக பிணைக்கப்பட்டிருந்த சங்கிலியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறாள் என்றே பொருள். நடப்பதால் எடை குறையவேண்டும் எனும் நிபந்தனை கூட அவசியமில்லை."

அவர் சொல்வதேதான் நான் சொல்வதும் - இன்றைய பெண்கள் இங்கு கடந்து வந்திருக்கும் தூரம் சொற்பமே. இன்னமும் இந்த சமூகத்தின் பல இற்றுப் போன கூறுகளையும் தாண்டியும், உடைத்தும் வர வேண்டி இருக்கிறது. பெண்களுக்கு நான் சொல்வதும் அதுவே - தயவு செய்து திரும்பி விடாதீர்கள்.. 

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...