அலைகளின் பாடல் - தரங்கம்பாடி - 2

ஒரு நல்ல உறக்கத்தின் பிறகு காலை 5.30க்கு விழிப்பு வந்தது. உடனே கிளம்பி தரங்கம்பாடியின் கடற்க்கரைக்கு சென்றேன்.
 
விடியலின் மாய வண்ணங்களில் தரங்கம்பாடி அலைகள் பாடல் பாடிக் கொண்டிருந்தன. சாயங்கால ஜனங்களின் கூச்சலில் கேட்காதிருந்த அந்த பாடல் அதிகாலையின் அமைதியில் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது.

அங்கே தேடித் தேடி சிப்பிகளை எடுத்துக் கொண்டிருந்த சில பெண்களுடன் எதற்காக அதை எடுக்கிறார்கள் என்று கேட்டேன். அந்த சிப்பிகள் எல்லாம் சுண்ணாம்பு காளவாய்களில் சுண்ணாம்பு செய்வதற்கு விற்று விடுவார்கலாம்.
 சற்று தூரத்தில் அன்றைய பாட்டிற்காக கடலுக்கு செல்லும் படகுகளும், இரவில் மீன் பிடித்து விட்டு திரும்பும் படகுகள் சிலவும் கடற்கரையை அழகாக்கி கொண்டிருந்தன.கரை எங்கும் நண்டுகள் ஓடிக் கொண்டிருந்தன.

இவை எல்லாவற்றையும் விட வானின் பல வண்ணங்களில் சூரியன் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். ஜொலிக்கும் கடல் நீரில் விழுந்த வண்ணங்களில் ஒரு நொடி உலக கவலைகள் எல்லாம் தள்ளிப்போய்விடும்.

விடிந்தபின் தரங்கம்பாடி கிராமத்தின் பெரிய தேநீர் கடையில் ஒரு தேநீர் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் சுற்றிவிட்டு மீண்டும் அறைக்கு வந்து சேர்ந்தேன்.
  தரங்கம்பாடி முழுதும் லூதரன் சர்ச் மற்றும் CSI சர்ச்களின் பள்ளி, ஆசுபத்திரி , சிறார் இல்லம், ஆசிரியர் பயிற்சி நிலையம் இருக்கின்றன. இவ்வளவு சின்ன கிராமத்தில் இத்தனை வசதிகள் இருப்பதே இந்த சர்ச்களின் ஆதாரமாக இருக்கிறது.

இந்த ஊரின் கடற்கரையில் இருக்கும் மாசிலா மணிநாதர் கோயில் சென்ற சுனாமியில் சிதைந்து போய் இருந்தது. இப்போது இந்த கோயில் சரி பண்ணப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த பட்டுள்ளது.

காலை ஆராதனை நடந்து கொண்டிருந்த லூதரன் சர்ச்சில் கொஞ்ச நேரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அடுத்து தரங்கம்பாடியின் டேனிஷ் கோட்டையான 'Dansborg' வந்தேன்.
.
டென்மார்க்கில் இருந்து இந்த ஊரை வாங்கியவுடன் தங்கள் வாணிகத்தை பாதுகாக்கும் பொருட்டும், அருகிலேயே இருந்த பிரிட்டிஷ், பிரெஞ்சுகாரர்களிடம் தங்களை காத்துக் கொள்ளவும் இந்த கோட்டை கட்டப் பட்டது. மிகப் பெரியதாக இல்லாவிட்டாலும், கடலில் இருந்து வரும் ஆபத்துகளை எதிர் கொள்ள உதவுவதாகவே இருந்தது.

இன்று பாதுகாக்கப் பட்ட சின்னமாக இருந்தாலும், ஓரளவிற்கு மட்டுமே நன்றாக பராமரிக்க படுகிறது. கோட்டையின் உள்ளேயே ஒரு சிறு அருங்காட்சியகம் உள்ளது. இந்த பகுதியில் நடந்த அகழ்வுகளில் கிடைத்த பொருள்கள், ரகுநாத நாயக்கருக்கும் டேனிஷ் மன்னருக்கும் நடந்த ஒப்பந்தத்தின் நகல் என்று சில அரிய பொருட்களும் உள்ளன.
 இங்கு தரங்கம்பாடி கோட்டையான 'Dansborg' இன் வரலாறும், இங்கு நடந்த வாணிகத்தின் சில குறிப்புகளும் உள்ளது. அதில் ஒன்று, டென்மார்க்குடன் வாணிகம் கொஞ்சம் சுணங்கிய போதெல்லாம், இந்த பகுதியில் இருந்த ஏழைகளை பிடித்து இன்றைய இந்தோனேசியாவில் அடிமைகளாய் விற்று இருக்கிறார்கள்.


இதை எதிர்த்த சீகன்பால்கு போன்ற லூதரன் பாதிரிகளுடன் கவர்னர் மோதிக் கொண்டிருந்தார். சீகன்பால்கு ஒரு ஆறு மாதம் சிறையிலும் இருந்திருக்கிறார். இதை எதிர்த்து இருக்க வேண்டிய தஞ்சாவூர் ராஜாவோ, அவரது படைகளோ இந்த பக்கத்தில் நடத்திய கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுமைகளால் ஓரளவிற்கு இந்த ஏழைகளே அடிமைகளாய் விற்க சம்மதித்திருப்பார்கள்.

இந்த கோட்டையின் வரலாறு இது போல் பல விஷயங்களுடன் இருக்கிறது. 1845இல் இந்த கோட்டை பிரிட்டிஷ் வசத்திற்கு வந்தது. இப்போது இந்த பழைய கோட்டை சென்ற காலங்களின் உச்சத்தின் நினைவுகள் மட்டுமே சுமந்து கொண்டு அலைகளின் பாடலை தினமும் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

More pictures here --> https://plus.google.com/photos/104749384557340720796/albums/5929983439663418849

1 comment:

John Simon C said...

என் மனதுக்கு மிகவும் பிடித்தமான இடம் ஜி! பகிர்வுக்கு மிக்க நன்றி!

Washington - Ron Chernow

Washington: A Life by Ron Chernow Thats two in a row - or almost in a row. After reading Chernow's 'Grant', wanted to follow ...