குரியெடத்து தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம்

 ஆலங்கோட்டு  லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது.

இந்த வருட புத்தக காட்சியில் தெரிந்த முக்கிய விடயம்இதுதான். நிறைய மொழி பெயர்ப்புகள். குறிப்பாக 'விடியல்', 'சந்தியா', 'அடையாளம்' 'காலச்சுவடு' பதிப்பகங்களில் நிறையவே கிடைக்கிறது.

நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த 'பரிணயம்'  கேரள நம்பூதிரி வழக்கங்களை காட்டிய போது பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்த பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் அலச படுகிறது.

தாத்ரி குட்டி. போன நூற்றாண்டின் ஆரம்பத்தில் நம்பூதிரிகள் இடையே ஒரு கலகத்தை உண்டாக்குகிறாள். நம்பூதிரிகளின் பல சம்பிரதாயங்களை கேள்விக்கு உள்ளாக்கியத்தில் நம்பூதிரிகளிடையே ஒரு கொந்தளிப்பையும் அதன் விளைவாக சீர் திருத்தங்களையும் கொண்டு வர ஒரு மறைமுக காரநியாகின்றாள்.

நம்பூதிரிகள் கேரளாவின் முக்கிய மேல் சாதியாக இருந்தவர்கள். நில உடமை கை மாறாமல் இருக்கும் பொருட்டு வீட்டின் மூத்த மகன் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க பட்டார். ஏனைய மகன்கள் கீழ் சாதி நாயர் பெண்களிடமோ வேறு பெண்களிடமோ தொடர்பு வைத்துக்கொள்ள அனுமதிக்க பட்டனர். மூத்த மகன் பல முறை திருமணம் புரியவும் அனுமதி இருந்தது. இந்த நடைமுறை வீட்டின் நில புலன்கள், சொத்து முதலியவை வேறு யாரிடமும் செல்லாமல் இருக்க உதவியது.

இந்த வினோத நடைமுறையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் நம்பூதிரி பெண்கள். திருமணம் புரிவது என்பது ஒரு அரிதான விஷயமாகி வீட்டிற்க்குள் 'அந்தர்ஜனம்' என்ற பெயரில் பூட்டி வைக்க பட்டார்கள். கோஷா முறையில் வீட்டிற்க்கு வெளி ஆண்கள்/பெண்கள் எவருடனும் தொடர்பின்றி இருக்க வைக்க பட்டார்கள். 60-70 வயது கிழவர்களுடன் நடக்கும் திருமணங்கள் வெகு சாதாரண நிகழ்வுகள். இயற்கையாகவே இந்த சூழல் பெண்ணின் கன்னித்தன்மையை மையம் கொண்டதாய் இருந்தது. அதை காப்பதும் அதை ஒட்டிய சாதிய தூய்மை பற்றிய கருத்துக்களும் நிறைந்து இருந்தது.  

ஸ்மார்த்த விசாரம் என்பது இந்த விதிகளில் இருந்து விலகி கேட்டு போனதை கருதப்படும் பெண்களை விசாரணைக்கு உட்படுத்துவது. இதை அரசனின் உத்தரவுடன் அந்த பகுதி ஸ்மார்த்த பிராமணர்கள் நடத்துவதால் இது ஸ்மார்த்த விசாரமானது. இதன் ஒரே நோக்கம் விசாரணைக்கு வரும் பெண்ணை குற்றவாளியாக்கி சாதி பிரஷ்டம் செய்வது.

தாத்ரி குட்டி, ஒரு சிறு கிராமத்தில் உள்ள நம்பூதிரி குடும்பத்தில் பிறக்கிறாள். வயது வந்தவுடன் குறியேடத்து ராமன் நம்பூதிரியை மணக்கிறாள். ராமன் நம்பூதிரி அந்த குடும்பத்தின் இரண்டாவது மகன். மூத்த மகன் தீரா வியாதியச்தனாக இருக்கும் போது, அவரின் அனுமதியுடன் அடுத்த பிள்ளை திருமணம் செய்து கொள்ளலாம். அந்த முறையிலேயே ராமன் நம்பூதிரி திருமணம் செய்கிறார். ஆனால் திருமண இரவு அறைக்கு வருவது ராமன் நம்பூதிரியின் மூத்த சகோதரர்.

ஒரு கட்டத்தில், காமமோ அல்லது வெறும் வெறுப்போ தாத்ரி குட்டியை வேறு ஆண்களுடன் தொடர்பு ஏற்படுத்த வைக்கிறது. நம்பூதிரி பெண்கள் ஒரு தாசி (வேலைக்கார பெண்)யுடன் மட்டுமே வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும். தாத்ரி அது போல் சுற்றியுள்ள நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் செல்கிறாள். பல ஆண்களுடன் உறவு கொள்கிறாள். ஒவ்வொரு ஆணிடமும் ஒரு மறுக்க முடியாத அடையாளம் பெறுகிறாள். ஒருவரிடம் மோதிரம், ஒருவரின் மறைவிட மச்சம் என்று இந்த பட்டியல் நீள்கிறது. அவள் எப்போதும் ஒரு ஸ்மார்த்த விசாரத்திரற்க்கு  தயார் ஆகி கொண்டிருக்கிறாள்.

இறுதியாக, ராமன் நம்பூதிரி ஒரு அழகிய வேசை வந்திருப்பதை கேள்வியுற்று செல்கிறார். அன்றைய இரவின் முடிவில், அந்த பெண்ணின் முகத்தை பார்த்து அதிர்கிறார். கொச்சி மகாராஜாவிடம் செல்லும் குற்றச்சாட்டு, 'தாத்ரி குட்டியின் ஸ்மார்த்த விசாரத்தில் முடிகிறது.

தாத்ரி குட்டி இதற்க்கு தயாராகவே இருக்கிறாள். 1905ம் ஆண்டு. தாத்ரி தன்னுடன் இருந்த ஆண்களையும் விசாரிக்க கேட்கிறாள். அதுவரை இல்லாத நடைமுறை. குற்றத்தின் நிரூபனத்தை கொண்டு அதற்க்கு கொச்சி ராஜா ஒத்து கொள்கிறார். விசாரணை ஆரம்பம். ஒவ்வொரு பெயராக தாத்ரி சொல்கிறாள். ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு ஆதாரம். மறுக்க முடியாமல், விசாரணைக்கு வரும் ஆண்கள் தலை குனிகிறார்கள். கதகளி விற்பன்னர்கள், பிராமணர்கள், மன்னரின் ஊழியர்கள், கீழ் சாதி ஆண்கள் என்று பட்டியல் விரிகிறது. 64 ஆண்கள் பெயர்கள் வருகிறது. அனைவரும் சாதி விளக்கம் செய்ய படுகிறார்கள். 65வது பெயரை சொல்லாமல் தாத்ரி காட்டிய ஆதாரத்தைக் கண்டு பயந்து விசாரணை முடிந்ததாய் வரலாறு. அந்த 65வது ஆண் கொச்சி ராஜாவின் நெருங்கிய உறவினர் என்பதில் இருந்து அது கொச்சி ராஜாவேதான் என்பது வதந்திகள்.

வரலாற்றில் தன் கடமையை செய்துவிட்ட திருப்தியுடன் தாத்ரி குட்டி விசாரணை முடிவுடன் தொலைந்து போகிறாள். அனால் அவள் பற்ற வாய்த்த அந்த நெருப்பு நம்பூதிரி சமூகத்தை ஆட்டுகிறது. 1907இல் நம்பூதிரி பழக்க வழக்கங்கள் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் நம்பூதிரி யோகஷேம மகாசபா ஆரம்பிக்க படுகிறது. K.U நம்பூதிரிபாடு முதலிய இளைஞர்களால் தொடங்கப்படும் அந்த இயக்கம் நம்பூதிரிகளை 20ம் நூற்றாண்டுக்கு இழுத்து வருகிறது. இந்த சங்கத்தின் மற்றொரு முக்கிய நபர் பின்னலில் கேரளா முதல்வராய் இருந்த EMS நம்பூதிரிபாட்.

தாத்ரி குட்டியின் இந்த கலகம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கலாச்சார மாற்றத்தை கொண்டு வருகிறது. ஆலங்கோடு லீலா கிருஷ்ணன் அவள் ஏன் அந்த வழியை தேர்ந்தெடுத்தாள் என்று அவள் பிறந்த ஊர், புகுந்த ஊர் என எல்லா இடங்களுக்கும் சென்று அலசுகிறார். அவள் உடல் அவளுக்கு ஒரு ஆயுதமாகிறது. அதை அவள் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துகிறாள். அவள் எப்போது போதும் என்று நினைக்கிறாளோ அப்போது விசாரத்தை நடத்த வைக்கிறாள். ஆண் ஆதிக்கத்தின் உச்சியில் இருந்த ஒரு சமூகத்தை அதன் வழியிலேயே சென்று அதன் கொடூர முகத்தை திரை கிழிக்கிறாள். படிக்கும் பொழுது, எவ்வளவு தைரியமும், அந்த சமூகத்தின் மீது எவ்வளவு வெறுப்பும் இருந்தால் இதை செய்திருப்பாள் என்று தோன்றாமல் இல்லை. அந்த முகம் தெரியாத பெண், கேரளா பெண்ணியக்கதின் முதல் போராளியாக வரலாற்றில் குரலை பதிவு செய்கிறாள்.

புத்தகம் பெயர் - 'குரியெடத்து தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம்'
பதிப்பகம் - சந்தியா

மேலும் விவரங்கள். -
Kuriyedathu Thathriyude SmartaVicharam

No comments:

ராமானுஜர் - நாடகம்

இந்திரா பார்த்தசாரதியின் 'ராமானுஜர்'  வருடங்களுக்கு முன் வைணவத்தின் மீது இப்போதிருக்கும் பிரேமை வருவதற்கு முன் வாசித்தது. எனவே இப்ப...