நவீன தமிழ் கவிஞர்கள் - தேன்மொழி தாஸ் / அ.வெண்ணிலா

தேன்மொழி தாஸ் 

கவிதை, சிறுகதை, சினிமா, தொலைக்காட்சி  என பல தளங்களில் இயங்கி வரும் தேன்மொழி தாசின் கவிதைகள் பெரும்பாலும் துயரங்கள் நிறைந்தவை.

"நீ என் நினைவோடு இருப்பாய் அல்லது வேறு யாரின் நினைவிலும் கூட
எனக்காக வாழ்ந்தான் இவன் - என
எந்த மனிதனையும் யாராலும் காட்ட இயலாது
நான் என் நாய்க் குட்டிகளின் கண்களுக்குள் வசிப்பதில் நிறைவுருகிறேன்"

என நிராசைகளின் முழுமையாய் தன்னை காட்டிக் கொள்கிறார்.

"தனிமையிடம் கையளிக்கப்பட்ட  இவ்விரவு 
நிலவின் பின் மெல்ல நகர்கிறது"

என்னும் இவர் கவிதைகள் தனிமை, அவமானம், இறப்பு என பெரும்பாலும் துயரங்களை பற்றியதாய் இருந்தாலும் இவரின் அடர்த்தியான காதல் கவிதைகள் வாசிக்க இனிமையானவை.

"எனது அணைப்பின் கதகதப்பை 
நிலவினாலும் தரயியலாது என 
உணரும் நாளில் நீ 
வானத்தை 
நம் காதல் கடிதமென மடிப்பாய்"

போன்ற கவிதைகள் காதலின் வீச்சை வெகு எளிதாய் கடக்கிறது.

பெரும்பாலான கவிதைகள்  அவரது கனவுகளின் நீட்சிகளாகவே இருக்கின்றன. அக்கனவுகளை கொஞ்சமும் பிறழாமல் வார்த்தைகளால் வசப்படுத்துகிறார். இந்த அனாயாச வார்த்தை பிரயோகம் தேன் மொழி தாஸின் கவிதை மொழியாய் வசீகரிக்கிறது. அவரது வாழ்வின் பல நிகழ்வுகளையும் , துயரங்களையும் பதிவு செய்து கொண்டே போகிறார். அவரது கவிதைகளில் வந்து போகும் சூசன், லதா, மெசியா, ஜெசி ,காயா, அவரது மரித்து போன நாய் என ஒவ்வொருவரும் நம் வாழ்விலும் ஒரு சிறு இடத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

"அநேகமாய் இவ்வுலகில் இறந்த முதல் பட்டாம்பூச்சி
நிராசைகளின் ஆதித் தாயாக இருக்கக் கூடும்
பசும்புல் பாத‌த்தில் உரசும் போது
ஒரு பியானோ இசைக்கலைஞனைப் போல‌
தனிமையின் துயர் பாடல் ஒன்றை
உணர்வின் மொட்டுகளில் வழியவிடுகிறது
ஒட்டுண்ணித் தாவரங்களின் வேர்கள்
காட்டின் பேரமைதியை காதலிக்கின்றன‌"
 

அ. வெண்ணிலா   

அ. வெண்ணிலாவின் கவிதைகள் சமூகம் சார்ந்தவை. பெண் பார்வையில் சமூகம் என்பதும் பொருந்தும். பெரும்பாலும் அவர் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, குடும்ப சூழலில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உடல் மற்றும் மனரீதியான வன்முறைகள் என பலவற்றை பற்றியும் உரக்கவே குரல் கொடுத்து வருகிறார். 

அவர் கவிதைகளின் பாடுபொருளும் அவையே.  

"ஒவ்வொரு இரவுகள் முடிந்து
வீடு திரும்பும் வேளையில்
நான் இழந்தது
ஒன்றுமில்லையென
நிரூபிக்க வேண்டியிருப்பதும்
நிரூபணத்தை
நீ ஏற்றுக் கொள்வதும்
நம் வழக்கங்களாய் இருப்பதையே
'வாழ்தல்' என்கிறார்கள்."

ஒரு பெண்ணின் கோபக்குரலாய் இருப்பினும் , ஒரு உபதேச மொழி வராது கவித்துவமாக எழுத்துவதிலேயே அவரது கவி மொழி இருக்கிறது.

"சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...
நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன் "

பெரும்பாலும் ஆண்களை நேரடியாக விளித்து தன அதிருப்தியை வெளிப்படுத்துபவைகளாகவே இக்கவிதைகள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தின் கட்டமைப்பில் பெண்கள் உரிமைகள் எப்படி பறிக்க படுகின்றன. தங்களை எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் எப்படி திருமணம் போன்ற சடங்குகளால் திணிக்க படுகின்றது என்று பலவற்றையும் இவரது கவிதைகள் பேசி செல்கின்றன.

"களைத்துச் சலித்து
உள் நுழைகிறேன்.
ஆடை மாற்றுகையில்
கழன்று விழுகின்றன
உடல் முழுவதும் பதிந்திருந்த
பார்வைகள்
தீண்டல்கள்
தொடுதல்கள்
உரசல்கள்
உதறி எடுத்து
வேற்றாடை மாற்றித்
திரும்புகையில்
அத்தனையையும்
இரவு – தன்
கைகளில்
சேகரித்துக் கொண்டிருந்தது."

 போன்ற சலிப்புடன் வலி மிகுந்த வார்த்தைகளே அவரின் கவிதைகள்.

புத்தகங்கள் 

1. நீரில் அலையும் முகம் - அ. வெண்ணிலா 
5. நிராசைகளின் ஆதித்தாய் - தேன்மொழி தாஸ் 

No comments:

Mayaanadhi (2017)

There is a moment in the movie which comes a little later into the film. Aparna (Aishwarya Lekshmi) and Maathan (Tovino Thomas) had sex aft...