உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின் அருமையான அருங்காட்சியகங்களை பார்க்கும் போது, நமது கலாச்சாரத்தையும், வரலாற்றையும் சொல்ல இது போன்ற ஒரு அருங்காட்சியகம் இல்லையே என்று நினைத்திருக்கிறேன். இந்தியாவிலும் மும்பை, டெல்லி, சென்னையில் இருக்கும் பெரிய அருங்காட்சியங்கங்களுக்கு சென்றிருக்கிறேன். அவற்றில் நுழைந்தவுடன் ஏற்படும் முதல் சிந்தனை எப்போது வெளியே செல்வது என்பதாகத்தான் இருக்கும். சரியான வெளிச்சம் இல்லாமல், காற்றோட்டம் இல்லாமல், அந்தக்காலத்து மின்விசிறிகள் சுழல இந்த அருங்காட்சியகங்கள், பெரும்பாலும் அவற்றின் பொருட்களை வைத்திருக்க உதவும் வெறும் சரக்கு அறைகளாகவே இருக்கும். அதனாலேயே மதுரையில் இருக்கும் கீழடி அருங்காட்சியகம் முக்கியத்துவம் பெறுகிறது.
கீழடி அகழ்வாய்வில் நிகழ்ந்த அரசியலை நாம் இங்கே பேசப் போவதில்லை. ஆனால் இத்தகைய ஒரு விரிவான நகர நாகரீகத்தை வெளிக்கொணர்வதில் கொண்டுவரப்பட்ட அரசியல் சிக்கல்கள், இன்று இங்கே நிலவும் பிரிவினை கோடுகளை மட்டுமே காட்டுகிறது. அதனாலேயே, அதையும் தாண்டி தன்னுடைய பொறுப்பில் கீழடியை எடுத்துக் கொண்டு விரிவாக அதை அகழ்வாய்ந்த தமிழக தொல்லியல் துறையை பாராட்ட வேண்டியிருக்கிறது.
ஆதிச்சநல்லூரில் முதலில் ஆய்வு செய்த அலெக்சாண்டர் ரீயாவின் ஆய்வுக்கட்டுரையை என்னுடைய 'கொற்கை' புத்தகத்திற்காக மொழிபெயர்த்த போது, ரீயா அதில் புகைப்படமாக கொடுத்திருக்கும் நூற்றுக்கணக்கான பொருட்கள் இன்று எங்கே இருக்கிறது என்று வியந்தேன். அவை இப்போது எங்கிருக்கிறது என்ற கேள்வியும், அவற்றை பொதுமக்கள் எளிதாக பார்க்க முடியாத நிலையும் நம்முடைய கலாச்சாரத்தை இருட்டடிப்பு செய்யும் என்பதுதான் உண்மை.
கீழடி அருங்காட்சியகம். |
எனவே அகழ்வாய்ந்து வெளிக்கொணரப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைப்பதிலும், அந்த அகழ்வாய்விற்கு தங்களது வரிப்பணம் மூலம் ஆதரவளித்த பொதுமக்களுக்கு அவற்றை கொண்டு சேர்ப்பதிலும் எப்போதும் நாம் ஆர்வம் கூட்டியதில்லை. இதனாலேயே அகழ்வாய்வின் முடிவிலேயே உடனடியாக அருங்காட்சியகம் அமைத்து, அதை மிகவும் சிறப்பாக அவற்றை மக்களிடம் சேர்ப்பித்ததுதான் இந்த அரசின் பெரும் சாதனையாக இருக்கும்.
அகழ்வில் கிடைத்த ரோமானிய நாணயங்கள். |
கீழடி அருங்காட்சியகம், இன்றைய கீழடி கிராமத்திலேயே இருக்கிறது. பெரிய பரப்பளவில் விரிவாக, நமது செட்டிநாட்டு வீடுகளின் பாணியில் முற்றம், நல்ல பெரிய சன்னல்கள், தரையில் ஆத்தங்குடி கற்கள், வண்ண கண்ணாடிகள், உட்கார பெரிய திண்ணைகள் என்று பல்வேறு பகுதிகளாக கீழடி அருங்காட்சியகம் விரிகிறது. இதன் வடிவமைப்பே, நமது கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட கட்டுமானத்தை கொண்டே, நமது வரலாற்றை சொல்லும் விதம் முதலாவதாக நம்மை கவர்கிறது.
நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன், பதினைந்து நிமிட வரலாற்று படம் ஒன்று காண்பிக்கப்படுகிறது. மிகவும் தரமாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில், தமிழகத்தின் வரலாறு கற்காலத்தில் இருந்து கீழடி வரை சொல்லப்படுகிறது. தமிழகத்தின் முன்னணி அறிஞர்கள் இவற்றில் வரலாற்றை எடுத்து சொல்கிறார்கள். பதினைந்து நிமிடங்களில் சொல்லவேண்டியதை எல்லாம் சுருக்கமாக, இன்றைய தொழில்நுட்பத்துடன் சொல்லப்படும் இந்தப் படத்தை முதலில் தவறவிடக் கூடாது.
அகழ்வின் மாதிரி. |
அதன் பின்னர், பல வீடுகளாக, பல தலைப்புகளில் கீழடியில் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு கிடைத்த பெரும் காளையின் எலும்புக்கூடுகளோடு நம் பயணம் தொடர்கிறது. இங்கே இவை காட்சிப்படுத்த பட்டிருக்கும் விதத்தை சொல்வது அவசியம். முதலில், கீழடியில் கிடைத்த பொருள் இருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பொருள் கிடைத்த விதமும், அதன் முக்கியத்துவமும் சிறு காணொளியின் வழியே காட்டப்படுகிறது. மேலும் அந்தப் பொருள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அது மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அது தொடர்பான மற்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக நம்மால் அந்தப் பொருள், அதன் முக்கியத்துவம், அது கீழடி நாகரீகத்தில் பெற்றிருந்த இடம் முதலியவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.
கீழடியின் அகல் விளக்குகள். |
ஒவ்வொரு வீடும் வணிகம், வாழ்வும், வளமும், வேளாண்மை, நெய்தல் தொழில் என்று பல தலைப்புகளில் விரிகிறது. விரிவான ஒவ்வொரு பகுதியிலும் பொருட்கள் மேற்குறிப்பிட்டவாறு காட்சிப்படுத்தப்படுகின்றன. இன்னமும் சில இடங்களில் மெய்நிகர் உண்மை தொழில்நுட்பம் மூலமாக பொருட்களை பார்க்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இன்னமும் பல விதங்களிலும் பொருட்களை நாம் விரிவாக பார்க்க முடிகிறது.
கீழடி காளை. |
உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்கள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு தங்களது தோற்ற நோக்கத்தை கடத்துவதையே தங்களது முதல் நோக்கமாக கொண்டிருக்கின்றன. கீழடி அருங்காட்சியகம் அதை அருமையாக செய்கிறது. குறைந்தது இரண்டு, மூன்று மணி நேரம் இங்கு செலவிடுவது கட்டாயம்.
தமிழக, தமிழ் கலாச்சாரத்தை, வரலாற்றை முதன்மையாக அடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் இது போன்ற வரலாற்று அருங்காட்சியகங்களின் பங்கு அதிகம். அதிலும் இன்றைய வாட்சப் வரலாறு ஆய்வாளர்களின் பிடியில் இருந்து இவர்களை வெளிக் கொணர்ந்து, உண்மையான வரலாற்றை நோக்கி செலுத்துவதற்கு கீழடி முக்கியமான பங்கு வகிக்கும்.
இறுதியாக, அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வரும் போது, 3000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு நாகரீகத்தின் தொடர்ச்சியாக நாம் இன்னமும் இங்கே உலாவிக் கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமிதம் கொள்ளாமல் இருக்கவே முடியாது.
நீங்கள் மதுரையில் இருந்தாலோ, மதுரைக்கு வேறு காரணங்களுக்காக வந்தாலும், கட்டாயம் செல்ல வேண்டிய இடம்.
No comments:
Post a Comment