உயிர்த்தேன்

உயிர்த்தேன் உயிர்த்தேன் by T.Janakiraman
My rating: 3 of 5 stars

'உயிர்த்தேன்'. தி.ஜாவை படிப்பதற்கும் ஒரு நேரம் தேவைப்படுகிறது. சென்னை 4 நாட்களாக மழையின் வெள்ளத்தில் தத்தளித்த போது வீட்டில் மின்சாரம், கைபேசி எதுவும் இன்றி வெறும் மெழுகுவர்த்தி துணையுடனும், நிற்காமல் மழையை பார்த்து ஊழிக் கால மழை எல்லாம் நினைவில் வர இருந்த நாட்களில் ஒன்றில் ஒரு மெழுகுவர்த்தி துணையுடன் படிக்க ஆரம்பித்தேன்.

தி.ஜாவின் பலமே அவரது உரையாடல்கள்தான். இதுவும் அது போலவே உள்ளது. செங்கம்மாவின் கதையாகவே போகும் இந்த நாவல் தி.ஜாவின் சிறந்த நாவல்களில் ஒன்று அல்ல. நாவலின் கதாபாத்திரங்கள், குறிப்பாக செங்கம்மாவும் அனுசூயாவும் கொஞ்சமும் யதார்த்த தன்மை இல்லாமல் இருக்கிறது ஓரு காரணம். அது போலவே கதையின் பல நிகழ்வுகள் சற்று நாடகத்தன்மையுடன் இருப்பதுமே.

பூவராகன் பட்டணத்தில் இருந்து ஆறுகட்டி கிராமத்தில் பூர்வீக நிலங்களை பார்த்து கொள்ள வருகிறார். அவரின் கணக்க பிள்ளை கணேசன் மற்றும் அவரது மனைவி செங்கம்மா சமையல்காரியாக அவரின் வீட்டில் இருக்கின்றனர். ஆறுகட்டியில் பூவிற்கு முன்னர் மிராசாக இருந்த பழனி காரணம் தெரியாத வன்மம் பாராட்டுகிறான். என்ன நடக்கிறது என்பதே கதை.

தி.ஜா காட்டும் அந்த 60களின் உலகம் அதன் பல மாய்மாலங்களுடன் நம்மை மயக்குகிறது.அது ஒன்றே இந்த கதையை காப்பாற்றுகிறது எனலாம். அனுசூயா யார் அவளுக்கும் பூவிற்கும் எப்படி பழக்கம் போன்ற சிறு தகவல்கள் அங்கும் இங்குமாக இல்லாமல் இருப்பதால் அனுசூயாவே ஒரு ஆதர்ச பெண் கதாபாத்திரமாக கதையின் ஓட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியாக ஆகி விடுகிறாள்.

அந்த ஆதர்ச நிலையே கதையின் பலமும் பலவீனமும் எனலாம். அதுவே கதையுடன் ஒன்றமுடியாமல் செய்து விடுகிறது. ஆனாலும் தி.ஜாவின் சில உரையாடல்கள் புன்முறுவலை வரத்தான் செய்கின்றன.

"ரொம்ப ஜாக்ரதையாகதான் இருக்கிறேன். இந்த தேசத்திலேயே ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ' வயசு வந்த மகளா இருந்தா அதோட தனியா இருக்காதே'னு நீதி சாஸ்திரம் எழுதி வச்சிருக்கிற புண்ணிய தேசமாச்சே இது. ராவணன் சீதையைத் தூக்கிட்டு போறப்ப, சீதை ஒரு பக்க ஆபரணங்களெல்லாம் கழட்டி போட்டா, வானரங்க மத்தியில விழுந்தது அது. பின்னாலே, ராமனும் லக்ஷ்மணனும் வந்தப்ப, லக்ஷ்மணன் சொன்னனாம் 'எனக்கு காது கை தெரியாது, மூக்கு நகை தெரியாது, கை நகை தெரியாது, கால் கொலுசுதான் தெரியும்'னு, கற்புக்கனல்,அருள் வீசுது முகம் - அதை பார்க்கவே கூசினானாம் இவன். அவ்வளவு சுத்தாத்மா! ராமாயணம் எழுதின மகானா இந்த அசிங்கத்தை எழுதுவான்! பின்னால் வந்த நாட்டமைகாரன் எவனோ அப்படி சாமர்த்தியமா செருகியிருக்கிறான். ஆகா ஆகா எப்பேர்ப்பட்டவன், எப்பேர்ப்பட்டவன்னு எத்தனை ஆடுங்க தலையாடிக்கிட்டே வருது அன்னியெ பிடிச்சு! சீதைய அசோக வனத்தில இருந்து பல்லக்கிலே ஏத்திக்கிட்டு வரப்ப, 'எல்லோரும் பாக்கட்டும், திரையை விலக்குங்கடா'ன்னு ராமப் பிரபு உலகத்துக்கு அந்த அருளைப் பளிச்சுன்னு திறந்து காமிச்சான். லக்ஷ்மணன் கால் நகைதான் தெரியும்னு சொன்னானாம். அத்தனை அயோக்கியனா அவனைப் பண்ணனும்னு தோணிச்சே பின்னால வந்த நாட்டமைக்காரங்களுக்கு! எப்பேர்பட்ட புண்ணிய பூமி! என்ன பண்பாடு "ப்ராய்ட்" எல்லாம் தோத்து போகணும். நான் ஜாக்கிரதையாத்தான் இருக்கேன். பயப்படாதே" .....
"என்ன இத்தனை ஆவேசம் வந்தது உனக்கு? ராமாயணத்து மடியிலேயே கை போட்டுட்டியே!"
"நான் போடலே, நாமெல்லாம் கெட்டு போயிடப்படாதுன்னு கண்ணில விளக்கெண்ணையைப் போட்டுக்கிட்டு கவலைப்பட்டு புதுசு புதுசா சேர்க்கராங்களே , அவங்களை சொன்னேன் சிங்கு"


இதை படிக்கும் போது இப்போது உயிரோடு இருந்திருந்தால் தி.ஜா என்ன பாடு பட்டிருப்பார் என்று தோன்றாமல் இல்லை.


View all my reviews

No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...