முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பது மிகவும் அரிதான விஷயம். பெரும்பாலான எதிர்பார்ப்புகளும், கதையும் முதல் பாகத்தில் வெளிப்பட்டுவிடும் என்பதால், இரண்டாம் பாக எதிர்பார்ப்புகள் சிறிது குறைவாகவே இருக்கும். மிகவும் பிரபலமான கதையாக இருந்தாலும், 'பொன்னியின் செல்வன்-2' முதலாம் பாகத்தைவிட நன்றாக இருப்பதை சற்று வியப்புடனே பார்க்க வேண்டும்.
முதலில், மூலக்கதை கல்கியுடையதாக இருந்தாலும், அதை இரண்டாம் பாகத்தில் பெருமளவில் மாற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்கள் கல்கியின் புனைவுகளை ஓரளவிற்கு பின்னிற்கு தள்ளி, உண்மையை இன்னமும் அருகில் கொண்டு வந்து காட்டுகிறது. இங்கே, கல்கி எழுதியது வரலாற்று புனைவு என்ற நினைவே மக்களிடம் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். கல்கி வரலாற்றை எழுதவில்லை என்பதை உணராதவர்களே அவரது வாசகர்களில் அதிகம். கல்கியின் பல கதாபாத்திரங்கள் புனைவானவர்களே. அதில் நந்தினி முதன்மையானவள். அது போக, சேந்தன் அமுதன், பூங்குழலி, திருமலை என பலரும் புனைவு கதாபாத்திரங்களே. எனவே, இவர்களின் பகுதிகளை மாற்றுவதன் அல்லது அகற்றுவதன் மூலம் எந்த வரலாற்று பிழையும் நிகழவில்லை என்பதையும் உணர வேண்டும்.
உடையார்குடி கல்வெட்டு துரோகிகளால் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதை குறிக்கிறது. அவனை துரோகம் செய்து கொன்றவர்கள் பெயர்களை பட்டியலிடுகிறது. அதன் பின்னர், அவனது தம்பி அருண்மொழிக்கு பதிலாக, அவர்களது பெரியப்பா மகன் மதுராந்தகன் பட்டமேறுகிறான். அவனுடைய காலத்திற்கு பின், அருண்மொழி, ராஜ ராஜ சோழன் என்ற பெயரில் பட்டமேறுகிறான். இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் வரலாற்று உண்மை. இதை தவிர்த்து அனைத்தையும் புனைவாகவே கருதவேண்டும்.
இதை இங்கே சொல்வதன் காரணம், இரண்டாம் பாக கதை 'பொன்னியின் செல்வன்' புனைவில் இருந்து விலகி, வரலாற்றுக்கு அருகே பயணிக்கிறது. இது கல்கி வாசகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்த மறுகருத்தும் இல்லை.
இரண்டாம் பாகம், ஆதித்தன்- நந்தினியின் இளவயது காதல் கதையுடன் ஆரம்பிக்கிறது. சற்று விரிவாக சொல்லப்படும் இந்தக் கதை, நந்தினிக்கு சோழ குலத்தின் மீதிருக்கும் கோபத்திற்கு சரியான காரணத்தை நிலைநிறுத்துகிறது. அதன் பின்னர், கதை முதல் பாகத்தின் முடிவில் இருந்து தொடர்கிறது.
ஆனால், இரண்டாம் பாகம் முழுக்க, முழுக்க ஆதித்தன்-நந்தினி கதையாகவே விரிகிறது. குந்தவை, வந்தியத்தேவன் போன்ற கதாபாத்திரங்களும் பின்னே தள்ளப்பட்டுவிடுகிறார்கள். நந்தினி பிரமாண்டமாக, அவளது வஞ்சத்துடன் எழுந்து நிற்கிறாள். அவளுக்கும் ஆதித்தனுக்குமான காதலும், அதன் முடிவும் மட்டுமே கதையின் மையமாக இருக்கிறது.
அருண்மொழியின் கதாபாத்திரம் சற்று விரிவாக காட்டப்படுகிறது. ஜெயம் ரவி எளிதாக அந்த பாத்திரத்திற்குள் நுழைந்துவிடுகிறார். ஆனாலும் வானதியுடனான காதல் காட்சிகள் இல்லாதது (எனக்கு) பெரும் குறைதான். தஞ்சை கோட்டையில் 'யானைப்பாகா!' என்றழைப்பதன் மூலம் வானதி, அவர்களின் காதல் ததும்பிய முதல் சந்திப்பை நினைவிற்கு கொண்டு வருவது மட்டுமே மிஞ்சுகிறது.
சேந்தன் அமுதன்-பூங்குழலி என்னவானார்கள் என்றே தெரியவில்லை. அவர்களின் குழப்பமான பின்கதையை மணி முற்றிலும் நிராகரித்துவிட்டதன் பயன் என்று நினைக்கிறேன். முதல் பாகத்திலும், இந்தப் பாகத்திலும் சில வசனங்கள் கல்கியின் கதையை நினைவூட்டுவது, மணி இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் இறுதி வரை இருந்திருக்க வேண்டும் என்று தோன்ற வைக்கிறது. ஒரு வேளை, இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது.
குந்தவை-வந்தியத்தேவனின் காதல் காட்சி முதல் பாதியின் உச்சமான காட்சி எனலாம். திரிஷா ஒரு யட்சியைப் போல வந்தியத்தேவனை தன்னுடைய வசப்படுத்துகிறாள். வந்தியத்தேவன் என்ன, எவனும் அத்தகைய மயக்கத்தில் இருந்து எழுவது முடியாத காரியம்.
ஆனால், நந்தினியும், ஆதித்தனும் சந்திக்கும் காட்சி குந்தவை-வந்தியத்தேவனின் சந்திப்பு வலையில் மீனை சிக்க வைப்பது என்றால், இவர்களின் சந்திப்பு, சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியுடன் விளையாடுவது போன்றது. பெரும்பாலும் close-upல் எழுக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியில், ஐஸ்வர்யாவும், விக்ரமும் சிறு வசனங்கள் மூலமாக ஒருவரையொருவர் மெதுவாக குத்திக் கிழிக்கிறார்கள். படத்தில் நந்தினியை ஐஸ்வர்யா இந்தக் காட்சியில் நம் முன்னே நிறுத்துகிறார். எதிர்பார்த்தது போலவே கரிகாலனின் மரணத்துடன் இந்தக் காட்சி முடிகிறது.
இதற்கு பின்னான 30 நிமிடங்கள் படத்தை சற்று இழுவையாக்குகின்றது என்பது உண்மைதான். இன்னமும் சீக்கிரமாக படத்தை முடித்திருக்கலாம்.
படத்தின் இயக்குனருக்கு நாம் கதையை பொறுத்தவரை முழுக்க சுதந்திரம் கொடுத்தாலும், படத்தின் இயக்கத்தில் இருக்கும் குறைகளுக்கு அவர் பொறுப்பேற்றுதான் ஆகவேண்டும். பெரிய குறை, பல இடங்களில் காட்சிகள் எந்தவித முடிவுமில்லாமல் சட்டென்று முடிந்து விடுகின்றது. உதாரணமாக, வந்தியத்தேவன் மீது நடக்கும் விசாரணை. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் அடுத்த காட்சிக்கு சென்று விடுகிறது. வானதி தஞ்சை கோட்டையில் நுழைவதும் அப்படித்தான். கல்கியின் காட்சியை எடுக்க நினைத்தாலும், மணியின் கதை மாற்றத்தில் இது ஒட்டாமல் நிற்கிறது. இன்னமும் பல இடங்களை சொல்லலாம். புத்த விகாரங்களை தாய்லாந்தில் எடுக்க நேர்த்திருப்பதால் இருக்கும் ஒருவிதமான ஒட்டாத நிலை. மதுராந்தகன் திடீரென மனம் மாறுவதும், குதிரை வீரனாக திடீரென்று தோன்றுவதும் (கல்கியும் இப்படித்தான் எழுதியிருப்பார் என்றாலும்...) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் கதையை வாசிக்காதவர்களுக்கு இந்தக் குறைகள் தெரியப்போவதில்லை என்பதுதான் உண்மை.
ஆனால், படத்தின் வேகமான ஓட்டம் இவற்றை எல்லாம் தாண்டி படத்தை பார்க்க வைத்து விடுகிறது. வெளியில் வந்து நிதானமாக யோசித்தாலே, இதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.
படத்தின் மிகப்பெரும் பலம் ரகுமானின் இசை. பல இடங்களிலும் பின்னணி இசை நம்மை கால யந்திரத்தில் ஏற்றிவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தினுள் ஒன்றுவதற்கு அதனுடன் இயைந்து வரும் இசை முக்கிய காரணம். நான் எதிர்பார்த்த இடத்தில் இல்லை என்றாலும், 'இளையோர் சூடார்' மிகவும் அருமையான இசைக் கோர்வையாக இருக்கிறது.
முதலில் சொன்னது போல, குறைகளைத் தாண்டி, இப்படியான கதையை திரையில் கொண்டு வந்து காட்டியதில் மணி இன்னொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
1 comment:
குதவையை மீன் வலைக்கும் நந்தினியை சிலந்தி வலைக்கும்
ஒப்பிடும் உங்கள் கருத்து வெகு அருமை!
கல்கி சொர்க்கம் நரகம் என்பார்!
இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை மேலும் ஏற்றி விட்டீர்கள்!
திங்கள் அன்று பார்த்து விட்டு சொல்கிறேன்!
எப்படியோ யானைப் பாகா வார்தையாவது வந்து விட்டது உங்களுக்கு
ஒரு ஆறுதல்!
Post a Comment