நவீன தமிழ் கவிஞர்கள் - அனார்

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த ஒரு வருடமாக தமிழ் கவிதைகளை ஓரளவிற்கு தீவிரமாகவே வாசித்து வருகிறேன். இடையில் விட்ட பெரும் கால இடைவெளியினால் பல ஆண்டுகளாக இயங்கி வரும் கவிஞர்களின் அறிமுகம் இப்பொழுதே ஆகிறது. 

பெரும் பெயர் தாங்கிய பெருங்கவிஞர்களுக்கிடையே என்னை திரும்பவும் வாசிக்க - திரும்ப திருமப - வாசிக்க வைப்பவர்கள் இவர்கள். இந்த பட்டியல் முழுக்கவும் என்னுடைய சொந்த விருப்பத்தின் பட்டியலே. 

இதில் முன்னொரு காலத்தில் இருந்து இன்றும் என் இதயத்திற்கு அணுக்கமான கவிஞர்கள் - ஞான கூத்தன், கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், பசுவய்யா, ஆனந்த், தேவ தேவன், சுகுமாரன், சல்மா  மற்றும் பலரை எடுத்துக் கொள்ளவில்லை. விடுபட்ட ஏனையோரை நான் வாசிக்காமலிருக்கவே வாய்ப்பு அதிகம். 

இந்த பட்டியல் எப்படி பெரும்பாலும் பெண் கவிஞர்களாகவே இருக்கிறது என்பதற்கு எனது ஒரு தலை கருத்தான - பெண்கள் மட்டுமே நம் மனதின் காவலர்களாக இருக்கிறார்கள் - என்பது மட்டுமே காரணம். மற்றும் நவீன தமிழ் கவிதை உலகில் படிமங்களிலும், வார்த்தை சிக்கனத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள். 

அனார் 
 
இலங்கையை சேர்ந்த அனார் கவிதைகள் முழுவதும் புதிய சிந்தனைகள் மொழியின் வளத்துடனும் ஈழ கவிதைகளுக்கு ஒரு புது வடிவம் தருவதாகவும் இருக்கிறது. 

"கண்களில் இருந்து காதலைப் பொழிய செய்பவள்"
என்று சொல்லும் அதே நேரத்தில் 
"மலைகளை கட்டி இழுத்து வரும் சூனியக்காரி "
என்றும் அறிமுகம் செய்து கொள் கிறார் .

வார்த்தைகளின் படிமங்களில் பெண்ணின் மனதை, காதலை, காயங்களை விவரித்து செல்லும் அனார், வார்த்தைகளினால் மனதின் கவனத்தை ஈர்க்கிறார்.
"நீ எனக்கெழுதிய கடிதங்களில்
 அந்நியமான காலடி ஓசைகளும்
 பயங்கரமான நடுக்கங்களுமிருந்தன"
 போன்ற ரசிக்கும் வரிகளுடன் 

"மாதுளையின் கனிந்த சிவப்பு
ஊறிவிழும் நம் சொற்களை
முத்துக்களின் வரிசையாக
மாதுளை அரணமனைக்குள்ளே அடுக்குகிறோம்." (மகுடி)

போன்று எதிர்பாராத படிமங்களின் ஊடே புனைவாய் கவிதை கட்டமைக்க படுகிறது.

அனாரின் கவிதைகள் பெண்களின் மனம், காதல், ஏமாற்றம், நினைவுகள் என பெண்களின் உலகத்தை சுற்றியே கட்டமைக்க படுகிறது.

அனாரின் கவிதை கொடுக்கும் வாசிப்பனுபவம் ஒரு சிறு குழந்தையுடன் விளையாடுவது போன்றது. சிறு புதிர்களுடன் , எதிர்பாராத வார்த்தை படிமங்கள் என அவரின் பெண் குரல் மிகவும் வசீகரமானது.

"நினைவுப் பந்தலின் கீழ்
காட்டு மல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில்
தாழம்பூ மண்டபம் விரிகிறது."
அனாரின் கவிதைகளும் அந்த காட்டு மல்லிகை போன்றவையே..

அவசியமான கவிதை புத்தகங்கள்

2 comments:

anar said...

எனது கவிதை பற்றிய உங்கள் பார்வை மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க அன்பும் நன்றியும்.

அனார்
http://anarsrilanka.blogspot.com/

Muthu Prakash Ravindran said...

நீங்கள் இதை வாசித்தீர்கள் என்பதே சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி.

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...