கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின் அருமையான அருங்காட்சியகங்களை பார்க்கும் போது, நமது கலாச்சாரத்தையும், வரலாற்றையும் சொல்ல இது போன்ற ஒரு அருங்காட்சியகம் இல்லையே என்று நினைத்திருக்கிறேன். இந்தியாவிலும் மும்பை, டெல்லி, சென்னையில் இருக்கும் பெரிய அருங்காட்சியங்கங்களுக்கு சென்றிருக்கிறேன். அவற்றில் நுழைந்தவுடன் ஏற்படும் முதல் சிந்தனை எப்போது வெளியே செல்வது என்பதாகத்தான் இருக்கும். சரியான வெளிச்சம் இல்லாமல், காற்றோட்டம் இல்லாமல், அந்தக்காலத்து மின்விசிறிகள் சுழல இந்த அருங்காட்சியகங்கள், பெரும்பாலும் அவற்றின் பொருட்களை வைத்திருக்க உதவும் வெறும் சரக்கு அறைகளாகவே இருக்கும். அதனாலேயே மதுரையில் இருக்கும் கீழடி அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது. 

கீழடி அகழ்வாய்வில் நிகழ்ந்த அரசியலை நாம் இங்கே பேசப் போவதில்லை. ஆனால் இத்தகைய ஒரு விரிவான நகர நாகரீகத்தை வெளிக்கொணர்வதில் கொண்டுவரப்பட்ட அரசியல் சிக்கல்கள், இன்று இங்கே நிலவும் பிரிவினை கோடுகளை மட்டுமே காட்டுகிறது. அதனாலேயே, அதையும் தாண்டி தன்னுடைய பொறுப்பில் கீழடியை எடுத்துக் கொண்டு விரிவாக அதை அகழ்வாய்ந்த தமிழக தொல்லியல் துறையை பாராட்ட வேண்டியிருக்கிறது.

ஆதிச்சநல்லூரில் முதலில் ஆய்வு செய்த அலெக்சாண்டர் ரீயாவின் ஆய்வுக்கட்டுரையை என்னுடைய 'கொற்கை' புத்தகத்திற்காக மொழிபெயர்த்த போது, ரீயா அதில் புகைப்படமாக கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பொருட்கள் இன்று எங்கே இருக்கிறது என்று வியந்தேன். அவை இப்போது எங்கிருக்கிறது என்ற கேள்வியும், அவற்றை பொதுமக்கள் எளிதாக பார்க்க முடியாத நிலையும் நம்முடைய கலாச்சாரத்தை இருட்டடிப்பு செய்யும் என்பதுதான் உண்மை. 

கீழடி அருங்காட்சியகம்.

எனவே அகழ்வாய்ந்து வெளிக்கொணரப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைப்பதிலும், அந்த அகழ்வாய்விற்கு தங்களது வரிப்பணம் மூலம் ஆதரவளித்த பொதுமக்களுக்கு அவற்றை கொண்டு சேர்ப்பதிலும் எப்போதும் நாம் ஆர்வம் கூட்டியதில்லை. இதனாலேயே அகழ்வாய்வின் முடிவிலேயே உடனடியாக அருங்காட்சியகம் அமைத்து, அதை மிகவும் சிறப்பாக அவற்றை மக்களிடம் சேர்ப்பித்ததுதான் இந்த அரசின் பெரும் சாதனையாக இருக்கும்.

அகழ்வில் கிடைத்த ரோமானிய நாணயங்கள்.

கீழடி அருங்காட்சியகம், இன்றைய கீழடி கிராமத்திலேயே இருக்கிறது. பெரிய பரப்பளவில் விரிவாக, நமது செட்டிநாட்டு வீடுகளின் பாணியில் முற்றம், நல்ல பெரிய சன்னல்கள், தரையில் ஆத்தங்குடி கற்கள், வண்ண கண்ணாடிகள், உட்கார பெரிய திண்ணைகள் என்று பல்வேறு பகுதிகளாக கீழடி அருங்காட்சியகம் விரிகிறது. இதன் வடிவமைப்பே, நமது கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட கட்டுமானத்தை கொண்டே, நமது வரலாற்றை சொல்லும் விதம் முதலாவதாக நம்மை கவர்கிறது.

நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன், பதினைந்து நிமிட வரலாற்று படம் ஒன்று காண்பிக்கப்படுகிறது. மிகவும் தரமாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில், தமிழகத்தின் வரலாறு கற்காலத்தில் இருந்து கீழடி வரை சொல்லப்படுகிறது. தமிழகத்தின் முன்னணி அறிஞர்கள் இவற்றில் வரலாற்றை எடுத்து சொல்கிறார்கள். பதினைந்து நிமிடங்களில் சொல்லவேண்டியதை எல்லாம்  சுருக்கமாக, இன்றைய தொழில்நுட்பத்துடன் சொல்லப்படும் இந்தப் படத்தை முதலில் தவறவிடக் கூடாது.

அகழ்வின் மாதிரி.

அதன் பின்னர், பல வீடுகளாக, பல தலைப்புகளில் கீழடியில் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு  வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கிடைத்த பெரும் காளையின் எலும்புக்கூடுகளோடு நம் பயணம் தொடர்கிறது. இங்கே இவை காட்சிப்படுத்த பட்டிருக்கும் விதத்தை சொல்வது அவசியம். முதலில், கீழடியில் கிடைத்த பொருள் இருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பொருள் கிடைத்த விதமும், அதன் முக்கியத்துவமும் சிறு காணொளியின் வழியே காட்டப்படுகிறது. மேலும் அந்தப் பொருள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அது மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அது தொடர்பான மற்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக நம்மால் அந்தப் பொருள், அதன் முக்கியத்துவம், அது கீழடி நாகரீகத்தில் பெற்றிருந்த இடம் முதலியவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

கீழடியின் அகல் விளக்குகள்.

ஒவ்வொரு வீடும் வணிகம், வாழ்வும், வளமும், வேளாண்மை, நெய்தல் தொழில் என்று பல தலைப்புகளில் விரிகிறது. விரிவான ஒவ்வொரு பகுதியிலும் பொருட்கள் மேற்குறிப்பிட்டவாறு காட்சிப்படுத்தப்படுகின்றன. இன்னமும் சில இடங்களில் மெய்நிகர் உண்மை தொழில்நுட்பம் மூலமாக பொருட்களை பார்க்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இன்னமும் பல விதங்களிலும் பொருட்களை நாம் விரிவாக பார்க்க முடிகிறது.

கீழடி காளை.

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு தங்களது தோற்ற நோக்கத்தை கடத்துவதையே தங்களது முதல் நோக்கமாக கொண்டிருக்கின்றன. கீழடி அருங்காட்சியகம் அதை அருமையாக செய்கிறது. குறைந்தது இரண்டு, மூன்று மணி நேரம் இங்கு செலவிடுவது கட்டாயம். 

தமிழக, தமிழ் கலாச்சாரத்தை, வரலாற்றை முதன்மையாக அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் இது போன்ற வரலாற்று அருங்காட்சியகங்களின் பங்கு அதிகம். அதிலும் இன்றைய வாட்சப் வரலாறு ஆய்வாளர்களின் பிடியில் இருந்து இவர்களை வெளிக் கொணர்ந்து, உண்மையான வரலாற்றை நோக்கி செலுத்துவதற்கு கீழடி முக்கியமான பங்கு வகிக்கும்.

இறுதியாக, அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வரும் போது, 3000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு  நாகரீகத்தின் தொடர்ச்சியாக நாம் இன்னமும் இங்கே உலாவிக் கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்ளாமல் இருக்கவே முடியாது. 

நீங்கள் மதுரையில் இருந்தாலோ, மதுரைக்கு வேறு காரணங்களுக்காக வந்தாலும், கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.

பொன்னியின் செல்வன் - 2

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பது மிகவும் அரிதான விஷயம். பெரும்பாலான எதிர்பார்ப்புகளும், கதையும் முதல் பாகத்தில் வெளிப்பட்டுவிடும் என்பதால், இரண்டாம் பாக எதிர்பார்ப்புகள் சிறிது குறைவாகவே இருக்கும். மிகவும் பிரபலமான கதையாக இருந்தாலும், 'பொன்னியின் செல்வன்-2' முதலாம் பாகத்தைவிட நன்றாக இருப்பதை சற்று வியப்புடனே பார்க்க வேண்டும்.

முதலில், மூலக்கதை கல்கியுடையதாக இருந்தாலும், அதை இரண்டாம் பாகத்தில் பெருமளவில் மாற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்கள் கல்கியின் புனைவுகளை ஓரளவிற்கு பின்னிற்கு தள்ளி, உண்மையை இன்னமும் அருகில் கொண்டு வந்து காட்டுகிறது. இங்கே, கல்கி எழுதியது வரலாற்று புனைவு என்ற நினைவே மக்களிடம் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். கல்கி வரலாற்றை எழுதவில்லை என்பதை உணராதவர்களே அவரது வாசகர்களில் அதிகம். கல்கியின் பல கதாபாத்திரங்கள் புனைவானவர்களே. அதில் நந்தினி முதன்மையானவள். அது போக, சேந்தன் அமுதன், பூங்குழலி, திருமலை என பலரும் புனைவு கதாபாத்திரங்களே. எனவே, இவர்களின் பகுதிகளை மாற்றுவதன் அல்லது அகற்றுவதன் மூலம் எந்த வரலாற்று பிழையும் நிகழவில்லை என்பதையும் உணர வேண்டும். 

உடையார்குடி கல்வெட்டு  துரோகிகளால் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதை குறிக்கிறது. அவனை துரோகம் செய்து கொன்றவர்கள் பெயர்களை பட்டியலிடுகிறது. அதன் பின்னர், அவனது தம்பி அருண்மொழிக்கு பதிலாக, அவர்களது பெரியப்பா மகன் மதுராந்தகன் பட்டமேறுகிறான். அவனுடைய காலத்திற்கு பின், அருண்மொழி, ராஜ ராஜ சோழன் என்ற பெயரில் பட்டமேறுகிறான். இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் வரலாற்று உண்மை. இதை தவிர்த்து அனைத்தையும் புனைவாகவே கருதவேண்டும்.

இதை இங்கே சொல்வதன் காரணம், இரண்டாம் பாக கதை 'பொன்னியின் செல்வன்' புனைவில் இருந்து விலகி, வரலாற்றுக்கு அருகே பயணிக்கிறது. இது கல்கி வாசகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்த மறுகருத்தும் இல்லை. 

இரண்டாம் பாகம், ஆதித்தன்- நந்தினியின் இளவயது காதல் கதையுடன் ஆரம்பிக்கிறது. சற்று விரிவாக சொல்லப்படும் இந்தக் கதை, நந்தினிக்கு சோழ குலத்தின் மீதிருக்கும் கோபத்திற்கு சரியான காரணத்தை நிலைநிறுத்துகிறது. அதன் பின்னர், கதை முதல் பாகத்தின் முடிவில் இருந்து தொடர்கிறது. 

ஆனால், இரண்டாம் பாகம் முழுக்க, முழுக்க ஆதித்தன்-நந்தினி கதையாகவே விரிகிறது. குந்தவை, வந்தியத்தேவன் போன்ற கதாபாத்திரங்களும் பின்னே தள்ளப்பட்டுவிடுகிறார்கள். நந்தினி பிரமாண்டமாக, அவளது வஞ்சத்துடன் எழுந்து நிற்கிறாள். அவளுக்கும் ஆதித்தனுக்குமான காதலும், அதன் முடிவும் மட்டுமே கதையின் மையமாக இருக்கிறது.

அருண்மொழியின் கதாபாத்திரம் சற்று விரிவாக காட்டப்படுகிறது. ஜெயம் ரவி எளிதாக அந்த பாத்திரத்திற்குள் நுழைந்துவிடுகிறார். ஆனாலும் வானதியுடனான காதல் காட்சிகள் இல்லாதது (எனக்கு) பெரும் குறைதான். தஞ்சை கோட்டையில் 'யானைப்பாகா!' என்றழைப்பதன் மூலம் வானதி, அவர்களின் காதல் ததும்பிய முதல் சந்திப்பை நினைவிற்கு கொண்டு வருவது மட்டுமே மிஞ்சுகிறது.

சேந்தன் அமுதன்-பூங்குழலி என்னவானார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் குழப்பமான பின்கதையை மணி முற்றிலும் நிராகரித்துவிட்டதன் பயன் என்று நினைக்கிறேன். முதல் பாகத்திலும், இந்தப் பாகத்திலும் சில வசனங்கள் கல்கியின் கதையை நினைவூட்டுவது, மணி இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் இறுதி வரை இருந்திருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறது. ஒரு வேளை, இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. 

குந்தவை-வந்தியத்தேவனின் காதல் காட்சி முதல் பாதியின் உச்சமான காட்சி எனலாம். திரிஷா ஒரு யட்சியைப் போல வந்தியத்தேவனை தன்னுடைய வசப்படுத்துகிறாள். வந்தியத்தேவன் என்ன, எவனும் அத்தகைய மயக்கத்தில் இருந்து எழுவது முடியாத காரியம். 

ஆனால், நந்தினியும், ஆதித்தனும் சந்திக்கும் காட்சி குந்தவை-வந்தியத்தேவனின் சந்திப்பு வலையில் மீனை சிக்க வைப்பது என்றால், இவர்களின் சந்திப்பு, சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியுடன் விளையாடுவது போன்றது. பெரும்பாலும் close-upல் எழுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில், ஐஸ்வர்யாவும், விக்ரமும் சிறு வசனங்கள் மூலமாக ஒருவரையொருவர் மெதுவாக குத்திக் கிழிக்கிறார்கள். படத்தில் நந்தினியை ஐஸ்வர்யா இந்தக் காட்சியில் நம் முன்னே நிறுத்துகிறார். எதிர்பார்த்தது போலவே கரிகாலனின் மரணத்துடன் இந்தக் காட்சி முடிகிறது.

இதற்கு பின்னான 30 நிமிடங்கள் படத்தை சற்று இழுவையாக்குகின்றது என்பது உண்மைதான். இன்னமும் சீக்கிரமாக படத்தை முடித்திருக்கலாம். 

படத்தின் இயக்குனருக்கு நாம் கதையை பொறுத்தவரை முழுக்க சுதந்திரம் கொடுத்தாலும், படத்தின் இயக்கத்தில் இருக்கும் குறைகளுக்கு அவர் பொறுப்பேற்றுதான் ஆகவேண்டும். பெரிய குறை, பல இடங்களில் காட்சிகள் எந்தவித முடிவுமில்லாமல் சட்டென்று முடிந்து விடுகின்றது. உதாரணமாக, வந்தியத்தேவன் மீது நடக்கும் விசாரணை. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் அடுத்த காட்சிக்கு சென்று விடுகிறது. வானதி தஞ்சை கோட்டையில் நுழைவதும் அப்படித்தான். கல்கியின் காட்சியை எடுக்க நினைத்தாலும், மணியின் கதை மாற்றத்தில் இது ஒட்டாமல் நிற்கிறது. இன்னமும் பல இடங்களை சொல்லலாம். புத்த விகாரங்களை தாய்லாந்தில் எடுக்க நேர்த்திருப்பதால் இருக்கும் ஒருவிதமான ஒட்டாத நிலை. மதுராந்தகன் திடீரென மனம் மாறுவதும், குதிரை வீரனாக திடீரென்று தோன்றுவதும் (கல்கியும் இப்படித்தான் எழுதியிருப்பார் என்றாலும்...) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கதையை வாசிக்காதவர்களுக்கு இந்தக் குறைகள் தெரியப்போவதில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், படத்தின் வேகமான ஓட்டம் இவற்றை எல்லாம் தாண்டி படத்தை பார்க்க வைத்து விடுகிறது. வெளியில் வந்து நிதானமாக யோசித்தாலே, இதையெல்லாம் சிந்திக்க வேண்டும். 

படத்தின் மிகப்பெரும் பலம் ரகுமானின் இசை. பல இடங்களிலும் பின்னணி இசை நம்மை கால யந்திரத்தில் ஏற்றிவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தினுள் ஒன்றுவதற்கு அதனுடன் இயைந்து வரும் இசை முக்கிய காரணம். நான் எதிர்பார்த்த இடத்தில் இல்லை என்றாலும், 'இளையோர் சூடார்' மிகவும் அருமையான இசைக் கோர்வையாக இருக்கிறது.

முதலில் சொன்னது போல, குறைகளைத் தாண்டி, இப்படியான கதையை திரையில் கொண்டு வந்து காட்டியதில் மணி இன்னொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.   

வல்லம் மற்றும் திருக்கழுக்குன்றம் குடைவரைகள்.

வல்லம் குகைகள் சென்னைக்கு அருகில் இருப்பதால் அதை பார்க்காமலேயே வைத்திருந்தேன். இன்னமும் சில பல்லவ குடைவரைகள் பார்க்காமல் இருந்தாலும், இதை எப்போது வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஒரு வழியாக, இந்த வாரம் வல்லம் குகைகளையும், அத்துடன் திருக்கழுக்குன்றம் குடைவரையையும் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன். ஜெயஸ்ரீயும் சேர்ந்து கொள்ளவே இன்று காலை கிளம்பினோம்.

மகாபலிபுரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ஒரு ராஜபாட்டை போட்டால், வழியில் சரியாக திருக்கழுக்குன்றம் மலையும், வல்லம் குன்றுகளும் வழியில் வந்துவிடும். எனவே இங்கும் குடைவரை கோயில்கள் இருப்பதில் ஆச்சர்யமில்லை. 

முதலில் வல்லம். வல்லம் குகைகளை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்தது. செங்கல்பட்டு அருகில் இருக்கும் ஆலப்பாக்கத்தை தேடினால், சென்னையில் இருக்கும் ஆலப்பாக்கம் வருகிறது. ஒருவழியாக அதைக் கண்டு பிடித்து செல்ல ஆரம்பித்தோம். 

செங்கல்பட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆலப்பாக்கம் என்ற இடத்தின் அருகில் வல்லம் இருக்கிறது. மிகச்சிறிய கிராமமான இதை கண்மூடி திறப்பதற்குள் தாண்டிவிடுவது சாத்தியம். நாங்களும் அப்படி தாண்டி, மீண்டும் வந்த வழியிலேயே திரும்பி வல்லம் செல்லும் சிறிய தெருவிற்குள் நுழைந்தோம். தெருவின் முனையில் ஒரு சிறிய வழிகாட்டியும் இருக்கிறது.

வல்லம் குன்றில் மூன்று குடைவரைகள் இருக்கின்றன. மாலை மட்டுமே அவை திறந்திருந்தாலும். இரண்டிலும் கம்பி கதவுகள் மட்டுமே போடப்பட்டிருப்பதால், வெளியிலிருந்தே நன்றாக பார்க்க முடிகிறது. இருந்தாலும், கோயிலின் செல்லப்பா குருக்கள்(+91 9080589035) வெளியில் சென்றிருந்ததால் வரமுடியவில்லை என்று தெரிவித்தார். அவருக்கு முதலிலேயே போனில் பேசிவிட்டு சென்றால், திறந்து வைத்திருப்பார்.   

 சிறிய குன்றின் மீதேறினால், வலப்பக்கம் முதலில் இருக்கும் சிறிய குடவரை வருகிறது. இதில் ஒரு பக்கம் அமைந்துள்ள கொற்றவையின் சிற்பம் மிகவும் அழகாக இருக்கிறது.

அங்கிருந்து சிறிது மேலேறினால், இரண்டாவது குடைவரை வருகிறது. அதில் முன்பகுதி முழுவதும் இப்போதைய கட்டுமானங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதனை அதன் உண்மையான வடிவில் பார்க்கவியலாது. வசந்தீஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த குடைவரையின் ஒரு பக்கம் ஜேஷ்டா தேவியின் சிலை புடைப்பு சிற்பமாக இருக்கிறது. தவ்வை என்ற தமிழ் தெய்வமான இவள், மூதேவி, அலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். பல்லவர் காலத்தில் இவளது வழிபாடு பரவலாக இருந்திருக்கிறது. எனக்கு அவளை அமைத்திருந்த விதமே, fertility goddess என்று சொல்ல கூடிய குழந்தைப்பேற்றை வழங்கக்கூடிய பெண் தெய்வங்களின் வடிவமாக தெரிந்தது. இதே போன்ற வடிவங்கள் உலகம் முழுவதும் ஒன்று போல இருப்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.


மற்றொரு பக்கம் விநாயகர் புடைப்பு சிற்பமாக இருக்கிறார். மகேந்திரவர்மன் காலத்தை சேர்ந்த இந்தக் குடவரை முழுவதும் தற்காலத்திய கட்டுமானங்களால் மூடப்பட்டுள்ளது. எனவே மகேந்திரவர்மனின் தூண்களையும் சிற்பங்களையும் பார்ப்பது சற்று சிரமமாகவே இருக்கிறது. என்றாலும் அதன் இருபக்கமும் இருக்கும் காவலர்களையும், கருவறையையும் அப்படியே வைத்திருப்பதால், அவற்றை ரசிக்கலாம். 

ஆனால் இங்கு பார்க்கவேண்டிய ஒன்று என்றால், அழகிய பல்லவ தமிழ் வரிவடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் சில வரி கல்வெட்டுகள்தான். ஒன்று 'லலிதாங்குரன்' என்ற மகேந்திரவர்மனின் பட்டப்பெயரையும், இன்னொன்றில் சத்துருமல்லன், குணபரன் என்ற பட்டப்பெயர்களையும் சொல்கிறது. 

மேலும் குடைவரைகளை எடுப்பித்த கந்தசேனன் என்பவரின் பெயரையும் பதிவு செய்கிறது. பல்லவ வரிவடிவங்களின் அழகை ரசிக்க மட்டுமே முடியும். விவரிக்க முடியாது. இன்றும் தமிழ் இப்படி எழுதப்படுமானால், தமிழின் இனிமையோடு, அழகும் பல மடங்கு அதிகரித்துவிடும். இவை மகேந்திரவர்மனின் வரிவடிவங்கள். ராஜசிம்மனின் காலத்தில்  இன்னமும் பூக்களை கோர்த்தது போல எழுதப்படும் வரிவடிவங்களே பல்லவ கிரந்தத்தின் உச்சியாகும்.






இதற்கு நேர் கீழ் இருக்கும் குடைவரையின் முன் தியான மண்டபம் எழுப்பப்பட்டு, மறைவாக இருந்ததால், எங்களால் பார்க்க முடியவில்லை. எனவே அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சென்றோம்.

550 செங்குத்தான படிகளை ஏறுவது மிகவும் சிரமமே. இருந்தாலும், மெதுவாக ஏறிவிட்டோம். அங்கிருக்கும் வேதகிரீஸ்வரர் கோவிலை சென்றடைந்தோம். அங்கே இருந்த சோமாஸ்கந்தர் சிலை, இதுவும் பல்லவர் கால கோவிலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது. இருந்தாலும், வேறு எந்த விதத்திலும் அதை தெரிந்து கொள்ள முடியவில்லை. இறங்கும் வழியில் இருக்கும் ஒரு கால் மண்டபம் நாங்கள் செல்வதற்குள் மூடப்பட்டுவிட்டதால், வெளியிலிருந்தே பார்த்துவிட்டு சென்னை திரும்பினோம்.  

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...