அம்மாவின் வீடு - மீள் பதிவு

(2013) சில மாதங்களுக்கு முன் அம்மாவின் சிவகாசி வீடு விற்கப்பட்டது. அன்று காலை அம்மா பத்திர பதிவுக்கு சென்று விட்டு வந்தார். சிவகாசியுடன் இருந்த கடைசி தொடர்பும் விட்டது.

எனக்கு  முதல் நினைவு அந்த வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. என் தம்பி பிறந்த பொழுது என் அம்மா அங்கே இருந்தார். எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். இரவில் சரியாக தூங்காமல் இருப்பேன். அப்போது  என் மாம்பா (அம்மாவின் அப்பா) என்னை தூக்கி கொண்டு தெருமுக்கில் இருந்த குழாயடியில் உக்கார்ந்து இருப்பார். இரவின் நிசப்தம், ஆள் நடமாட்டம் இல்லாத தெற்கு ரத வீதி இன்றும் நினைவில் இருக்கிறது.

என் அம்மாவின் வீடு அந்த தெருவின் உள்ளே ஒரு சிறு சந்தில் இருந்தது. மொத்தம் ஒரு பத்து வீடுகள் இருக்கும். கடைசி வீட்டுக்கு முந்தைய வீடு என் அம்மாவின் வீடு. கடைசி வீடு அம்மாவின் சித்தப்பாவின் வீடு. என் அம்மாவின் பாட்டி வீடும் அதில்தான் இருந்தது. எல்லா விடுமுறைக்கும் அங்கு சென்று விடுவோம். நிறைய சந்தோஷமான நாட்கள். சில கஷ்டமான நாட்களின் நினைவுகளுடன் விற்கப்பட்டுவிட்டது.

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி தெற்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும். 
"ஆஹோய் அல்லாஹோய் 
ஆத்தாத்தா பெரியாத்தா 
அம்பது பிள்ளை பெத்தாத்தா 
உனக்கு நாலு 
எனக்கு நாலு போடாத்தா 
ஆஹோய் அல்லாஹோய் 
ஆத்தாத்தா பெரியாத்தா 
கறியும் சோறும் போடாத்தா "
என்று பாட்டுப் பாட போவதற்கு முன் கரிக்கட்டையையும், சுண்ணாம்புவையும் உரசி மேலெங்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்தியது அந்த வீட்டின் குளியலறையில்தான். 

பக்கத்து வீட்டு பரமேஸ்வரியக்காவின் பிள்ளைகளுடன் சிறு வயதில் இருந்து சிநேகிதம் கொண்டதும், இரவு பகலாய் தாயம், trade, பரமபதம் விளையாண்டதும் இந்த வீட்டில் இருந்த போதுதான். இரவு முழுவதும் விழித்து இருந்து சூரன் குத்து பார்த்தது, விழித்து இருப்பதற்காக விடிய விடிய தாயம் விளையாடுவது என்று பொழுது போகும். 

குமார் அண்ணாச்சியுடன் மாடியில் புரிந்தும் புரியாமலும் வானியலும், இந்து ஆன்மீகமுமாக ஒருவாறு கலந்து கட்டி எனது புத்தக தேடல்கள் ஆரம்பித்ததும் இங்கிருந்துதான்.

வீடு ஒரு பெரிய ஹாலும், மிகச் சிறிய சமையலறையும், இன்னொரு பெரிய குளியலறையும் மட்டுமே கொண்டது. வீட்டின் ஊடே படிக்கட்டுகள் வழியாக மாடியில் ஒரு பெரிய ஹால். சிறு மொட்டை மாடி, என்றுமே தண்ணி இல்லாத ஒரு சிறு தொட்டி, அந்த தொட்டியில் இருந்து பக்கத்துக்கு கழிப்பறைக்கு ஒரு குழாய். 
அந்த தொட்டியின் உள்ளே உட்கார்ந்து கொண்டு சாயங்கால சூரியனையும் ஓட்டு வீடுகளையும் பல நாட்கள் பார்த்து இருந்திருக்கிறேன். 

என் மாம்பா ஒரு பழைய காங்கிரஸ்காரர் ஆதலால் எப்போதும் கதர்தான் கட்டுவார். அதை வெளுப்பதற்கு ஒரு வண்ணான் வீடிற்கு வருவார். அந்த நாள் ஒரு ஓரத்தில் இருக்கும் அழுக்கு பெட்டி திறக்கப் படும். நானும் தம்பியும் குவிந்து கிடக்கும் ஆளுக்கு துணிகளில் விளையாடுவோம். 'சின்ன முதலாளி' என்று வண்ணான் கூப்பிடும்போது தலையில் கொஞ்சம் போதை ஏறி கிறுகிறுக்கும். தோட்டி சுந்தரம் குளியலறை வாசல் வழியாக வந்து சுத்தம் செய்துவிட்டு ஒரு அலுமினிய தூக்கில் என் மாம்மை தரும் பழைய சோற்றை வாங்கிக் கொண்டு போகும். 

சிவகாசி வீட்டில் ஒரு நாள் என்பது காலையில் என் மாம்பாவுடன் உடுப்பி ஹோட்டலுக்கு செல்லுவதில் தொடங்கும். தம்பி கேசரியும், நான் வேறு எதாவது பண்டமும் சாப்பிட்டுவிட்டு, அன்றைய செய்தி தாள்களை வாங்கிவிட்டு திரும்புவதில் ஆரம்பிக்கும். 'தினத்தந்தி' 'தினமலர்' என விற்பனையில் இருக்கும் அனைத்து செய்தி தாள்களும் வாங்குவார். வீட்டிற்க்கு வந்து காலை சாப்பாடு, குளியல் முடித்து விட்டால் பிறகு முழுவதும் ஆட்டம்தான். 10-11 மணி வாக்கில் மாம்பா வெள்ளை வேஷ்டி, வெள்ளை கதர் சட்டையுடன் வெளியே கிளம்புவார். 
கட்டு ஓட்டுவது, விளையாடுவது போன்று சில மணி நேரம் கழியும். மதிய சாப்பாடு. மாம்பா 2-3 மணி போல் வீடு திரும்புவார். சாப்பிட்டு, ஒரு மணி நேரம் தூங்குவார்.

திரும்பவும் 4 மணிவாக்கில் மாம்பா வெளியே கிளம்புவார். இந்த முறை நானும் என் தம்பியும் கூடவே கிளம்புவோம். 


புல் மார்கெட் வழியே நடந்து சிவன் கோயில் எதிரே இருந்த மூப்பனார் கடையில் ஒரு லைம் சோடா. அங்கிருந்து அப்படியே நடந்து பெரிய தேரடியில் இருக்கும் வேலாயுத நாடார் கடைக்கு பக்கத்தில் இருக்கும் 'பாண்டியன் ஐஸ் லேன்ட்'ல் ஒரு ஜூஸ். அப்புறம் வேலாயுத நாடார் கடையில் கொஞ்சம் தின்பண்டம். அங்கே இருக்கும் புத்தக கடையில் அன்று வந்து இருக்கும் எல்லா புத்தகங்களும் வாங்குவார். நானும் எதாவது காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவேன். 

அங்கிருந்து நானும் தம்பியும் வீடு திரும்பி விடுவோம். நீண்ட நாட்கள் என் மாம்பா என்ன வேலை செய்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. எந்நேரமும் கையில் ஒரு gold flake புகைந்து கொண்டிருக்கும். கேரளாவிற்கு 10 நாள், கர்நாடகாவுக்கு 10 நாள் என எங்காவது போய் கொண்டே இருப்பார். பல முறை போகும் வழியில் மதுரையில் என்னையும் கூட்டிக் கொள்வார்.

சாயங்கால வேளைகளில் பல நாட்கள் மின்சாரம் இருக்காது. வீட்டு வாசலில் ஒரு அரிக்கேன் விளக்குடன் உக்கார்ந்து பல கதைகள் பேசிக் கொண்டிருப்போம். இருட்டிலேயே சாப்பிட்டு விட்டு பல நாட்கள் தூங்கிவிடுவோம். மாம்பா சில இரவுகளில் அவரின் இள வயது கதைகளை சொல்ல கேட்டிருக்கிறேன். யார் உதவியும் இன்றி முன்னேறியவர். 

அந்த வீட்டின் மாடியில் இருக்கும் ஹாலில் நானும் தம்பியும் பல நாட்கள் ஒரு கயிறைக் கட்டி டென்னிஸ் விளையாடி இருக்கிறோம். அங்கே கட்டி வைக்க பட்டிருக்கும் சாக்கு பைகளில் இருக்கும் பல மாத புத்தகங்களில் சுஜாதாவையும், கல்கியையும் வாசித்துப் பழகி இருக்கிறேன்.

அங்கே இருந்த ஒரு அலமாரியில் என் அம்மா B.A படித்ததின் எச்சமாய் கிடைத்த புத்தகங்களில்தான் எலியட்டும், அந்தோணி ஹோபும் , டுமாஸ்சும் அறிமுகமானார்கள். அங்கிருந்த மணியனின் 'அமெரிக்க பயண நினைவுகள்'தான் மதுரையை தாண்டியும் ஒரு உலகம் உள்ளது என்று காட்டியது.

அம்மாவின் தாத்தாவின் திதியில் வீடியோ டெக் எடுத்து விடிய விடிய படம் பார்ப்பது. வீடு நிறைய அம்மாவின் அத்தைகளும், சித்திகளும், மாமாக்களும் அவர்களின் பிள்ளைகளுமாய் நிரம்பி வழியும் நாட்கள். மனோன்மணி அக்காவின் (என் அம்மாவின் அத்தை) உரத்த சிரிப்பும், இடைவிடாத நக்கலும், அம்மாவின் பதில்களுமாய் ஒரு சந்தோசமான உலகமாய் இருந்தது.

அம்மாவின் பாட்டி, ராசம்மாக்கா வீடு , இரண்டு வீடு தள்ளி இருக்கும். விறகடுப்பில் கருப்பட்டி காபி குடிக்கவே அங்கு சாயங்காலம் போவது, செம்பகவல்லி அக்கா ஏதாவது வேலை சொன்னால் ஓடுவது என பொழுது போகும்.

பழனி சென்ற போது மாரடைத்து என் மாம்பா இறந்து வந்த பொழுது அந்த வீட்டின் சந்தோசங்கள் எல்லாம் வடிந்தது. வீட்டின் நடுவே பிணமாய் பார்த்த அன்று வாழ்க்கையில் என்னை விழாது பிடிப்பார் என்று நினைத்திருந்தவர் போன துக்கம் தொண்டையில் நின்றது. 
என் வாழ்வின் மிகப் பெரும் வருத்தங்களுள் ஒன்று, அவர் நான் படித்து முடித்ததையோ , பின் வாழ்வின் பயணங்களையோ பார்க்கவில்லை என்பதே.

அந்த 12ம் வகுப்பு விடுமுறையும் அங்கேதான் கழிந்தது. கொஞ்சமும் சந்தோஷமில்லாத, என் மாம்மையின் தனிமையை மட்டுமே பார்த்த நாட்கள். அதன் பின் மாடி மட்டும் வாடகைக்கு விடப்பட்டு அந்த வீடு துண்டுகளாய் சிதைந்து போனது. 6 வருடங்களுக்கு முன் மாம்மையும் இறந்த பிறகு, மாமாவின் பிள்ளைகளுக்காய் விற்கப் பட்டு நினைவுகள் மட்டுமே மிச்சமாய், அந்த வீட்டின் உடனான கடைசி சரடும் விட்டுப் போனது.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...