செம்பருத்தி

தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கும் போது வெயில் நாளின் உச்சி மேகமாய் எங்கிருந்தோ ஒரு புத்தகம் சட்டென்று நெஞ்சின் ஒரு கிளையில் ஊஞ்சல் கட்டிக் கொள்ளும். வெறும் கதையாக மட்டும் இல்லாமல் மனதின் உறைந்திருந்த உணர்வுகளின் நாதமாய் இன்னமும் மிச்சமிருக்கும் சில மெல்லிய உணர்வுகளை தொட்டெலுப்பிவிட்டு செல்லும்.

'மோக முள்' அது போன்றதொரு கதை. அதை படித்த வேகத்தில் 'அம்மா வந்தாள்', 'உயிர் தேன்' என வரிசையாக தி.ஜாவை தேடி படித்ததுண்டு. ஆனால் 'மோக முள்'ளின் வலியை பின் வந்த எதுவும் கொடுக்கவில்லை. அதே நினைவோடுதான் 'செம்பருத்தி'யை ஆரம்பித்தேன்.

1930-40களின்  தஞ்சை மாவட்ட கிராமம் ஆனாலும் மனிதர்கள் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் அப்படியேதானே இருக்கிறார்கள். மூன்று சகோதரர்கள். கால ஓட்டத்தில் அவர்கள் வாழ்வின் மாற்றங்கள் என்றும் சொல்லலாம். ஒரு மனிதனின் வாழ்வின் காதல்களின் கதையாகவும் கொள்ளலாம். அனால் என்னை பொறுத்தவரை மனிதர்களின் வீழ்ச்சியும் எழுதலுமாகவே பார்க்க முடிந்தது.

சட்டநாதனின் 27, 42 மற்றும் 60 வயதினில் நடக்கும் நிகழ்வுகள் மூன்று பாகங்களாக விரிகிறது. சட்டநாதனின் கதையாக தெரிந்தாலும் குஞ்சம்மாள், புவனா மற்றும் பெரிய அண்ணி என மூன்று பெண்களும் மட்டுமே கதையின் ஆணி வேராக நடத்துகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள், அந்த எதிர்பார்ப்புகள் கொண்டு வரும் ஏமாற்றங்கள் மட்டுமே கதையாக இருக்கிறது. ஒரு விதத்தில் நம் எல்லோரின் கதையுமே அதுதானே. நம் வாழ்வே இந்த முரண்பாடுகளின் கூடாகத்தனே செல்கிறது.

முரண்பாடு என்பது வெறும் ஆசைக்கும் நிராசைக்கும் மட்டும் நிகழ்வதில்லை. மனதின் இச்சைகளுக்கும் சமூகத்தின் கட்டுகளுக்குமான முரண்பாடுகளும் நம்மை அலைக்களிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த போராட்டமே இன்றும் வாழ்வை வாழ வைக்கிறது.

'செம்பருத்தி' இந்த மன விகாரங்களையும் அவற்றுடன்னான போராட்டங்களையும் பேசுகிறது. எல்லோரும் கொஞ்சம் நல்லவர்களாகவும், கொஞ்சம் மன விகாரங்களுடனும் வலம் வருகின்றனர். வீட்டிருக்குல்லேயே இருப்பதாய் தோன்றும் பெண்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கிறார்கள்.

'மோக முள்'ளின் யமுனாவை போன்று மனதை உருக்கும் பெண் பாத்திரங்கள் பல படித்ததில்லை. 'செம்பருத்தி'யில் புவனா மனதை உருக்காவிடினும் ஒரு ஆதர்ச பெண்ணாக வலம் வருகிறாள். புவனாவை படிக்கும் போதெல்லாம் என் மனைவியை நினைவு படுத்தாமலில்லை. அதுவே நான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் என்றும் நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. புவனாவின் காதலே சட்டநாதனின் வாழ்க்கையாகிறது. 

"எது நடந்தாலும் பெருசா என்னமோ அவமானம், கௌரவ குறைச்சல் நடந்திட்டாப்பல  பாராட்டிக்கிட்டே உட்கார்ந்து இருக்காமெ, பெருந்தன்மையா மன்னிச்சிட்டு நம்ம பிரியம்தான் பெருசுன்னு போய்ட்டிருக்கணும். எது வந்தாலும் எங்களை பிரிக்க முடியாதுன்னு ஒட்டி தைச்சு போட்டாப்புல பிடிச்சுகிட்டு நிக்கணும். அது இல்லாட்டி ஒன்னும் சுகமில்லே."

கதையின் ஆரம்பத்தில் ஆண்டாள் சொல்லும் இந்த அறிவுரையே மொத்த கதையின் அடிநாதம். ஒரு விதத்தில் சட்டநாதனும் புவனாவும் அது போன்று வாழ முனைவதே கதை. இதன் இடையே குஞ்சம்மாளுடன் கொண்டிருந்த காதல் ஏற்படுத்தும் குழப்பங்களும் புவனாவும் சட்டமும் அதை எப்படி எதிர் கொள்கிறரர்கள் என்பதுவும் மனதை வருடும் விதமாய் செல்கிறது.

தி.ஜா பெண்களின் உலகை விவரிப்பதில் இணை இல்லாதவர். இன்றைய பெண்ணிய உலகை அதன் உள் நுணுக்கங்களுடன் புரிந்து எழுதுபவர் யாரும் இல்லை என்பதே தி.ஜாவின் நுண்ணிய அவதானிப்புகளை சொல்லிவிடும். 
பெண்கள் இல்லாத ஒரு உலகம் சித்தித்தாலும் அது வெறும் வறண்ட பாலைவனமாகவே இருக்கும் என்பதை நுணுக்கமாக உணர்துவதிலே இருக்கிறது தி.ஜாவின் எழுத்து.

இது எல்லாவற்றையும் தாண்டி மெல்லிய சிறகை வாழ்வை விவரணை செய்வதில் தி.ஜா மனதை தொட்டுவிடுகிறார். 

No comments:

Washington - Ron Chernow

Washington: A Life by Ron Chernow Thats two in a row - or almost in a row. After reading Chernow's 'Grant', wanted to follow ...