செஞ்சி கோட்டையும் திருமலையும் -2

குந்தவை ஜீனோலயா. குந்தவை பிராட்டியால் நிவந்தம் விடப்பட்டு திருமலையில் சமணர்களுக்காய் கட்டப்பட்ட கோயில். பல முறை செல்ல வேண்டியும் முடியாமல் இந்த முறை கட்டாயம் செல்வது என்று முடிவெடுத்தேன்.

திருவண்ணாமலையில் இருந்து போளூர் ரோட்டில் ஆரணி செல்லும் வழியில் ஒரு 10 கிலோ மீட்டர்கள் உள்ளாக திருமலை உள்ளது. போளூர் தாண்டியவுடன் வழி குறிக்கப்பட்டு சாலை உள் செல்கிறது. அந்த பாதையை சாலை என்று சொல்வது உயர்வு நவிற்சியே. ஒரு மண் பாதையின் ஊடே கொஞ்சம் சரளைக் கற்களை போட்டு வைத்திருக்கிறார்கள். அதன் வழியே சென்றால் திருமலை கிராமம் வருகிறது.

ஒரு சிறிய குன்றின் அடிவாரத்தில் சுற்றிலும் வயல்கள்,ஊரின் நடுவே ஒரு ஆல மரம் என தமிழ் சினிமா இலக்கணப்படி அமைந்த கிராமம். முதலில் கோயிலை கண்டறிய முடியாமல் நேராக சென்று விட்டோம்.

ஊரின்  வெளியே ஸ்ரீ அரிஹந்த்கிரி சமண மடம் உள்ளது. இந்த சமண மடம் இந்த பக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை நடத்தி வருகிறது. பள்ளியின் உள்ளேயே தங்கிப் படிக்கும் வசதியும் உள்ளது. அங்கிருந்த அலுவலகத்தில் விசாரித்த உடன், அந்த பள்ளியில் படிக்கும் மாணவனுடன் கோயில் சாவியை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் பல மதங்களையும் ஆதரித்தே வந்தனர். சென்ற நூற்றாண்டு வரை இடிபாடுகளாய் இருந்து இப்போது மறைந்து விட்ட சூடாமணி விகாரை அவர்களின் புத்த மத ஆதரவிற்க்கிற்கு ஒரு எடுத்துக் காட்டு. அது போன்றே சமணர்களையும் அவர்கள் ஆதரித்தே வந்துள்ளனர். அவ்வாறு நிவந்தம் தரப் பெற்று கட்டப்பட்ட கோயில் தான் குந்தவை ஜீனோலயா.


கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தட்டி போட்டு தரையில் முழுகும் நிலையில் இருக்கும் பாறைகளில் பொறிக்க பட்டுள்ள கல்வெட்டு நம் கண்ணில் படுகிறது. ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழ காலத்தை சேர்ந்த இந்த கல்வெட்டு இந்த மலையை 'வைகை திருமலை' என்று குறிப்பிடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த கல்வெட்டுகளில் குறிப்படப்படும் குந்தவை ராஜராஜ சோழனின் தமக்கை அல்லது ராஜேந்திர சோழனின் புதல்வியான குந்தவையாகவோ இருக்கலாம் என்று தெரிகிறது.
  கீழே இருக்கும் கோயில் 24ம் தீர்த்தங்கரரான மகாவீரருக்கு எடுக்கப் பட்டுள்ளது. மகாவீரர் சிலையும் அதன் பின்னால் உள்ள ஓவியங்களும் மிகவும் சிதிலம் அடைந்து உள்ளன.

கோயிலின் வெளியே செல்லும் சிறு படிக்கட்டுகளில் சென்றால் மலையின் உள்ள சமண குகைகளை அடைய முடிகிறது. மூன்று சிறு குகைகள். உள்ளே சோழர் கால சமண சிலைகள். தீர்தங்கரர்களும் யட்சிகளும் நிறைந்து இருக்கிறார்கள். மிகவும் குறுகிய இரு குகைளில் படம் எடுப்பது சிரமம். மூன்றாவது குகை பல அறைகளுடன் சமண பள்ளிகளும் படுக்கைகளுமாக இருக்கிறது.

இந்த குகைகளின் சிறப்பே இவற்றின் ஓவியங்கள். குகையின் மேல்புறத்தில் முழுவதும் தரை விரிப்புகளின் கோலத்தில் வித விதமான அலங்காரங்கள். சதுரங்கள் எல்லாம் ஒரே நேர்த்தியாக அந்த மேடு பள்ளமான கூரையில் எவ்வாறு சாத்தியமாயிற்று என்பது ஒரு ஆச்சர்யமே. சுற்று சுவர்களில் எல்லாம் நாயக்கர் கால ஓவியங்கள். இந்த குகைகள் எல்லாம் பூட்டி வைக்கப்பட்டு மடத்தாலும், ASIயாலும் நிர்வாகிக்கப்படுவதால் ஓரளவிற்கு நன்றாகவே இருக்கின்றது.

சற்று உள்ளே நீர் சுனை பல இடங்களில் இருக்கிறது. மழை நீர் தேங்கி இருப்பது போல் இருந்தாலும் வருடம் பூராவும் நீர் இருப்பதால் ஊற்று ஒன்றும் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

மதிய வெயிலின் உச்சம் இந்த குகைகளில் தெரியவில்லை. குன்றின் மேலே உள்ள நேமிநாதரின் கோயிலை விட்டு விட்டு திரும்பினோம்.

மதுரை அருகே உள்ள சமண கோயில்களை பற்றி கேள்விப்பட்டு இருந்தாலும், சிலவற்றிற்கு சென்றிருந்தாலும், தமிழகம் முழுதும் காணப்படும் இத்தகைய சமணப்பள்ளிகள் தமிழகம் ஒரு நேரத்தில் சமணர்களால் நிறைந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. 

No comments:

The Girl with a smile and a Turkey shooter

The Q train runs from the 96th Avenue till the Coney Island . I was waiting for it in the 34th Street - Herald Square station. Four lines ...