எரியும் பனிக்காடு

சமீபத்தில் ஒரே இரவில் படித்து முடித்த புத்தகம். 400 பக்கங்கள். மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் தாண்டி ஏதோ ஒன்று புத்தகத்தின் பக்கங்களில் கட்டி போடுகின்றது

'Red Tea' என்ற புத்தகத்தை பற்றி கேள்விபட்டது பாலா 'பரதேசி' எடுக்க ஆரம்பித்த பின்தான். அதிலும் பெரிய ஆர்வம் வரவில்லை. பாலாவின் படங்களின் repetitiveness ரொம்பவே அலுப்பூட்ட ஆரம்பித்துவிட்டதால், கடைசியாக எடுத்த படங்கள் ஏதும் பார்க்கவும் இல்லை.
எனவே புத்தக காட்சியில் இந்த புத்தகத்தை பார்த்த போது சற்று யோசனையாக இருந்தது. இருந்தாலும் வாங்கினேன்.

வரலாறு பற்றிய நமது பிரக்ஞை பற்றி கேட்க வேண்டியதில்லை. ஒரு காவியத்தனமான  கற்பனையை வரலாறாக தெளிந்திருக்கும் சமூகம் இந்த உலகிலேயே நாமாகத்தான் இருக்க முடியும். அதனாலேயே நமக்கு நமது மக்களின் வாழ்கையை பற்றிய வரலாறுகள் பெரிதாக இல்லை.

1850களில் இருந்து தமிழகத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க பல நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் சென்ற தமிழர் வரலாறு என்று ஒன்றே இல்லை. இப்போதும், பிஜியிலும் மலாயாவிலும் தென் இலங்கை மலையக தமிழர்கள் பற்றியும் எந்த ஒரு பெரிய வரலாற்றுப் புரிதலும் நமக்கு இல்லை. வெகு சில நூல்களே இவர்களை பற்றி பேசுகின்றன.

'எரியும் பனிக்காடு' தமிழகத்திலேயே அடிமைகளாய் விற்கப்பட்ட தாழ்ந்த சாதி மக்களின் வரலாற்றை பேசுகிறது.

1925. திருநெல்வேலி அருகே ஒரு கிராமம். வள்ளி, கருப்பன் இருவரும் அன்றாடம் பிழைப்புக்கு வழியின்றி இருக்கும் நேரம். கருப்பன் கயத்தாறில் பார்க்கும் சங்கரபாண்டியன் மேஸ்த்ரி (கங்காணி) மலை பிரதேசத்தில் வெள்ளைக்கார துரையிடம் வேலை  வாங்கி தருவதாக சொல்லி கூட்டிச் செல்கிறான்.

திருநெல்வேலியே பார்த்தறியாத இருவரும் ரயில் ஏறி வால்பாறை அருகே
உள்ள ஒரு தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றார்கள். இரண்டு அறை  கொண்ட  லைன் வீட்டில் மூன்று குடும்பங்கள். கழிப்பறை வசதி கிடையாது. தாங்க மாட்டாத குளிரில் எந்த வசதியும் இன்றி தங்க வைக்க படுகிறார்கள். அதுவரை தேனாய் பேசி வந்த மேஸ்த்ரி அங்கு வந்ததும் தன் சுயரூபம் காட்டுகிறான்.

தோட்டத்திற்கு வருவதற்கும் வாங்கிய முன் பணம், வந்தவுடன் வாங்கும் காளி செட்டியிடம் படும் சில்லறை கடன்கள் என்று அவர்கள் அங்கிருந்து  வெளியேறா வகையில் கட்டி போடப்படுகிறார்கள்.

 வந்த சில நாட்களிலேயே அங்கிருக்கும் நிலை தெரிந்தும் வெளியேற முடியாத நிலை. மலையில் இருந்து இறங்க முடியாத நிலையில் இருக்கும் பாதைகள்.   தப்பித்து ஓடினால் வெள்ளைக்கார போலீஸ் கிராமத்திற்கே வந்து திரும்ப பிடிக்கும். சட்டம் அப்படி.

அணாக்களுக்கும் பைசாவுக்குமாக வேலை செய்து ரூபாய்களில் இருக்கும் கடனை அடைக்க வேண்டும். வெள்ளை துரைகளின் சில்மிஷங்களை சகித்துக் கொண்டு ஒத்துழைத்தால் மட்டுமே பணம் சேர்க்க முடியும் என்ற நிலை. ஆங்கில ஆட்சியின் இந்த முகங்கள் எல்லாம் பேசப்படாதவை. கொழுந்து கிள்ளும் வேலை செய்யும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஒத்து போனால் மட்டுமே கணக்கு நேராகிறது.

மழைக்காலத்தில் வரும் மலேரியா காய்ச்சல் எடுத்து போகும் உயிர்கள், பிள்ளை பெறும் பெண்கள் மருத்துவ வசதி இன்றி சாவது ஒரு புறம். வார்டு பாய் மட்டுமே உள்ள மாட்டுத் தொழுவ ஆசுபத்திரி. போட்ட பணத்தை மட்டுமே எடுக்க வேலைக்கு விரட்டும் கங்காணி. இவர்களை எல்லாம் இந்த இடங்களில் வைப்பதன் மூலம் தனது மூலதனத்தை அதிகரிக்கும் பிரிட்டிஷ் முதலாளிகள்.

இந்திய உயிர்களை வெறும் 'expendable' மூல பொருட்களாய் வைத்துதான் லாபம் பார்க்க முடியும் என்று ஒரு சித்தாந்தமே கண்டறிந்த ஆங்கில முதலாளிகளுக்கு கண்காநியகவும், கூட்டி கொடுக்கும் மாமாக்களாகவும் இருந்து சொத்து சேர்க்கும் இந்திய குட்டி முதலாளிகள் என்று போகும் இந்த பாதையில் வெறும் எண்ணிக்கையாக மறைந்து போகும் உயிர்கள்.

இந்த வேலைக்கு வருவது எல்லாம் சொந்த கிராமங்களில் மேல் சாதியினரிடம் மிதிபடும் தாழ்ந்த சாதியினர். வெள்ளைத் துரை தனது தாழ் நிலையை மாற்றிவிடுவான், தானும் ஒரு மனிதனாக மதிக்க படுவோம் என்று வந்து ஏமாந்து போனவர்கள்.

கதையின் இறுதியில் வரும் ஒரு மருத்துவர், பி.எச்.டேனியல்  தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த ஒரு மருத்துவர், அங்கிருக்கும் நிலைமையை மாற்ற முயல்கிறார். டேனியல் 1940களில் கண்ட தனது அனுபவங்களையே இந்த கதையாக எழுதினார். சுதந்திரதிற்க்கு பிறகு நிலைமை சற்று மாறினாலும் இன்றும் மலை தோட்டங்கள் கடும் உடல் உழைப்பின் மூலதனத்திலேயே இருந்து வருகின்றன.

கதை பல தளங்களில் எந்த வித போதனைகள், மார்க்க சிந்தனைகள் இல்லாமல் நிதர்சன வாழ்க்கையின் ஊடே நம்மை சிந்திக்க வைக்கிறது. இன்றைய பொருளாதார நிலை என்ன என்று அதனையும் 1930களின் தேயிலை தோட்ட நிலையும் ஒப்பிட்டால் பெரிய வித்தியாசம் இல்லை. இன்றும் பஞ்சம் பிழைக்க அமெரிக்காவிற்கும். வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் நமது நிலையில் என்ன மாறுபாடு வந்து விட்டது?

முருகவேளின் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும் ஆங்காங்கே நெல்லை தமிழின் ஊடே செம்மொழி பேச்சுக்களை தவிர்த்து இருக்கலாம். அது தவிர நேரடி தமிழ் நாவல் படித்த உணர்வே இருக்கிறது.

நாவல் - எரியும் பனிக்காடு
பதிப்பகம் - விடியல்
   

No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...