செஞ்சி கோட்டையும் திருமலையும் -2

குந்தவை ஜீனோலயா. குந்தவை பிராட்டியால் நிவந்தம் விடப்பட்டு திருமலையில் சமணர்களுக்காய் கட்டப்பட்ட கோயில். பல முறை செல்ல வேண்டியும் முடியாமல் இந்த முறை கட்டாயம் செல்வது என்று முடிவெடுத்தேன்.

திருவண்ணாமலையில் இருந்து போளூர் ரோட்டில் ஆரணி செல்லும் வழியில் ஒரு 10 கிலோ மீட்டர்கள் உள்ளாக திருமலை உள்ளது. போளூர் தாண்டியவுடன் வழி குறிக்கப்பட்டு சாலை உள் செல்கிறது. அந்த பாதையை சாலை என்று சொல்வது உயர்வு நவிற்சியே. ஒரு மண் பாதையின் ஊடே கொஞ்சம் சரளைக் கற்களை போட்டு வைத்திருக்கிறார்கள். அதன் வழியே சென்றால் திருமலை கிராமம் வருகிறது.

ஒரு சிறிய குன்றின் அடிவாரத்தில் சுற்றிலும் வயல்கள்,ஊரின் நடுவே ஒரு ஆல மரம் என தமிழ் சினிமா இலக்கணப்படி அமைந்த கிராமம். முதலில் கோயிலை கண்டறிய முடியாமல் நேராக சென்று விட்டோம்.

ஊரின்  வெளியே ஸ்ரீ அரிஹந்த்கிரி சமண மடம் உள்ளது. இந்த சமண மடம் இந்த பக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை நடத்தி வருகிறது. பள்ளியின் உள்ளேயே தங்கிப் படிக்கும் வசதியும் உள்ளது. அங்கிருந்த அலுவலகத்தில் விசாரித்த உடன், அந்த பள்ளியில் படிக்கும் மாணவனுடன் கோயில் சாவியை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் பல மதங்களையும் ஆதரித்தே வந்தனர். சென்ற நூற்றாண்டு வரை இடிபாடுகளாய் இருந்து இப்போது மறைந்து விட்ட சூடாமணி விகாரை அவர்களின் புத்த மத ஆதரவிற்க்கிற்கு ஒரு எடுத்துக் காட்டு. அது போன்றே சமணர்களையும் அவர்கள் ஆதரித்தே வந்துள்ளனர். அவ்வாறு நிவந்தம் தரப் பெற்று கட்டப்பட்ட கோயில் தான் குந்தவை ஜீனோலயா.


கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தட்டி போட்டு தரையில் முழுகும் நிலையில் இருக்கும் பாறைகளில் பொறிக்க பட்டுள்ள கல்வெட்டு நம் கண்ணில் படுகிறது. ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழ காலத்தை சேர்ந்த இந்த கல்வெட்டு இந்த மலையை 'வைகை திருமலை' என்று குறிப்பிடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த கல்வெட்டுகளில் குறிப்படப்படும் குந்தவை ராஜராஜ சோழனின் தமக்கை அல்லது ராஜேந்திர சோழனின் புதல்வியான குந்தவையாகவோ இருக்கலாம் என்று தெரிகிறது.
  கீழே இருக்கும் கோயில் 24ம் தீர்த்தங்கரரான மகாவீரருக்கு எடுக்கப் பட்டுள்ளது. மகாவீரர் சிலையும் அதன் பின்னால் உள்ள ஓவியங்களும் மிகவும் சிதிலம் அடைந்து உள்ளன.

கோயிலின் வெளியே செல்லும் சிறு படிக்கட்டுகளில் சென்றால் மலையின் உள்ள சமண குகைகளை அடைய முடிகிறது. மூன்று சிறு குகைகள். உள்ளே சோழர் கால சமண சிலைகள். தீர்தங்கரர்களும் யட்சிகளும் நிறைந்து இருக்கிறார்கள். மிகவும் குறுகிய இரு குகைளில் படம் எடுப்பது சிரமம். மூன்றாவது குகை பல அறைகளுடன் சமண பள்ளிகளும் படுக்கைகளுமாக இருக்கிறது.

இந்த குகைகளின் சிறப்பே இவற்றின் ஓவியங்கள். குகையின் மேல்புறத்தில் முழுவதும் தரை விரிப்புகளின் கோலத்தில் வித விதமான அலங்காரங்கள். சதுரங்கள் எல்லாம் ஒரே நேர்த்தியாக அந்த மேடு பள்ளமான கூரையில் எவ்வாறு சாத்தியமாயிற்று என்பது ஒரு ஆச்சர்யமே. சுற்று சுவர்களில் எல்லாம் நாயக்கர் கால ஓவியங்கள். இந்த குகைகள் எல்லாம் பூட்டி வைக்கப்பட்டு மடத்தாலும், ASIயாலும் நிர்வாகிக்கப்படுவதால் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கின்றது.

சற்று உள்ளே நீர் சுனை பல இடங்களில் இருக்கிறது. மழை நீர் தேங்கி இருப்பது போல் இருந்தாலும் வருடம் பூராவும் நீர் இருப்பதால் ஊற்று ஒன்றும் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

மதிய வெயிலின் உச்சம் இந்த குகைகளில் தெரியவில்லை. குன்றின் மேலே உள்ள நேமிநாதரின் கோயிலை விட்டு விட்டு திரும்பினோம்.

மதுரை அருகே உள்ள சமண கோயில்களை பற்றி கேள்விப்பட்டு இருந்தாலும், சிலவற்றிற்கு சென்றிருந்தாலும், தமிழகம் முழுதும் காணப்படும் இத்தகைய சமணப்பள்ளிகள் தமிழகம் ஒரு நேரத்தில் சமணர்களால் நிறைந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. 

செஞ்சி கோட்டையும் திருமலையும் - 1



ஒரு கல்யாணத்திற்காக திருவண்ணாமலை செல்ல முடிவானபோதே இந்த முறை திருமலை சென்று குந்தவை ஜீனோலயத்தை பார்த்து விடுவது என்று முடிவெடுத்தேன்.

அதற்க்கு முன் ஒரு முறை செஞ்சி கோட்டை சென்று விடுவது என்றும் முடிவெடுத்தோம். பல முறை திருவண்ணாமலை சென்றிருந்தாலும் செஞ்சி சென்றதில்லை. திருவண்ணமலையில் இருந்து செஞ்சி செல்லும் ரோடு மிக மோசமாக இருந்தது. 38 கிலோ மீட்டர்கள் என்றாலும் ஒரு மணி நேரம் எடுத்தது. ராஜா கோட்டை சென்றோம்.

வழக்கமாக எல்லா பாரம்பரிய இடங்களிலும் நிகழ்வதை போலவே இங்கும் சுவர்கள் எல்லாம் தங்கள் பெயரை பொறித்து வரலாற்றில் வாழ முயன்றிருகிறார்கள் நம் இளைஞர்கள்.

அதையும் மீறி கோட்டையும் விஸ்தாரம் பிரமிக்க வைத்தது. பல இடங்கள் வெறும் சிதிலங்களாக மட்டுமே இருக்கின்றன. அதற்க்கு காரணம் நம் அலட்சியமா அல்லது அவை சிதிலமாக்க பட்டவையா என்று ஒரு குறிப்பும் இல்லை.

மலை கோட்டையின் மேல் சிபி மட்டும் எங்கள் நண்பர்களுடன் ஏற நாங்கள் கீழே காற்று வாங்க அமர்ந்து விட்டோம்.

உட்புறம் இருக்கும் வேணு கோபால கோயில் வெறும் சிதிலமாக இருக்க ஒரு சிதைந்த சிற்பம் மட்டுமே உள்ளது. வெளியில் இருக்கும் ராமர் கோயில் சற்று பரவாயில்லாமல் இருக்கிறது.






அங்கே மதிய உணவருந்திவிட்டு, ராணி கோட்டையை பார்காமலே திரும்பி விட்டோம்.

காலடியில் ஆகாயம்


இந்த ஆண்டு புத்தக சந்தையை சென்ற சனிக்கிழமை சென்றிருந்தேன். காலச்சுவடு அரங்கில் புத்தகங்களை புரட்டி கொண்டிருந்த போது ஆனந்தின் கவிதை தொகுப்பான 'காலடியில் ஆகாயம்' புது பதிப்பு வந்ததை கண்டேன்.

1992இல் பள்ளி நாட்களில் மீரா, அப்துல் ரகுமான் என்று ஒரே கவிதை நூல்களாக படித்து கொண்டிருந்த நேரம். வார மலர் கவிதைகளை பின்பற்றி நானும் இளைஞர்களை புரட்சி பண்ண கவிதை மூலம் அழைத்து கொண்டிருந்த நேரம்.



மாதம் என் அப்பா கொடுக்கும் சிறு தொகையில் மதுரை சர்வோதயா புத்தக பண்ணையில் சென்று ஒன்று, இரண்டு புத்தகங்களை வாங்குவது வழக்கம். அப்போது ஒரு முறை சிறு எழுத்துகளில் விருட்சம் வெளியீடாக ஆனந்த் என்பவரின் 'காலடியில் ஆகாயம்' தொகுப்பை வாங்கினேன்.


முதல் வாசிப்பில் சிறிதும் புரியாது வார்த்தை ஜாலம் இன்றி சிறு கவிதைகளாக அது வரை நான் படித்து இருந்த கவிதைகளை எல்லாம் புரட்டி போட்டது.

கவிதை என்பதை அறைகூவலாகவும், விரக தாப முனகல்களாகவும் வாசித்து கொண்டிருந்த எனக்கு முற்றிலும் வேறு விதமான அனுபவமாக இருந்தது.

அப்துல் ரகுமான் மூலம் ஓரளவிற்கு உலக கவிஞர்களின் கவிதைகளை தமிழாக்கம் செய்து படித்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பெரும்பாலும் காதல் கவிதைகள்.

ஆனந்தின் கவிதைகள் முழுவதும் வாழ்வின் மன பதிவுகளாக, படிமங்களின் மூலம் மனதின் அதிர்வுகளின் எழுத்து வடிவமாக இருந்தது. முழுவதும் புது முறையான அனுபவமாக இருந்தது. பல இரவுகள் ஒவ்வொரு கவிதையும் படித்து அது ஏற்படுத்தும் அனுபவங்களை அசை போடுவது ஒரு தனி சுகமாகி போனது.

நான் அதிகமாக வாசித்திருந்த கவிதை புத்தகமானதாக ஆகி போனது. ஒவ்வொரு பக்கமும் அந்த கவிதைகள் பற்றிய என் கருத்துகளை எழுதி வைத்தேன்.

புது கவிதைகள் என்பது என்ன என்ற எனது மொத்த புரிதலையும் மாற்றி அமைத்த புத்தகம் இது. இதற்க்கு பின்னாலும் சில வருடங்கள் standard formatஇல் கவிதை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் தமிழின் சிற்றிதழ், புதுக்கவிதை உலகத்தை இந்த புத்தகம் அறிமுகப்படுத்தியது.

இதற்கு பின்னல் நான் கவிதை எழுதுவது என்பது முற்றிலும் மாறி போனது. ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட நின்றே போனது. கவிதை எழுதும் மனம் என்பதே அருகி போனது. எலிகளுக்கு பின்னால் ஓட ஆரம்பித்ததில் கவிதைகளை வாசித்து ரசிப்பது என்பது ஒரு luxury ஆனது.

ஆனால் இன்றும் இந்த புத்தகம் அறிமுகப் படுத்திய உலகம் மனதிற்கு அருகாமையில் இருக்கிறது.

இந்த புத்தக சந்தையில் ஒரு கவிதை புத்தகம் வாங்க நினைத்தீர்களானால் 'காலடியில் ஆகாயம்' முதலாவதாக இருக்கட்டும்.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...